6.25.2009

A9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )

பல வருட யுத்த நிறுத்தத்திற்கு பிறகு யாழ்ப்பாணத்தில் மீண்டும் யுத்தம் வெடித்து A9வீதி உட்படஅனைத்து தரை மார்க்கமும் மூடப்பட்ட பிறகு ராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டராணுவக் கப்பல் பயண அனுபவங்களை பதிகிறேன்.

ஒரு யுத்தகள அனுபவம்!
சுற்றிவர பல்குரல் பீரங்கிகள் சீறிப்பாயும் மின்சாரம் இல்லாத கொடுமையான இரவுகள்.
வீட்டுக்குள் அடங்கியே கிடக்கவேண்டிய பகல் பொழுதுகள் .
அரிதாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கவே படை எடுக்கும் ஒட்டுமொத்த யாழ் மக்கள்.

நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்று யாழ்ப்பாணத்துக்கு வெளியில் இருக்கும் வீட்டுக்கு சொல்வதற்கு, எப்போதாவது அரிதாக கிடைக்கும் தொலைபேசி இணைப்பு.

ஆரம்ப கட்டத்தில் பண்பலைகள் கூட முடக்கப் பட்ட நிலையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஒரு சமூகமே தனித்து விடப் பட்ட உணர்வு.


இத்தனை கொடுமையான நிகழ்வுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் வாழப்பழகியது தமிழ் இனம். ஆரம்பத்தில் ஒரு நாளில் ரெண்டு மணிநேரமே வெளியில் செல்ல அனுமதித்த இராணுவம் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப் படும் நேரத்தை பல மணிநேரமாக்கியது.

ஊரடங்கு தளர்த்தப் பட்டு அதிக பகல் பொழுதுகளை வெளியில் கழிக்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், அதிர்கின்ற பல்குரல் பீரங்கிகளின் சந்தங்களின் நடுவிலே வீட்டுக்கு வெளியில் திரிவது எப்படி?

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியே செல்வதற்கான அத்தனை பாதைகளும் மூடப் பட்ட நிலையில், வதந்திகள் முளைக்கத் தொடங்கின...

செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் வருவதாகவும்,அல்லது ஏதோ ஒரு வெளிநாட்டுக் கப்பல் வருவதாகவும்,இந்தக் கப்பல் மூலம் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் , யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய யாழ்ப்பான மக்களும் பயணிக்கலாம் என்றும் முளைக்கத் தொடங்கிய இந்த வதந்திகள் இடையிடையே சின்ன சின்ன சந்தோசங்களை தரத்தான் செய்தன.

`` எல்லோரையும் ஏற்றிச் செல்ல கப்பல் வருமா?``
என்ற பாடல் இந்தியாவில் இருக்கும் அகதிகளுக்கு மட்டுமல்ல , எங்களுக்கும் பொருத்தமாகவே இருந்தது.
சொந்த நாட்டில் இருந்தாலும் நாங்களும் அகதிதானே ?


பல வாரங்கள் இப்படியே கழிந்து போனது!


திடீரென ஒரு நாள் யாழ் நகரமே பரபரப்பானது....

காங்கேசன் துறை துறைமுகத்தில் இருந்து திருகோணமலைக்கு ஒரு கப்பல் பயணிக்க இருப்பதாகவும் அதிலே பயணிக்க விரும்பும் நபர்கள் உடனடியாக குறிப்பிடப்பட்ட ஒரு ராணுவ தளத்திற்கு வரும் படியும் கேட்கப் பட்ட
யாழ் எப் . எம் எனும் அரச வானொலியின் அறிவுப்பே அந்த பரபரப்புக்கு காரணம்.

பயங்கரமான யுத்தம் நடைபெறும் நிலைமையில் ராணுவக் கப்பலில் பயணம் செய்வதா என்ற பயம் மக்களுக்கு கொஞ்சம் இருந்தாலும், அந்த நிலைமையில் நிறைய மக்களுக்கு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய தேவை இருந்ததை அந்தக் கப்பலில் பயணிப்பதற்காக கூடிய ஐந்து ஆயிரத்திற்கும் மேட்பட்ட மக்கள் தொகை காண்பித்தது.

பல ஆயிரம் மக்கள் கூடி விட்டாலும் குறிப்பிட்ட அளவு மக்களே பயணிக்கலாம் என்ற நிலையில் , எப்படியாவது பயணித்தே ஆக வேண்டும் என்ற அவசரத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் நசுபடத் தொடங்கினார்கள்.

பெண்கள் , குழந்தைகளோடு பெண்கள், வயதானவர்கள் என்று வித்தியாசம் இல்லாமல் மக்கள் நசுபடத் தொடங்கினார்கள். ஆயுதம் தாங்கிய ராணுவத்தாலேயே கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு தமிழின நெரிசல் நிலவியது .

சொந்த நாட்டினுள்ளேயே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க ஒரு இனமே நெரிசலில் நசிபட்டு கொண்டிருந்தது. தமிழ் தாய் அதிகம் வலி உணர்ந்த நாட்களில் அதுவும் ஒன்றாக பதிவானது.

இறுதியாய் பல்வேறு நெருக்குதல்களுக்கு பிறகு பல ஆயிரம் மக்களில் இருந்து வெறும் ஒரு ஆயிரத்துக்கு அண்மித்த மக்களே தெரிவு செய்யப்பட்டனர்.

காலையில் தொடங்கிய மக்கள் தெரிவு, முடிய மாலை ஆகிப்போனது.

பயணிக்கும் வாய்ப்பைப்பெர்ற அனைவரின் உடமைகளும் யாழ் நகரில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் முற்று முழுதாக சோதிக்கப்பட்ட பின்பு அனைத்து மக்களும் பஸ் வண்டிகளிலே ஏற்றப் பட்டார்கள். ராணுவம் பஸ்சில் இருந்து கண்காணிக்க பஸ் தெல்லிப்பழை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.
இதற்குள் ஊரடங்குச் சட்டத்திற்குரிய நேரம் தொடங்கி விட்டதால், வீதியெல்லாம் உறங்கிப் போய் மயானமாக காட்சி அளித்தது.

லேசாக இருட்டத் தொடங்கி விட்ட , வெறிச்சோடிய வீதியில், பஸ்ஸின் உள்ளே ராணுவம் கண்காணிப்பில் இருக்க , தூரத்தில் வெடிச் சத்தங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்க , பஸ் வண்டிகள் சீறிப் பாய்ந்தன தெல்லிப்பளை நோக்கி


தெல்லிப்பளை நெருங்கியபோது முற்றாக இருட்டி விட்டிருந்தது.

தெல்லிப்பளை வைத்தியசாலை உள்ள இடம்தான் மக்களுக்கான எல்லை, அதற்கு அப்பால் உள்ள அத்தனை இடமும் ராணுவம் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்ட இடங்கள்.

உயர் பாதுகாப்பு வலயம் என்பது, முற்று முழுதாக ராணுவத்தின் ஆக்கிரமப்பில் இருக்கும் இடம். அங்கேதான் அவர்களின் தலைமை அதிகாரிகளின் அலுவலகங்கள், ஆயுதக் கிடங்குகள் என்பவவை அமைந்திருக்கும்.

தெல்லிப்பளை, காங்கேசன் துறை மற்றும் பலாலி என்பவற்றை உள்ளடக்கிய உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மக்களுக்கு சொந்தமான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையம் கூட உள்ளடக்கப்படிருக்கிறது.இங்கேதான் ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் விநியோகிக்கப் படும் மார்க்கங்கள் அமைந்திருக்கின்றன.

அந்தளவிற்கு ராணுவ ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசத்திற்கு நாங்கள் அழைத்துச்செல்லப்பட்டோம். மிகவும் இருட்டி விட்டதால் பஸ்ஸின் விளக்கு வெளிச்சத்திலேயே வீதியோரங்க்களை பார்க்க முடிந்தது.
உடைந்த கட்டிடங்கள், வீட்டினுள்ளேயே வளர்ந்து நின்ற மரங்கள் , ராணுவச் சிப்பாய்கள் என்பவற்றைத் தவிர பார்ப்பதற்குஅங்கே வேறு எதுவுமே இல்லை.

கடைசியில் பஸ் தெல்லிப்பளையில் இருந்த ஒரு பாடசாலை கட்டிடத்தினுள் நிறுத்தப் பட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் கப்பலில் ஏறப்போகிறோம் என்ற எதிர்பார்ப்போடு இருந்த எங்களுக்கு இடையில் பஸ் நிறுத்தப் பட்டதும் கொஞ்சம் பதட்டம் பிடிக்கத்தொடங்கியது.

நாங்கள் தங்கி இருந்த கட்டடங்களுக்கு மிக அண்மையில் இருந்தும் பீரங்கிகள் முழங்கிக்கொண்டிருந்தன. சத்தத்தில் செவிப்பறை மென்சவ்வு உடைந்து விடும் உணர்வு. அன்றைய இரவுப் பகுதி ஒரு யுத்தகளத்திலேயே இருக்கும் உணர்வோடு கொஞ்சம் கொஞ்சமாய் கடந்து கொண்டிருந்தது....

தொடர்ந்து நடந்ததை சில மணி நேரத்தில் அடுத்த இடுகையாக இடுகிறேன்.




6 comments:

Anonymous said...

யன்னலுக்கு பேப்பர் ஒட்டேல்லையா?

அனுபவம் said...

ஊரான்!
நன்றாக இருக்கப்பா உன் படைப்புக்கள்!

மயாதி said...

pukalini said...

யன்னலுக்கு பேப்பர் ஒட்டேல்லையா?//

ஆமா அதை சொல்லாம விட்டு விட்டேனே !
இன்னும் நிறைய விடயங்கள் உள்ளன ...

மயாதி said...

அனுபவம் said...

ஊரான்!
நன்றாக இருக்கப்பா உன் படைப்புக்கள்!//

நன்றி

Unknown said...

நல்ல படைப்பு மயாதி... இன்னொரு விஷயம்.. அது பல்குரல் பீரங்கி அல்ல.. பல்குழல் பீரங்கி

மயாதி said...

Keith Kumarasamy said...

நல்ல படைப்பு மயாதி... இன்னொரு விஷயம்.. அது பல்குரல் பீரங்கி அல்ல.. பல்குழல் பீரங்கி//

ஆமா ,
நான் கூட கவனிக்காத பிழை அது , சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பரே..