10.29.2010

மழையின் சில்மிஷங்கள்

மழை
எல்லோரையும்
நனைக்கும்
உன்னை மட்டும்
அபிஷேகம்
பண்ணுகிறது...


உன்னில்
விழுந்த
மழைத்துளி
கலந்தபோது
புனிதமானது
சாக்கடை


நீ
குடைபிடித்துப்
போனால்
உன்
குடையில்
விழுந்து
தற்கொலை
செய்கிறது...
மழை


மழை
மண்ணில் விழுந்தால்
மண் வாசம்
உன்னில் விழுந்தால்
உன்வாசம்


உன்னில்
விழும்போது
ஆணாகிப் போகிறது
மழை...


உன் மேக்கப்
எல்லாம்
கலைத்து விட்டாலும்
உன் அழகைக்
கொஞ்சம் கூடக்
குறைத்துவிடுவதில்லை
மழை...


உன்னில்
மழைவிழுகையில்
நீ வெட்கப்படுவதில்
புரிந்துவிட்டது
மழைக்கும்
இருக்கிறது
என் கை..

10.19.2010

கவிதைகளின் காதலி

எல்லோருக்கும்
அழகை
வர்ணிக்க
கவிதை
தேவைப்படும்
எனக்கு மட்டும்
கவிதையை
வர்ணிக்க
நீ தேவைப்படுகிறாய்.....


என்
கவிதைகளின்
அட்ஷயபாத்திரம்
நீ...


முத்தங்களுக்கான
என் தேவையை
குறைத்துவிடுகிறாய்
கவிதைகள் மூலம் ...


நீ
தூரம்போகும்
போதுதான்
என் கவிதைகள்
நிரம்புவதற்கு
நிறைய இடம்
கிடைக்கிறது

நீ
இல்லையென்ற
சோகத்தில்
ஒரு கவிதை
எழுதினேன்
இருந்தாய்
நீ
அந்தக்
கவிதையில்..

பொறாமைப்பட்டுக்
கொள்கிறேன்
நீ என்
காதலியா
கவிதைகளின்
காதலியா?


சொல்லிவிடு
நான்
உன் காதலனா
கவிஞனா?

10.18.2010

கொஞ்சமாவது பேசிவிடு


நீ
என்னைவிடத்
தூரத்தில்
இருந்தாலும்
நான்
உன்
அருகில்தான்
இருக்கிறேன்..

நீ
விட்டுவிட்டுப்
போகின்ற
எல்லாம்
கவிதையா
நான் மட்டும்
கவிஞன்
ஆகிறேன்...

கவிதை
எழுத
வார்த்தைகள்
மட்டும்
போதாது
கொஞ்சம்
மௌனமும்
வேண்டும்


கசப்பு
என்ற
வார்த்தை
நீ
உச்சரிக்கும்
போது
மட்டும்
இனிப்பாகிவிடுகிறது..

நீ
அழுவதைப்
பார்த்து
அழுவதா
ரசிப்பதா?
அடிக்கடி
குழம்பிப்போகிறேன்...
.................................................
ஒரு
மொழி மரணிக்கிறது
கொஞ்சமாவது
பேசிவிடு

புல்லாங்குழல் இசை ! ( ஓ மனமே ஓ மனமே!)

கிருபனின் கன்னி முயற்சி.உங்கள் கருத்துக்களையும் கூறிச் செல்லுங்கள்.10.15.2010

சொல்வதெல்லாம் காதல் ...

என்னை
பீடித்துக்கொண்டவள்
நீயே
பிடிக்கவில்லை
என்கிறாய்...

................................................

கடவுள்
மனிதனாக
அவதாரம்
எடுப்பார்
தேவதைகள்
நீயாக
அவதாரம்
எடுக்கும்...

.........................................
பேசாமல் இருப்பதில்
என்ன இருக்கிறது
என்றேன்
எல்லாமே
இருக்கிறது
என்றது
உன் மௌனம்...

...........................................

யாரோ
ஒருவனைப்
பார்ப்பதைப்போல்
பார்த்துவிட்டுப்
போவாய்...
அந்த யாரோ
ஒருவனாகிப்
போவேன் நான்

............................................

நீ
காதலிக்காவிட்டாலும்
பரவாயில்லை
உனக்கும் சேர்த்து
நானே
காதலித்து
விடுகின்றேன்..

.............................................

10.14.2010

பேய் எழுதிய காதல் கவிதை !

காதல் தோல்வியில்
செத்துப்
போனவனின் ஆவி
ஆத்மா சாந்தியடையாமல்
காத்துக்கொண்டிருக்கிறது
காதலியின்
ஆவிக்காக
அவள்
சாகும் வரை....

.....................................................
உயிரோடு
இருக்கும்போது
யாரோ ஒருவனைப்
பார்ப்பதுபோலாவது
பார்ப்பாய்
இப்போது
அப்படியும்
பார்க்கிறாயில்லை
நான் சாகாமலேயே
இருந்திருக்கலாமோ?


..................................................
மீண்டும்
பிறக்கச்
சொல்கிறார்கள்
முடியாது...
நீ இன்னும்
உயிர்வாழ்ந்து
கொண்டிருக்கும்
பூமியில்
உனக்குச் சின்னவனாய்
என்னால்
பிறக்க முடியாது...

..................................................

உயிரோடு
இருக்கும்போது
உன்னை எண்ணி
சாகவாவது
முடிந்தது
இப்போது
என்ன செய்வேன்?

10.12.2010

கனவில் வாழ்தல்நிஜத்தைவிட
கனவில்
நீ
நேரத்துக்கு
வருகிறாய்...

நிஜத்தைப்போல
அல்ல
கனவில் நீ
அதிகம்
பேசுகிறாய்

நிஜத்தைபோல
அல்ல
கனவில்
நான் கேட்காமலேயே
முத்தங்கள்கூடத்
தருகிறாய்

எல்லாவற்றிற்கும்
மேலாக
நிஜத்தைப்போல
அல்ல
கனவில்
என்னை நீ
காதலிக்கிறாய்

இப்போது
நான்
நிஜத்தில்
இறந்து
கனவில்
பிறந்துவிட்டேன்...

மரணத்தின் பின்

அலைந்துகொண்டே
திரிகிறது
என் ஆத்மா

என் இறப்புக்காக
நீ
சிந்தும்
ஒரு சொட்டு
கண்ணீரில்தானே
அது சாந்தி
அடையும்....

10.11.2010

மிட்டாய் விற்கும் சிறுவன்

மிட்டாய்
விற்கும்
சிறுவனுக்குப்
பாவப்பட்டு
ஒருமிட்டாய்
வாங்கி
அவனுக்கே
கொடுத்துவிட்டு
வந்தேன்
இப்போது
அவன் அதை
சாப்பிட்டுக்கொண்டிருப்பானா
விற்றுக் கொண்டிருப்பானா ?

....................................................................

மிட்டாய் விற்கும்
சிறுவனுக்கு
பள்ளிக்குப்போகாமல்
மிட்டாய் விற்பது
தப்பு என்று
அறிவுரைகூறும்
சிலருக்கு
அவனிடம்
ஒரு மிட்டாய்யேனும்
வாங்கும்
மனசில்லை

....................................................

மிட்டாய் விற்கும்
சிறுவர்களைப்பார்த்து
சின்னவயசில்
பொறாமைப்பட்டு
இருக்கிறேன்
இவர்களிடம்
இவ்வளவு
மிட்டாய்கள்
இருக்கிறதே என்று..
எவ்வளவு
சின்ன
பிள்ளைத்தனமாய்
இருந்திருக்கிறேன்

................................................

ஏனப்பா இந்த
வயதில்
மிட்டாய்
விற்கிறாய்
அப்பா அம்மா
இல்லையா என்று
கேட்டேன்
அவங்க
பெரியாளா ஆகிட்டாங்க
மிட்டாய் யெல்லாம்
விற்கமுடியாது
சார் என்றுவிட்டு
போனான்
என்ன ஒரு
வியாபார யுக்தி!

............................................
மிட்டாய்
விற்கிறாயே
பள்ளிக்குப்
போறதில்லையா
என்றேன்..
போகணும் சார்
இடைவேளையிலதான்
பிசினஸ் போகும்
அதுக்கு
இன்னும் நேரம்
இருக்கு சார்
என்றுவிட்டுப்
போனான் .

10.10.2010

மௌனம்நீயும் நானும்
பேசிக்கொள்ளாமல்
இருப்பதைப்பார்த்து
நமக்கிடையே
என்ன பிரச்சினை
என்கிறார்கள்...
காதலைவிட
பெரிய பிரச்சினை
என்ன
இருந்துவிடப்போகிறது...

10.09.2010

ஆறாவது அறிவு பேசுகிறது

ஏதோவொரு
ரகசியத்தில்
தொலைந்துபோகின்றன
நிறைய
உண்மைகள்...

....................................................
பேசித்
தீர்க்கமுடியாத
பிரச்சினைகளுக்கு
ஒரே தீர்வு
மௌனம்

....................................................
மரணத்தை
நேசிக்கும்போதுதான்
மகிழ்ச்சியடைகிறது
வாழ்க்கை

10.08.2010

ஆறாவது அறிவு பேசுகிறது

நான்
பிறந்ததைத்தான்
ஞாபகம்
வைத்துக்கொள்ள
முடியவில்லை
மரணத்தையாவது
ஞாபகம்
வைத்துக்கொள்ள
வேண்டும்...

இல்லாவிட்டால்
அடுத்தபிறப்பில்
மீண்டும்
முதலிலிருந்து
வாழ்ப்பழக
வேண்டுமே!


....................................................

எனக்குமுன்னமே
நான்
பிறந்திருந்தால்
ஒருவேளை
இந்நேரமாவது
என்னைத்
தெரிந்து
கொண்டிருக்கலாமோ?

...................................................

ஊர்வலம்
கோயிலை
நெருங்க நெருங்க
சாமிக்குக்
கிலி பிடித்தது
ஐயோ
மீண்டும்
கோயிலுக்குள்
அடைத்துவிடப்
போகிறார்களே

........................................

இறந்தவரின்
சொந்தக்காரர்களையே
கோயிலுக்குப்
போக
வேண்டாம்
என்கிறார்கள்
அப்போ
இறந்தவர்
கட்டாயம்
சாமி
இல்லாத
நரகத்துக்குத்தான்
போவாரோ!


10.06.2010

உன் வெட்கம் பேசுகிறது

வெட்கம்
இதுவரை
கவிஞர்களுக்கு
மட்டுமே
பயன்பட்டது
நீ
வெட்கப்படும்போதுதான்
முதன்முதலாய்
வெட்கப்படுவதற்கும்
பயன்படுகிறது


உன் பிறந்தநாளை
மட்டும்
பத்திரப்படுத்திவிடத்
துடிக்கிறது
கலண்டர்...

நீ
பிறக்காத
364 நாட்களையும்
தண்டிக்கிறது
காலம்.

உனக்காகக்
காத்திருக்கும்போது
என்
கடிகாரத்திற்கும்
கண்முளைக்கிறது

நீ வந்து
பேசப்போகிற
வார்த்தைகளுக்காகக்
காத்திருக்கிறது
தமிழ்


நீ
வந்தாலும்
ஏதும்
பேசப்போவதில்லை...
இருந்தாலும்
நீ கடந்துபோகிற
கணங்கள்
கவிதையாகிப்போகும்

அழகிப்போட்டியில்
வெறும்
அழகிகள் மட்டுமே
இருக்கிறார்கள்
உன்னில்
மட்டும்தான்
அழகே
இருக்கிறது

உனக்காகக்
காத்திருக்கும்
பொழுதுகளில்
நீ
வராவிட்டாலும்
எப்படியோ
வார்த்தைகளை
அனுப்பிவிடுகிறாய்
என்
கவிதைகளுக்கு

நீ
பேசப்பேசத்தான்
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிர்வருகிறது
தமிழுக்கும்
எனக்கும்

உன்னைபார்க்கும்வரை
வாழவதற்கென
இருந்தவாழ்க்கை
இப்போது
காதலிப்பதற்கென
மாறிவிட்டது


நல்லவேளை
உன்னைப்
பார்த்துவிட்டேன்
இல்லாவிட்டால்
உலகம் என்ற
சின்ன
இடத்திலேயே என்
வாழ்க்கை
முடிந்துபோயிருக்கும்....

என்
கல்லறையின்
வாசகமாக
உன் மௌனத்தை
எழுதவேண்டும்

எதற்காக
என்னைக்
காதலிக்கிறீர்கள்
என்று
கேட்கிறாய்...
வாழவதற்காக!10.04.2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - YESவந்தி

மௌனங்களைப்
புரிந்துகொள்ள
ஞானம்
வேணும்
மௌன
ராகங்களைப்
புரிந்துகொள்ள
மனது
போதும்....

மௌனமும்
கவிதைதான்
மௌனராகத்தில்
வந்துவிழும்
வார்த்தைகளும்
கவிதைதான்...

பெயரிலேயே
`யெஸ்`....
NO
சொல்லா
நல்லவள்...

அவளுக்கு
வாழ்த்துச்சொல்ல
என்
தமிழுக்கு
வாய் முளைக்கும்..

அவளுக்கு
பரிசளிக்க
என் கவிதைக்கு
பூ
துளிர்க்கும்..

வாழ்த்துக்கள்
ஜெஸ்வந்தி

மௌனம்நீண்டநாளாய்
ஒருவார்த்தையைத்
தொலைத்துவிட்டு
தேடியலைந்தேன்...

எங்கெல்லாம்
தேடியும்
கிடைக்காத
அந்த
வார்த்தையை
இறுதியில்
உன்
மௌனத்தில்
கண்டுபிடித்தேன்...

இன்னும்
எனது
வார்த்தையை
பேசிவிடாமல்
கவனமாகப்
பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறாய்

உன்
மௌனம்
என் மீதான
அக்கறை...

................................................

பேசும்போது
ஒரு
அர்த்தம்தான்
கிடைக்கிறது
பேசாமல்
இருக்கும்போதுதான்
நிறைய
அர்த்தங்கள்
கிடைக்கின்றன
வார்த்தைகளுக்கு...

10.01.2010

காதல் வ(லி)ரி !

தேவலோகத்தில்
படைக்க வேண்டிய
உன்னை
தவறுதலாக
பூலோகத்தில்
படைத்துவிட்டான்
பிரமன்...

எனக்குள் இருக்கும்
உன்னையெல்லாம்
வெளியே எடுத்துப்
பார்த்தேன்
மிச்சமாக
எனக்குள்
நான்கூட
இல்லை....

நாங்கள்
கோயிலுக்குப்போனால்
எங்களுக்கு
மன அமைதி
நீ கோயிலுக்குப்
போனால்
சாமிக்கு
மன அமைதிகவிதைகளை
நான்
எழுதிக்கொண்டிருந்தேன்
அவள் பார்த்தபோது
ஒரு கவிதை
என்னை
எழுதத் தொடங்கியது...உனக்கே தெரியாமல்
எனக்குள்
இருக்கிறாய்
நீ

உன்னால்தான்
உயர்திணையாகிறது
நான்

என்னைவிட்டுப் போ
என்கிறாய்
எனக்குள் இருக்கும்
உன்னை
எடுத்துவிடு
போகிறேன்....

வீட்டுக்குள்
போய்
கதவை மூடிக்கொண்டாய்
வெளியே
சிறைப்பட்டுப் போனேன்

இறப்பதில்
ஒன்றும் கஷ்டமில்லை
இறந்தபின்பும்
உன்னை
மறக்காதபடி
ஒரு
மரணம்
வேண்டும்

கடவுளே வந்தாலும்
திருத்தமுடியாது
என்று
இருந்தவனை
நீ வந்து
திருத்திவிட்டாய்

நீ
காதலிக்காவிட்டாலும்
நான்
காதலித்துக்கொண்டே இருப்பேன்
வரம் தராவிட்டாலும்
தொடர்ந்து
சாமியை
வணங்கும்
பக்தனைப்போல ...

எல்லாச் செடியிலும்
பூக்கள்தான்
பூக்கும்
உன் ரோஜாச்
செடியில் மட்டும்
நீயே
பூக்கிறாயே


நீ
பிடிக்கவில்லை
என்று சொல்லும்
ஒவ்வொரு பொழுதிலும்
செத்துப்பிறக்கிறேன்
உனக்குப்
பிடித்தவனாய்ப்
பிறப்பதற்கு ...