1.15.2011

காதலைச் சொல்லுகிறேன்

சொல்ல வேண்டியதில்லை
காதல்
தெரிந்துகொள்ள வேண்டியது ...

சொல்லாமல் எந்தக்
காதலும்
தோற்று விடுவதில்லை
தெரிந்துகொள்ளாமலே
தோற்கிறது

காதலை நான்
தெரிந்து கொண்டேன்
நீயும்
தெரிந்துகொள்

1.12.2011

மழையே உனக்கு மனசே இல்லையா?மழையே உனக்கு
மனசே இல்லையா?

பெய்யத்தானே சொன்னோம்
நீயோ பேயாட்டம்
போடுகிறாய்

.......................................................

உனக்குத்தானே
இருக்கிறது
கடல்,ஆறு ,குளம்
என நிறைய
இடங்கள்
எதற்காக எங்கள்
வீடுகளுக்குள்ளேயும்
வருகிறாய்

......................................................

ஆக்கக் கடவுள்
என்று நினைத்துத்தானே
உன்னை ரசித்தோம்
பூசித்தோம்
நீயோ அழித்தல்க்
கடவுளாய்
ஆகிப்போனாயே....

....................................................

நாங்கள்
ஏற்கனவே சொந்த
நாட்டுக்குள்
அகதியாகிப்போனோம்
நீ சொந்த
வீட்டுக்குள்
அகதியாக்கிவிட்டாய்..

......................................................

அவசரப்பட்டு
இப்படிக் கொட்டித்
தீர்க்கிறாயே
அடுத்தவருடம்
முழுவதும்
காயப்போடவா?

.......................................................

வேண்டாம் நீ
போய்விடு
உன் தூறல்களைக்
கண்டால்கூட
பயமாயிருக்கிறது
இப்போது....

...........................................................................
.எங்க ஊரில் இன்னும் பெய்துகொண்டே இருக்கிறது மழை. இப்படியே போனால் ஒட்டுமொத்த ஊரே அகதி முகமாகிவிடும் .

1.10.2011

நீ மட்டும் போதும்

இந்தக் காதலுக்கு
எப்படியோ ஏதோ
ஒன்று
தேவைப்பட்டுக் கொண்டே
இருக்கிறது ..

கொஞ்சம் பொய்
முத்தம்
கவிதை
கண்ணீர்
இப்படி
ஏதோ ஒன்று
தேவைப்பட்டுக் கொண்டே
இருக்கிறது

என்
காதலுக்கு மட்டும்
இது எதுவுமே
தேவை இல்லை
நீ
மட்டும் போதும்