12.25.2011

ஆதலால் காதல் செய்வீர்

இறந்தபின்பு
மோட்சம்
வேண்டுமென்றால்
புண்ணியம்
செய்யுங்கள்

இருக்கும்போதே
மோட்சம்
வேண்டுமென்றால்
காதல்
செய்யுங்கள்

11.10.2011

தனிமை

நீ இல்லாத
தனிமையில்
நானும்
இருப்பதில்லை

நீ என்னைவிட்டுப்
போகும்போது
என்னையும்
எடுத்துக்கொண்டு
போய்விடுகிறாய்

10.01.2011

வாழ்க்கை நிறையக் கவிதை

அழாமல்
கவலைகளைக்
கொண்டாட
கவிதைகள்
கைகொடுக்கின்றன

கன்னத்
தை வருடும்
கண்ணீர்த்துளியை விட
தனிமையில்
நல்ல
நண்பன் இல்லை

கவலைகளை
ரசிக்கப்பழகாவிட்டால்
வாழ்க்கையின்
பெரும்பகுதி
ரசிப்பதற்குஎதுவும்
இல்லாமலேயே
கழிந்து விடும்

என் ஒவ்வொரு
கவலையிலும்
ஒளிந்திருக்கும்
நான்
தொலைத்த
சந்தோசத்தைக்
கண்டு பிடித்தே
என்
கவலைகளைப்
போக்கிக் கொள்கிறேன்

வாழ்க்கை நிறையக் கவிதை

தனிமையை

நேசிக்க

வைக்கும்

இரவுக்கு

நன்றி...


ஒரு

ஏகாந்தத்திற்குள்ளும்

ஒளிந்திருக்கலாம்

ஒரு மாபெரும்

புரட்சியின்

இரைச்சல் ...


யதார்த்த

முரண்பாடுகளிலும்

முளைக்கலாம்

ஒரு ............!


உழைத்துக்

கொண்டிருக்கும்

விழிப்புலன்

அற்றவனைப்

பார்த்தபோது

வெட்கித்

தலைகுனிந்தது

என் விழி...


சாவதில் ஒன்றும்

பயமில்லை

எனக்கு

ஆனால்

அதற்கு முன்

வாழ வேண்டும்

காத்திருத்தல்

எந்த ஒரு
கணத்திலும்
உனக்கும்
என் மீது
காதல் வரலாம்
அந்தக் கணம்
என்
மரணமாகக் கூட
இருக்கலாம் .....

9.04.2011

ஒரு காதலின் கதை

உயிர் உடலுக்குள்
காதல் உயிருக்குள்

சொல்லிக்கொண்டு
வருவதில்லை
வந்தபின்பு
எவ்வளவு
சொன்னாலும்
போவதில்லை
காதல்

என்னை மறந்துவிடு
என்று இலகுவாகச்
சொல்லிவிட்டாய்
அவ்வளவு இலகுவாக
மறக்க
முடியுமென்றால்
அது காதலே
இல்லை

எனக்கு
காதலிக்க மட்டும்தான்
தெரியும்
காதலை அழிக்கவல்ல

நான் உன்னோட
வாழ நினைத்தது
நான்
வாழ்வதற்காக அல்ல
உன்னை
வாழ வைப்பதற்காக


உன்னைப் பார்த்த
என் கண்கள்
எங்கே பார்த்தாலும்
அங்கே
கவிதை முளைக்கிறது

நீ வெளியே
வந்தால்
வெள்ளிக்கிழமை
தங்கக் கிழமை
ஆகிப்போகிறது

நீ
1,2,3,4...
எழுதியதைப்
பார்த்தபின்புதான்
வார்த்தைகளால்
மட்டுமல்ல
வெறும் இலக்கங்களாலும்
கவிதை
எழுதலாம் என்று
அறிந்து கொண்டேன்

உயிர்வாழ
உணவு
தேவையில்லை
நீ வருகின்ற
கனவு போதும்


எத்தனையோ
வருடங்களுக்குப்
பின்பு கூட
நாம் சந்திக்கலாம்
அப்போதுகூட
நான்
வாழ்ந்துகொண்டிருக்கிறேனோ
இல்லையோ
கட்டாயமாய்
உன்னைக்
காதலித்துக்கொண்டிருப்பேன்8.31.2011

என்னோடு பேசுகிறேன்

மற்றவர்களுக்குப்
பிடிக்கிறதோ இல்லையோ
எனக்குப் பிடித்தபடியே
வாழவேண்டும்

என்னோடு நான்
பேசும்
வார்த்தைகள்
கடவுளுக்குக் கூட
கேட்காத
ரகசியம்

கடவுளைவிட
சக்தி
வாய்ந்தது
எனக்கு நான்

மரணம்
எனக்கு
இன்னொரு
பிறப்பாக
இருக்கட்டும்

7.29.2011

காதலில் அடிக்கடி சொல்லப்படும் பொய்கள்

சொல்லொன்னாத்
துயரம்
நீ
இல்லையென்று
சொல்லிய
வார்த்தை ....

சொல்லிய துயரம்
நான்
கவிதையில்
சொல்லிடும்
வார்த்தை ..

உன் புன்னைகை
முழுவதும்
பொய்களின் வாசம்

நீ பேசிடும்
பொய்களில்
கவிதையின் வாசம்

உனக்கென
இருக்குது என்
உயிரெல்லாம்
நேசம்

உனக்குள்ளே
இல்லை
என் மீது
ஒரு துளி
பாசம் ..

உன் பார்வையில்
தெரியுது
பல பல
மாற்றம்
ஆனால்
எவற்றிலும் இல்லை
எனக்கான
தோற்றம் ..

துடிப்பதற்கு
மட்டுமில்லை
காதலில்
வலிப்பதற்கும்
தேவையொரு
இதயம்..

எத்தனை முறை
செத்தாலும்
நீ இருக்கும்
இந்த உலகத்தை
விட்டுப் போக
மனமில்லை
எனக்கு..

காதலிக்கும்
போது
மட்டும்தான்
மரணம் வரும்
முன்னே
வாழ்க்கை வரும்
பின்னே ...

என் மீது
இரக்கம்
தேவை இல்லை
கொஞ்சம்
விருப்பம் வை
போதும்...

கொஞ்சம்
புன்னகை
கொஞ்சம்
மௌனம்
நிறையக்
காதல்
சேர்த்துச் செய்த
கலவை
என் மரணம் ..

7.16.2011

ஒரு அவதாரத்தின் கதை ....என் அம்மாவுக்கான என் சமர்ப்பணம் ....

அம்மா நீ
இறக்கவில்லை
ஒரு அவதாரம்
தன் கடமையைச்
செய்துவிட்டுப்
போய்விட்டாய்
அவ்வளவுதான் ...


உனக்காக - ஒரு
நாள்கூட
வாழாமல்
ஒவ்வொரு நாளையும்
எங்களுக்காக
வாழ்ந்தாயே
உனக்காக உன்னை
வாழவைக்க
நினைத்தபோது
வேண்டாம் என்று
போனாயே ....

உன்னை
உருக்கித்தானே
எங்களை
உருவாக்கினாய்....

நீ
தாய்ப்பால் தந்தது
கொஞ்சம்தான்
ஆனால்
அளவுக்கதிகமாகவே
அறிவுப்பாலையும்
துணிவுப்பாலையும்
தந்துவிட்டுப்
போய்விட்டாய் ...


ஒரு கிராமத்தின்
மூலையில் இருந்து
உலகளவு
உன்னால் சிந்திக்க
முடிந்தது...
ஒழுக்கமாகவும்
சிந்திக்கமுடிந்தது
அதனால்தான்
எங்களால்
இந்தளவு உயரவும்
முடிந்தது
ஒழக்கமாக இருக்கவும்
முடிந்தது...

பாரதியின்
கனவில்தான்
புதுமைப்பெண்
இருந்தாள்
எல்லோரின்
கண்முன்னே
புதுமைப்பெண்ணாய்
நீ வாழ்ந்துகாட்டினாய்....

உன்னைப்போல
ஒரு அம்மா
கிடைத்தால்
இந்த உலகத்தில்
எல்லாக்
குழந்தையும்
நல்ல குழந்தையே ...


உலகத்தின்
அம்மாக்களுக்கெல்லாம்
நீ
முன்னுதாரணம் ...

தன்னம்பிக்கையில்
நீ
தனித்துவம்

ஒழுக்கத்தில்
நீ
யாரும் எட்ட
முடியாத
உயரம் ...

உலகத்தில்
நீ
உன்னதம்

உன்
வாழ்க்கையில்
நீ
சரித்திரம் ...

மற்றவர்
வாழ்க்கையில்
நீ
வழிகாட்டல் ...நீயோ
சொர்க்கத்திற்குப்
போய்விட்டாய்
நாங்களோ
இன்னும்
நரகத்தில்...


நாங்கள்
உன்னைப்
பார்த்துக்கொள்ள
முடியாத
தூரத்திற்கு
நீ போய்விட்டாலும்
நீ எங்களைப்
பார்த்துக்கொள்ளும்
தூரத்தில்தான்
இருப்பாய்
என்று நம்புகிறோம்...


நீ
அம்மாவாக
இல்லையென்றால்
இனி
எங்களுக்கோர்
பிறப்பே
வேண்டாம்...


அம்மா நீ
இறக்கவில்லை
ஒரு அவதாரம்
தன் கடமையைச்
செய்துவிட்டுப்
போய்விட்டாய்
அவ்வளவுதான் ...


7.04.2011

கேள்விக்குறியாகும் மட்டக்களப்பு மருத்துவ பீடத்தின் எதிர்காலம்

எத்தனை துயரங்களை கடந்து வந்தாலும் தமிழர்களின் இருப்பை இன்னும் நிலை நிருத்தியிருப்பதில் அவர்களின்கல்வித்திறனுக்கும்முக்கிய பங்கு இருக்கிறது. அவர்களின் கல்வித்திறனை தமிழ் மண்ணிலிருந்தே உலகுக்கு பறை சாற்றுவதில் யாழ் மருத்துவ பீடத்தின் பங்கு அளப்பரியது. எத்தனை தடைகள் வந்தபோதும் எந்தத் தடையும் இல்லாமல் கல்வியில் என்றும் போல் மிளிர்ந்து கொண்டேயிருக்கிறது யாழ் மருத்துவபீடம்.

வடக்கிலே மட்டும் மருத்துவ பீடத்தைக் கொண்டிருந்த எமக்கு சில வருடங்களுக்கு முன்பு கிழக்கிலே மட்டு நகரில் வரப்பிரசாதமாக வாய்க்கப் பெற்றது இன்னொரு மருத்துவ பீடம். முற்று முழுதாக தமிழர்களினால் மட்டுமே நிர்வாகிக்கப்படும் மட்டக் களப்பு மருத்துவ பீடத்தையும் யாழ் மருத்துவ பீடம் போல் தரத்தில் உயர்த்துவது எமது கடமையாகும்.
ஆனாலும் இப்போதுள்ள நிர்வாகத்தின் நடவடிக்கைகள் காரணமாக அந்த மருத்துவ பீடத்தின் தரம் கேள்விக் குறியாகியுள்ளது.

ஒவ்வொரு துறைக்கும் பல பேராசிரியர்களை கொண்டிருக்கும் மற்றைய மருத்துவ பீடங்களே உள் நாட்டு மருத்துவபட்டதாரிகள் வைத்திய சேவையில் இணைந்து கொள்வதற்கு முன்பு அவர்களை தற்காலிக விரிவுரையாளர்களாகசேர்த்துக் கொண்டு கனிஷ்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவ வழி செய்கிறார்கள்.

ஆனால் போதியளவு விரிவுரையாளர்கள் இல்லாத நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மருத்துவ பீடத்தின்நிர்வாகமோ உள்நாட்டு மருத்துவ பட்டதாரிகள் தற்காலிக சேவை வழங்க முன் வந்தாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

மாறாக அவர்கள் அறிந்த அல்லது அவர்களுக்கு வேண்டிய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை ஏற்றுக் கொள்வதிலேயேஆர்வம் காட்டுகிறார்கள். வெளிநாட்டுப் பட்டதாரிகளின் கற்றல் முறை வேறு , உள்நாட்டு கற்றல் முறை பரீட்சை முறை
என்பவை வேறு.

இலங்கை முழுவதும் பொதுப்பரீட்சையாக நடைபெறும் இறுதியாண்டு மருத்துவப் பரீட்சைக்கு மாணவர்களை தயார் படுத்துவதில்உள்நாட்டு பட்டதாரிகளாலே உதவமுடியும்.

குறிப்பாக உள்நாட்டு பட்டதாரிகள் மருத்துவ சேவைக்கு நேரடியாக சேர்த்துக் கொள்ளப் படும் போதும் வெளிநாட்டுப் பட்டதாரிகள்போட்டிப் பரீட்சை மூலம் மீண்டும் அவர்களின் திறமை பரீட்சிக்கப் பட்டே சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். திறமையான வெளிநாட்டு
பட்டதாரிகள் அந்தப் பரீட்சையில் சித்தி பெற்று மருத்துவ சேவையில் இணைந்து கொள்ள அந்த பரீட்சையில் சித்தி பெற முடியாத அல்லது சித்தி பெற முயற்சிக்காத சில வெளிநாட்டு பட்டதாரிகளே மருத்துவ பீட நிர்வாகத்தில் உள்ள சிலரின் அறிமுகத்தை வைத்து விரிவுரையாளர்களாக இணைந்துகொள்வது மருத்துவ பீடத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

மேலும் மருத்துவ பீடத்தின் விரிவுரையாளர் நேர்முகப் பரீட்சையில் மருத்துவ பட்டதாரி நீக்கப் பாட்டு வேறு துறையில் பட்டம் பெற்ற ஒருவர் சித்தி பெறும் அதிசயமும்
மட்டு மருத்துவ பீடத்திலேயே நடைபெறும்.

இதுசம்பந்தமாக எல்லோரும் விழித்துக் கொண்டு நமது எதிர்ப்பை வெளிக்கொணர வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும்.

6.16.2011

காதல் யாப்புக்கள்

அளவுக்கதிகமாகும் போதுதான் அமிர்தமாகிறது
காதல்

உலகழகிப் போட்டியோடு நிறுத்திக்கொண்டு
துரோகமிழைக்காதீர்கள் - பேரழகிப்போட்டியும்
வையுங்கள் ...
என்னவள் பங்குபெறவேண்டும்

டாவின்சி உன்னைப்பார்த்திருந்தால்
கூர்ப்புக்கொள்கையே மாறியிருக்கும்
மனிதன் குரங்கிலிருந்து மட்டுமல்ல
தேவதையிலிருந்தும் பரிணமித்தான்
என்றிருப்பான் ..

உன்னிடம் சொல்லாவிட்டால் என்ன
உன்னையே சொல்லிக்கொண்டிருக்கிறது
என் காதல்

நீ தாஜ்மகால் பக்கம்
போனால்
சாஜகான் எழுந்து வந்து
இன்னும் பல
தாஜ்மஹால் கட்ட
ஆசைப்படுவான் ..

நான் உனைப்பார்ப்பதற்காய்
காத்திருப்பேன்
நீ என்னைப் பார்க்காதவள்
போல் கடந்துபோவாய்
நீ
என்னைப் பார்க்காவிட்டாலும்
நான் காத்துக்கொண்டிருப்பதை
உனக்குத் தெரியப்படுத்துவதுதான்
என் காதல்

ஏன் என் பின்னாலே
வருகிறாய் என்றாய்
சாவதற்காக என்றேன்
எப்படி என்றாய்
நான் உன்னிடம்
வழமை போல் காதலைச்
சொல்வேன்
நீ இல்லை என்பாய் ....
அதைவிட இலகுவான
வழி எனக்கில்லை
என்றேன்
நீ ஏதும்
சொல்லாமலேயே
போய்விடாய்
மீண்டும் என்னை
கொன்றுவிட்டு ....

5.25.2011

காதல் பழமொழிகள்

காதல் பிறப்பதில்லை அவதரிக்கிறது

முத்தம் காதலுக்கு முத்தாய்ப்பு

மௌனம் காதலுக்கு கலங்கரை விளக்கு

காதலை மறுக்கலாம் யாராலும் வெறுக்க முடியாது

காத்திருப்பது காதலின் பொற்காலம்

காதல் இருவருக்கிடையே அல்ல எல்லோரையும் சுற்றி இருக்கிறது

.................................................................................................................................................

அவள் எழுத்துக்கூட்டி படிக்கும் போதுதான்
கணக்குப்படித்தது தமிழ்

அவள் அவ்வளவு அழகா என்பவர்களிடம் சொல்லிக்கொள்வது
எவ்வளவு அழகு என்று சொல்லிக்கொள்ள முடியாதவள் அவள்

வாய் பேச வராத ஊமைக்கும்
அவளைப்பார்த்தால் கவிதை பேச வரும்

அவள் என்னோடு இருக்கும் பொழுது மட்டுமே
நானும் என்னோடு இருக்கிறேன்

அவளைக் கை பிடிக்க ஆசையில்லை
உயிர் பிடிக்கத்தான் ஆசை

வாழும் போது மட்டுமல்ல சாகும் போதும்
வாழ வேண்டும் அவளோடு

காதல் படுத்தும் பாடு

நான் வாழ்வதற்காகத்தான் பிறந்திருக்கிறேன் என்று தவறாக நினைத்துக்

கொண்டுவாழ்ந்து கொண்டிருந்தேன் .உன்னைப்பார்த்த பின்புதான் நான்

பிறந்தததுகாதலிப்பதற்காக என்று உணர்ந்துகொண்டு வாழ்வதை விட்டு

காதலிக்கத்தொடங்கிவிட்டேன்.


காதலுக்கும் வாழ்க்கைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் . வாழ்வதற்கு

கட்டாயம்உயிரோடு இருந்தாக வேண்டும் .காதலிப்பதற்கு உயிர் ஒன்றும்

அவசியமில்லை.


வாழ்க்கையை இழந்தபின் கடவுளாக இருந்தால் உயித்தெழலாம். காதலை

இழந்தபின் கடவுளாக இருந்தால்கூட உயிர்த்தெழ முடியாது.


......................................................................................................................................................................


அவளைப்பற்றி ஒரு கவிதை சொல்லச் சொன்னாள்.நான் மௌனமாகவே

இருந்தேன் . கோபித்துக்கொண்டு போய் விட்டால். மௌனத்தை புரிந்து

கொள்வது எப்படி என்று அவளுக்குச் சொல்லிக்கொடுக்காதது என் தவறுதான் .


அவளிடம் ஒரு முத்தம் கேட்டபோது மறுத்துவிட்டு வீட்டுக்குப் போனபின்பு

போன் பண்ணி நீ பாவம்டாஎன்று கொஞ்சினால் . அவளுக்குத் தெரியாது அவள்

தருகின்றமுத்தங்களை விட தராத முத்தங்களுக்குத்தான் சுவை அதிகம் என்று.


கோயிலுக்குப் போகும் பெண்கள் எல்லா பூ பறித்துக்கொண்டு சாமிக்குச்

சாத்தி விட்டு வருவார்கள். அவள் மட்டும் வெறும் கையேடு போய்

புன்னகைத்து விட்டு வருவாள் .சாமியும் நானும் மட்டும் புரிந்து கொள்வோம் .


தடுக்கி விழுந்த அவள் எழுந்து போய் விட்டால்.என்னால் இன்னும் எழ முடியவில்லை.


..............................................................................................................................................................வானத்தில் மிதக்க சிறகு வேணும். காதலில் மிதக்க கனவு வேணும்.


கவிதை எழுத மூளை தேவையில்லை காதல் போதும்.


வாசிப்பு அறிவை பூரணமாக்கும் காதல் முழு மனிதனையே பூரணமாக்கும்.


தாய்க்குப்பின் தாரம் கடவுளுக்கு முன் காதலி.


நான் வாழ்வதற்கு உயிர் தேவையில்லை அவள் போதும்.BY- மயாதி

5.10.2011

முத்தமின்றி ?

அளவுக்கதிகமாகக்

கொடுத்தாலும்
நஞ்ஞாகி
விடுவதில்லை
முத்தம்

முத்தம்
கொடுத்ததால்
கோபித்துக்கொண்ட
காதலியின்
கோபத்தைப்
போக்கியது...
ஒரு
முத்தம்


உனக்கு
ரகசியமாய்
கொடுக்கிற
முத்தத்தை
வெட்கத்தில்
வெளிப்படுத்தி
விடுகிறாய்...


வார்த்தைகளால்
வெளிப்படுத்த
முடியாத
காதலின்
விஸ்த்தீரத்தை
சிலவேளைகளில்
ஒற்றை
முத்தம்
வெளிப்படுத்தி
விடுகிறது


பேசுகிற
வார்த்தைகள்
தேவையற்றதாகிப்
போகலாம்
கொடுக்கிற
முத்தம்
எப்போதும்
தேவையற்றதாகிப்
போய்விடாது


பொல்லாத
காதல்...
ஒவ்வொரு
முத்தத்தின்
முடிவிலும்
தொடக்கி
வைத்து விடுகிறது
அடுத்த
முத்தத்திற்கான
எதிர்பார்ப்பை


உயிரை
இணைத்துவிட்டு
உதடு
பிரிந்து
விடுகிறது....
உனக்கு
நான்
தருகிற
ஒவ்வொரு
முத்தத்தின்
முடிவிலும்உனக்கும்
எனக்கும்
இடையே
சின்னதாய்
ஒரு
இடைவெளி
வந்தாலும்
நுழைந்து விடுகிறது
ஒரு
முத்தம்எனக்கு
காதலிக்காமல்
எப்படி
வாழத்தெரியாதோ
அப்படித்தான்
முத்தமிடாமலும்
காதலிக்கத்
தெரியாது


அருசுவைகளுக்கு
அப்பாற்பட்டது
முத்தத்தின்
சுவை.....

5.08.2011

கொஞ்சம் வார்த்தை நிறையக் காதல்

நீ எனக்காக
எதுவும்
தர வேண்டியதில்லை
என்னை
எடுத்துக்கொள்
அது போதும்...

நீ
தற்செயலாகப்
பார்த்தாலும்
அதைவிட
நற்செயல்
எதுவுமில்லை ..

எதற்காகவேனும்
இறக்கலாம்
ஆனால்
உனக்காக
மட்டுமே
வாழவேண்டும்..

நீ
தாவணி போட்டு
வந்தாய்
தாவணிமாதம்
ஆகிப்போனது
ஆவணிமாதம்..

காத்திருக்கும்
போது
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்ல வைப்பாய்
வந்தபின்பு
ஒரேயடியாய்
வாழ வைப்பாய்

ஒருமுறைதான்
பிறந்தேன்
ஆனால்
நிறையமுறை
வாழ்கிறேன்
உன்னால்...

4.10.2011

என் காதலியிடம் பேச நினைப்பவை...

உன்னோடு பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென என்ன வரம்
வேண்டும் என்ற கடவுளிடம் இப்படியே பேசிக்கொண்டே இருக்க
வேண்டும் மறைந்துபோ என்றேன்.
இப்போதுதான் யோசிக்கிறேன் வரம்தரும் சாக்கில் உன்னைப்
பார்க்கத்தான் வந்திருப்பாரோ?


இதுதான் என் முதல் ஜென்மமாக இருந்துவிடவேண்டும்.
இன்னும் ஆறு ஜென்மங்கள் மிச்சம் இருக்குமே உன்னோடு வாழ்வதற்கு!


நான் எத்தனை கவிதை எழுதினாலும் எனக்காக எழுதப்பட்ட ஒரே கவிதை நீ .


நீ கனவில் வருவாய் என்பதற்காகவே விழித்துக்கொண்டிருக்கிறது தூக்கம்.....

உன்னை மறக்கமுடியாமல் இறக்கப்போனேன். எமன் சொன்னான் உன்னை மட்டும்தான்
கொள்ளமுடியும் உனக்குள் இருக்கும் அவளை வெளியேற்றிவிட்டு வா.
அதைவிட இறக்காமலேயே இருந்துவிடலாம் ....


இந்த நிமிடத்தோடு உன்னை மறந்துவிடுவதென்று முடிவெடுத்தேன்அடுத்தநிமிடம்
வரவேயில்லை.


உன்னை அளவுக்கதிகமாக காதலித்து அதுதான் நஞ்சாகி என்னைக் கொன்றுவிட்டது..
வாழும்போது முழுமையடையாத வாழ்க்கை உனக்காக சாகும்போது முழுமையடைந்து
விட்டது ..


எந்த வேற்று மொழியின்கலப்பும் இல்லாமல் இருக்கும் ஒரே மொழி மௌனம் .
மௌனம் பேசுவதற்காக அல்ல புரிய வைப்பதற்காக ....
3.17.2011

நினைவே கவிதையாய்

நிறையப் பெண்கள்
பார்ப்பதற்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
நீ மட்டும்தான்
நினைப்பதற்கே
அழகாய் இருக்கிறாய்


நினைப்பதும் ஒரு
பசிதான்
என்ன எவ்வளவு
நினைத்தாலும்
அது அடங்குவதில்லை

சாமியை நினைத்தால்
தியானம்
உன்னை நினைத்தால்
ஞானம்

காதலிப்பதைப் போல
இலகுவான வேலை
இல்லை
காதலிக்க வைப்பதைப்போல
கடினமான
வேலையும் இல்லை


எனக்கு வாழ்வதில்
எந்தக் கஷ்டமும்
இல்லை
உன்னை நினைத்தாலே
போதும்
அதேபோல்
சாவதிலும் எந்த
கஷ்டமும் இல்லை
உன்னை
மறந்தாலே போதும்


நான் எப்போதும்
தற்கொலை
செய்ய நினைத்ததே
இல்லை -உன்னை
எனக்குக்
காட்டிய
இந்த வாழ்க்கையை
எப்படி என்னால்
கொலை செய்ய
முடியும் ...

2.24.2011

வாழ்க்கை வழக்கு

தீர்ப்பு
வாசிக்கப்பட்டுவிட்டது...

சட்டபூர்வமாக
செயலிழக்கச்
செய்யப்பட்டது
திருமணம்

குழந்தைக்கும்
அவளுக்கும்
ஜீவனாபாயமும்
அறிவிக்கப்பட்டது

இனி அவள்
திருமதி என்று
போட்டுக்கொள்ள
முடியாது
ஆனால்
விட்டுப்போனவன்
குழந்தையின்
பெயரின் முன்னாலும்
அவன் பெயரை
நீக்கமுடியாதப்டி
விட்டுச் சென்றிருந்தான்...
ஆணாய்
இருப்பது எப்பவும்
மவுசுதான்

வழக்கு
முடிந்தபின்
அவனைக் கூட்டிச்
செல்ல
அவனது புது
மனைவி
வந்திருந்தாள்

அவளை அழைத்துச்
செல்ல
செல்லமா மாமி
மட்டுமே
வந்திருந்தாள்

செல்லமா மாமி
வேறுயாருமில்லை ...
சுமங்கலிகள்
நடத்திவைத்த
அவள் திருமணத்திற்கு
அனுமதிக்கப்படாத
விதவை...

2.23.2011

கொஞ்சமாவது பேசிவிடு ...


நான்
இறந்தபின்பு
மற்றவர்களைப்போல
நீயும்
மௌன அஞ்சலி
செய்துவிடாதே
என் மரணத்திற்கு
காரணமே
உன் மௌனம்தானே

உன் பெயருக்கு
அர்ச்சனை
போட்டேன்
நீ அர்ச்சிக்கப்
பட்டாயோ
இல்லையோ
சாமி அர்ச்சிக்கப்பட்டது

எல்லோருக்கும்
வீடு
முகவரியாக
இருக்கும்
உன் வீட்டுக்கு
மட்டும்
நீ
முகவரியாய்
இருக்கிறாய்


உனக்கு
குழந்தை மனசு
என்று
அடிக்கடி உன்
அப்பா சொல்கிறார்
எனக்கு
குழந்தைகள் மீது
கொள்ளைப் பிரியம்
என்பது
தெரியாமல்

அம்மா அப்பா
இல்லாதவர்கள்
மட்டும்
அனாதையில்லை
நீ இல்லாத
நானும்
அனாதைதான்

பேசு என்றேன்
என்ன பேச
என்றாய்
ஏதாவது பேசு
என்றேன்
நீங்களே
சொல்லுங்கள்
என்றாய்
அதுதானே சொல்கிறேன்
என்றேன்...
இப்படியே நீண்ட
நேரம்பேசிக்
கொண்டிருந்தோம்
எதுவுமே பேசாமல்
அர்த்தங்களைச்சொல்ல
வார்த்தைகள் மட்டும்
போதுவதில்லை...


என்ன வேண்டும்
என்றேன்
எதுவுமே வேண்டாம்
நீங்கள்
மட்டும் போதும்
என்றாய்
என்னைத்தர
முடியாது
என்றேன்
கோபித்துக்கொண்டாய் ..
என்னைத் தந்து
உனக்கு சுமையாகக
முடியாதுஉன்னைத்
தந்துவிடு
எனக்குள்
வைத்துக்கொள்கிறேன்


சின்னச் சின்ன
விடயத்திற்காகவெல்லாம்
கோபித்துக் கொள்கிறாய்
நீ கோபித்துக்
கொள்வதால்
சின்ன சின்ன
விடயங்கள் கூட
பெரிதாகிப்
போகின்றன ....


உன்னோடு
சேர்ந்து
வாழா விட்டாலும்
பரவாயில்லை
சேர்ந்து சாக
மட்டும் முடியாது
உனக்கு முன்னமே
செத்துவிட
வேண்டும்

காதல் பா

கடவுள்
இல்லையென்பவன்
நாத்திகனாகலாம்
காதல்
இல்லையென்பவன்
மனிதனாகவே
முடியாது

கடவுளால்
வரம் மட்டுமே
தர முடியும்
காதலால்தான்
வாழ்க்கையையே
தர முடியும்

கடவுள்
இல்லாமல்
வாழ்ந்துகூட
விடலாம்
காதல் இல்லாமல்
செத்துவிடக் கூட
முடியாது

கடவுள்
மதங்களால்
பிரிக்கிறார்
காதல்
மனங்களால்
இணைக்கிறது

கடவுள்கள்
நிறையப் பேர்
இருக்கிறார்கள்
காதல்
ஒன்றுதான்

பேசாமல்
காதலையே
கடவுளாக்கி
விடலாமோ
என்றுகூடத்
தோன்றுகிறது...