12.31.2010

ஒரு கவிதை ஒரு வாழ்த்து

ஒவ்வொரு
புதுவருடத்திலும்
எப்படியோ
வந்துவிடுகிறது
நிறைய
நம்பிக்கைகள்...

ஒவ்வொரு
வருடமும்
இவ்வாறு நிறைய
நம்பிக்கைகள்
வீணாகிப்போவதால்
இந்த வருடம்
போனவருடத்தில்
சாத்தியமாகாத
நம்பிக்கைகளை
சாத்தியமாக்குவது
என்ற
ஒரு நம்பிக்கையோடு
மட்டும்
ஆரம்பிக்கிறேன்
புது வருடத்தை

..................................................

வருடங்கள்
புதுப்பிக்கப்பட
வாழ்க்கை
பழசாகிப்போகிறது



இந்த
வருடமாவது
வருடத்தோடு
வாழ்க்கையும்
புதுப்பிக்கப்பட்டும்

புத்தாண்டு வாழ்த்துக்கள்
நண்பர்களே

12.19.2010

கொல்லாமல் விடு

கொஞ்சம் மௌனம்
கொஞ்சம் புன்னகை
போதும்
ஒரு உயிர்
செய்துவிடுகிறாய்
இறந்துவிடும்
எனக்காக

தூரங்களால்
நிர்ணயிக்க
முடியாது
பிரிவை
அன்பு இருக்கும்
உள்ளத்திற்கு
இருப்பதில்லை
பிரிவு..

நீ
என்பதில்
நீ மட்டுமில்லை
நானும்
இருக்கிறேன்

நீ எல்லோரையும்
கடந்து
செல்கிறாய்
என்னை மட்டும்
கடத்திச்
செல்கிறாய்

உன்
பெயரை
உச்சரித்துப் பார்
முன்பை விட
கனமாய் இருக்கும்
அதில்
நானும்
கலந்து விட்டேனே !

நான்
வாழ்வதற்கு
நீர் கூட
வேண்டாம்
நீ
வேண்டும்

சொர்க்கமோ
நரகமோ
உன்
சொல்லில்தான்
இருக்கிறது

நீ
சொல்லாமல்
விட்டாலும்
பரவாயில்லை
என்னைக்
கொல்லாமல் விடு

உன்னை
நினைத்துக்கொண்டு
வாழ்வதற்காகவேனும்
வேண்டும்
இந்த உயிர்

12.12.2010

பிரியமுடன் வசந்த் !!!!!!!!!



உன் பெயரிலே
இருக்குது
பிரியம்
அதுதான்
எல்லோருக்கும்
உன்மீது
பிரியம்....

நீ நாயகன்
கற்பனைகளின்
நாயகன்...

இளம் பெண்களின்
கனவிலும்
நாயகன்

உன் கூடவே
பிறந்தது
மட்டுமல்ல
உனக்குக் கொஞ்சம்
கூடவே இருப்பதும்
லொள்ளு ..

தமிழ்
மணத்தில்
மட்டுமல்ல
நிறைய
மனங்களிலும்
நீ நட்சத்திரம்

உன் எழுத்தில்
இல்லை
இலக்கியம்
ஆனால்
எல்லோருக்கும்
அது ஐக்கியம் ...

உன் கவிதை
நிரம்ப
ரசனை ..

நாங்கள்
வார்த்தைகளுக்கு
அர்த்தத்தை மட்டுமே
கொடுப்போம்
நீ
மட்டுமே
அழகையும்
கொடுப்பாய்....


சிரிக்க
மட்டுமல்ல
இடையிடையே
சிந்திக்கவும்
வைக்கிறாய் .....
அதோடு
எங்களை
நேசிக்கவும்
வைக்கிறாய்

நீ பிரபலமான
பதிவரோ
இல்லையோ
தமிழின்
பிரதானமான
பதிவர்...
ஒரு
பிரமாதமான
பதிவர்



மாப்பு வசந்து
தொடர்ந்து
நீ அசத்து
எனக்கு
இதற்காக
வச்சிடாத
ஆப்பு..

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாப்ள !!!!!!!!

11.28.2010

என் லிவ்விங் டுகெதர் பார்ட்னருக்கு ஒரு கடிதம்

உனக்கென நான்
இருப்பேன்
எனக்கென
நீ இரு
என்றாய்...

மனம்
ஒத்தபின் எதற்கு
மணம் என்றாய்
ஒத்துக்கொண்டேன்...

பிரச்சினைவந்தால்
பிரிந்துவிடலாம்
என்ற ஒப்பந்தம்
போடாவிட்டாலும் ...
அதைபற்றி நாம்
பேசாவிட்டாலும் ....
கையில் இருந்த
வேலை தந்த
தைரியத்திலும்...
மனதில் இருந்த
காதல் தந்த
தைரியத்திலும்
சேர்ந்தே
வாழ்ந்தோம்...

ஆசை அறுபதுநாள்
மோகம் முப்பதுநாள்
அல்ல
அதற்கு மேலேயே
வாழ்ந்தோம்...

இரண்டு குழந்தைக்கு
நான் அம்மாவாகிப்
போகும்வரை
ஒத்துப்போன
நம் மனது
கொஞ்சம் கொஞ்சமாய்
முரண்படத்
தொடங்கியது...

ஒத்துவராத வாழ்க்கை
இலகுவாக
பிரிந்துவிட்டாய்...

நீ எங்கேயோ
என்னைப்போல
இன்னொருத்தியைத்
தேடிக் கொண்டிருக்கலாம்
அல்லது
இந்நேரம்
கண்டே பிடித்திருக்கலாம்.

நான்
அழவில்லை
ஏனெறால் நான்
புதுமைப்பெண்...

இருபத்திஎட்டு
வயதில்
யார் யாரோ
சொல்லப்போகும்
வார்த்தைகளையும்
கேவலமான
பட்டங்களையும்
ஒதுக்கிவிடும்
பக்குவம் எனக்கு
இருக்கிறது....

என் கவலையெல்லாம்
என் பெண்
பதின்மூன்று
பதினான்கு
வயதளவில்
கேட்கப்போகும்
அவச் சொட்களை
உதாசீனப்படுத்தும்
பக்குவத்தை
பெறுவாளா?

என்னதான்
புதுமைப்
பெண்ணாக
இருந்தாலும்
என் அப்பா
யார் என்று
கேட்கும்
பையனிடம்...
அப்பாவிற்கு அம்மாவைப்
பிடிக்கவில்லை
அதனால் விட்டு விட்டு
இன்னொரு அம்மாவைத்
தேடித் போய்
விட்டார் என்று
சொல்லும்
தைரியமும்
எனக்கில்லை..



பிள்ளைகளுக்கு
தெரிந்துகொள்ளும்
வயதுவரும் முன்னே
யாருக்கும்
தெரியாத
ஒரு ஊரில்
குடியேறிவிட்டேன்..

இருந்த வேலைதான்
போய்விட்டது
இருந்தாலும்
கவலையில்லை
கூலி வேலை
செய்தாவது
பிள்ளைகளை
வளர்த்து விடுவேன்...

ஆனால்
அவர்களை
அப்பா இறந்துவிட்டார்
என்று சொல்லியே
நம்பவைத்திருக்கிறேன்...

என்னவனே
இரண்டுவருடம்
என்னோடு வாழ்ந்ததிற்கு
ஜீவனோபாயமாக
நான் கேட்பது
தயவுசெய்து
இந்த ஊருக்குமட்டும்
வந்து
நீதான் என்
குழந்தைகளுக்கு
அப்பா என்று
தெரியப்படுத்தி விடாதே

இப்படிக்கு
உன் கடந்தகால
காதலி/மனைவி/ பார்ட்னர்
தோ ஒன்று...

11.10.2010

வெட்கத்தின் வார்த்தைகள்..

நீ வரமாட்டாய்
என்று
தெரிந்தும்
காத்துக் கொண்டிருக்கிறேன்
இந்த ஏமாற்றத்தையாவது
எனக்காகத்
தருகிறாயே
என்ற
சந்தோசத்தோடு...

என்ன
வரம்
வேண்டும்
என்ற
கடவுளிடம்
உன்னைக் கேட்டேன்
மன்னித்துக்கொள்
வரம் மட்டுமே
தர முடியும்
தேவதையைத்
தரமுடியாது
என்று சொல்லி
மறைந்துவிட்டான்
கடவுள்


ஆண்கள்
கற்பழிப்பதைப்
போன்றதுதான்
பெண்கள்
காதலை
மறுப்பதும் ...

நீ
வெட்கத்தில்
முகத்தை மூடிய
பின்னும்
வெளியில்
தெரிந்துகொண்டேதான்
இருக்கிறது
வெட்கம்..

மௌனம்
உன் வெட்கத்தின்
வார்த்தைகள் ...

கடந்துபோகும்
அந்த
அவகாசத்தில்
எப்படி
என்னைக் கடத்திப்
போகிறாய்...

என் இதயத்தின்
நீ இருக்கும்
அறையைவிட்டு விட்டு
மற்ற
மூன்று அறைகளையும்
மூடிவிட்டேன்....
கோயிலுக்கு
ஒரு கர்ப்பக்
கிரகம்தான்
இருக்கவேண்டும்...


எனக்கு
இன்னும் நிறைய
உயிர் வேண்டும்
உனக்காக
விடுவதற்காக


11.03.2010

தீபாவளிச் சிறப்புக் கவிதைகள்


நீ
வாழ்த்துச்
சொல்லாத
தீபாவளி
சாதாரண
நாளாகிப்
போனது
நீ
வாழ்த்துச்
சொன்ன
சாதாரண
நாள்
தீபாவளியாகிப்
போனது..


நீ
தீபம் ஏற்றும்
வரைக்
காத்துக்
கொண்டிருக்கும்
தீபாவளி
தன்னைக்
கொண்டாட


சனங்களுக்கு
ஒருநாள்
தீபாவளி
தினங்களுக்கு
நீ
வரும்நாள்
எல்லாம்
தீபாவளி




நீ போட்ட
தீபாவளிக்
கோலத்தைக்
கலைத்துவிட
முடியாமல்
ரசித்துக்
கொண்டிருக்கின்றன
எறும்புகள்...

நீ என்னைச்
சேரும் வரை
காத்துக்கொண்டிருக்கும்
எனது தீபாவளி
கொண்டாடப்படுவதற்காக

தீபாவ(லி)ளி



தீபங்கள் அல்ல
சூரியன்களே
வந்தாலும்
ஒளி ஏற்ற
முடியுமா
இவர்களின்
வாழ்க்கையை....



இன்றைக்குத்தான்
இவளுக்குத்
தீபாவளி

பிச்சைக் காரனுக்கு
மட்டும்தான்
நிஜமான
தீபாவளி
மிச்சமாய்
நிறையக் கிடைக்கும்


தீபாவளிக்
கொண்டாட்டங்கள்
முடிந்தபின்னும்
தொடரும்
அதற்காக
வாங்கிய
கடன்கள்...


ஒரு அசுரன்
அழிந்ததைக்
கொண்டாடுகிறோம்...
அழிந்தது
அந்த ஒரு
அசுரன்
மட்டுமே
என்பதை
உணராமல் ..

தீபங்கள்
ஒளி ஏற்றட்டும்
இல்லங்களையல்ல
வாழ்க்கையை...







11.01.2010

ம் ....


நீ
பேசாமல் போனாய்
புரிந்துகொண்டேன்
பேசிவிட்டுப் போனாய்
குழம்பிப் போனேன்


எல்லோருக்கும்
பேசுவதற்கு ஒரு
மொழி தேவைப்படும்
உனக்கு மட்டும்
பேசாமல்
இருப்பதற்கு
ஒரு மொழி
தேவைப்படுகிறது...


உன்னிடமிருந்து
ஏதாவது
தவறி விழும்
போதெல்லாம்
ஒரு கவிதை
விழுந்து
தற்கொலை
செய்துகொள்கிறது...

நீயே
தவறிவிழும்
போது...
என் மனது
விழுந்து
தற்கொலை
செய்துகொள்கிறது

உன்னோடு
வாழ்வதற்கான
இறுதி முயற்சி
மரணம்

10.29.2010

மழையின் சில்மிஷங்கள்

மழை
எல்லோரையும்
நனைக்கும்
உன்னை மட்டும்
அபிஷேகம்
பண்ணுகிறது...


உன்னில்
விழுந்த
மழைத்துளி
கலந்தபோது
புனிதமானது
சாக்கடை


நீ
குடைபிடித்துப்
போனால்
உன்
குடையில்
விழுந்து
தற்கொலை
செய்கிறது...
மழை


மழை
மண்ணில் விழுந்தால்
மண் வாசம்
உன்னில் விழுந்தால்
உன்வாசம்


உன்னில்
விழும்போது
ஆணாகிப் போகிறது
மழை...


உன் மேக்கப்
எல்லாம்
கலைத்து விட்டாலும்
உன் அழகைக்
கொஞ்சம் கூடக்
குறைத்துவிடுவதில்லை
மழை...


உன்னில்
மழைவிழுகையில்
நீ வெட்கப்படுவதில்
புரிந்துவிட்டது
மழைக்கும்
இருக்கிறது
என் கை..

10.19.2010

கவிதைகளின் காதலி

எல்லோருக்கும்
அழகை
வர்ணிக்க
கவிதை
தேவைப்படும்
எனக்கு மட்டும்
கவிதையை
வர்ணிக்க
நீ தேவைப்படுகிறாய்.....


என்
கவிதைகளின்
அட்ஷயபாத்திரம்
நீ...


முத்தங்களுக்கான
என் தேவையை
குறைத்துவிடுகிறாய்
கவிதைகள் மூலம் ...


நீ
தூரம்போகும்
போதுதான்
என் கவிதைகள்
நிரம்புவதற்கு
நிறைய இடம்
கிடைக்கிறது

நீ
இல்லையென்ற
சோகத்தில்
ஒரு கவிதை
எழுதினேன்
இருந்தாய்
நீ
அந்தக்
கவிதையில்..

பொறாமைப்பட்டுக்
கொள்கிறேன்
நீ என்
காதலியா
கவிதைகளின்
காதலியா?


சொல்லிவிடு
நான்
உன் காதலனா
கவிஞனா?

10.18.2010

கொஞ்சமாவது பேசிவிடு


நீ
என்னைவிடத்
தூரத்தில்
இருந்தாலும்
நான்
உன்
அருகில்தான்
இருக்கிறேன்..

நீ
விட்டுவிட்டுப்
போகின்ற
எல்லாம்
கவிதையா
நான் மட்டும்
கவிஞன்
ஆகிறேன்...

கவிதை
எழுத
வார்த்தைகள்
மட்டும்
போதாது
கொஞ்சம்
மௌனமும்
வேண்டும்


கசப்பு
என்ற
வார்த்தை
நீ
உச்சரிக்கும்
போது
மட்டும்
இனிப்பாகிவிடுகிறது..

நீ
அழுவதைப்
பார்த்து
அழுவதா
ரசிப்பதா?
அடிக்கடி
குழம்பிப்போகிறேன்...
.................................................
ஒரு
மொழி மரணிக்கிறது
கொஞ்சமாவது
பேசிவிடு

புல்லாங்குழல் இசை ! ( ஓ மனமே ஓ மனமே!)

கிருபனின் கன்னி முயற்சி.உங்கள் கருத்துக்களையும் கூறிச் செல்லுங்கள்.



10.15.2010

சொல்வதெல்லாம் காதல் ...

என்னை
பீடித்துக்கொண்டவள்
நீயே
பிடிக்கவில்லை
என்கிறாய்...

................................................

கடவுள்
மனிதனாக
அவதாரம்
எடுப்பார்
தேவதைகள்
நீயாக
அவதாரம்
எடுக்கும்...

.........................................
பேசாமல் இருப்பதில்
என்ன இருக்கிறது
என்றேன்
எல்லாமே
இருக்கிறது
என்றது
உன் மௌனம்...

...........................................

யாரோ
ஒருவனைப்
பார்ப்பதைப்போல்
பார்த்துவிட்டுப்
போவாய்...
அந்த யாரோ
ஒருவனாகிப்
போவேன் நான்

............................................

நீ
காதலிக்காவிட்டாலும்
பரவாயில்லை
உனக்கும் சேர்த்து
நானே
காதலித்து
விடுகின்றேன்..

.............................................

10.14.2010

பேய் எழுதிய காதல் கவிதை !

காதல் தோல்வியில்
செத்துப்
போனவனின் ஆவி
ஆத்மா சாந்தியடையாமல்
காத்துக்கொண்டிருக்கிறது
காதலியின்
ஆவிக்காக
அவள்
சாகும் வரை....

.....................................................
உயிரோடு
இருக்கும்போது
யாரோ ஒருவனைப்
பார்ப்பதுபோலாவது
பார்ப்பாய்
இப்போது
அப்படியும்
பார்க்கிறாயில்லை
நான் சாகாமலேயே
இருந்திருக்கலாமோ?


..................................................
மீண்டும்
பிறக்கச்
சொல்கிறார்கள்
முடியாது...
நீ இன்னும்
உயிர்வாழ்ந்து
கொண்டிருக்கும்
பூமியில்
உனக்குச் சின்னவனாய்
என்னால்
பிறக்க முடியாது...

..................................................

உயிரோடு
இருக்கும்போது
உன்னை எண்ணி
சாகவாவது
முடிந்தது
இப்போது
என்ன செய்வேன்?

10.12.2010

கனவில் வாழ்தல்



நிஜத்தைவிட
கனவில்
நீ
நேரத்துக்கு
வருகிறாய்...

நிஜத்தைப்போல
அல்ல
கனவில் நீ
அதிகம்
பேசுகிறாய்

நிஜத்தைபோல
அல்ல
கனவில்
நான் கேட்காமலேயே
முத்தங்கள்கூடத்
தருகிறாய்

எல்லாவற்றிற்கும்
மேலாக
நிஜத்தைப்போல
அல்ல
கனவில்
என்னை நீ
காதலிக்கிறாய்

இப்போது
நான்
நிஜத்தில்
இறந்து
கனவில்
பிறந்துவிட்டேன்...

மரணத்தின் பின்

அலைந்துகொண்டே
திரிகிறது
என் ஆத்மா

என் இறப்புக்காக
நீ
சிந்தும்
ஒரு சொட்டு
கண்ணீரில்தானே
அது சாந்தி
அடையும்....

10.11.2010

மிட்டாய் விற்கும் சிறுவன்

மிட்டாய்
விற்கும்
சிறுவனுக்குப்
பாவப்பட்டு
ஒருமிட்டாய்
வாங்கி
அவனுக்கே
கொடுத்துவிட்டு
வந்தேன்
இப்போது
அவன் அதை
சாப்பிட்டுக்கொண்டிருப்பானா
விற்றுக் கொண்டிருப்பானா ?

....................................................................

மிட்டாய் விற்கும்
சிறுவனுக்கு
பள்ளிக்குப்போகாமல்
மிட்டாய் விற்பது
தப்பு என்று
அறிவுரைகூறும்
சிலருக்கு
அவனிடம்
ஒரு மிட்டாய்யேனும்
வாங்கும்
மனசில்லை

....................................................

மிட்டாய் விற்கும்
சிறுவர்களைப்பார்த்து
சின்னவயசில்
பொறாமைப்பட்டு
இருக்கிறேன்
இவர்களிடம்
இவ்வளவு
மிட்டாய்கள்
இருக்கிறதே என்று..
எவ்வளவு
சின்ன
பிள்ளைத்தனமாய்
இருந்திருக்கிறேன்

................................................

ஏனப்பா இந்த
வயதில்
மிட்டாய்
விற்கிறாய்
அப்பா அம்மா
இல்லையா என்று
கேட்டேன்
அவங்க
பெரியாளா ஆகிட்டாங்க
மிட்டாய் யெல்லாம்
விற்கமுடியாது
சார் என்றுவிட்டு
போனான்
என்ன ஒரு
வியாபார யுக்தி!

............................................
மிட்டாய்
விற்கிறாயே
பள்ளிக்குப்
போறதில்லையா
என்றேன்..
போகணும் சார்
இடைவேளையிலதான்
பிசினஸ் போகும்
அதுக்கு
இன்னும் நேரம்
இருக்கு சார்
என்றுவிட்டுப்
போனான் .

10.10.2010

மௌனம்



நீயும் நானும்
பேசிக்கொள்ளாமல்
இருப்பதைப்பார்த்து
நமக்கிடையே
என்ன பிரச்சினை
என்கிறார்கள்...
காதலைவிட
பெரிய பிரச்சினை
என்ன
இருந்துவிடப்போகிறது...

10.09.2010

ஆறாவது அறிவு பேசுகிறது

ஏதோவொரு
ரகசியத்தில்
தொலைந்துபோகின்றன
நிறைய
உண்மைகள்...

....................................................
பேசித்
தீர்க்கமுடியாத
பிரச்சினைகளுக்கு
ஒரே தீர்வு
மௌனம்

....................................................
மரணத்தை
நேசிக்கும்போதுதான்
மகிழ்ச்சியடைகிறது
வாழ்க்கை

10.08.2010

ஆறாவது அறிவு பேசுகிறது

நான்
பிறந்ததைத்தான்
ஞாபகம்
வைத்துக்கொள்ள
முடியவில்லை
மரணத்தையாவது
ஞாபகம்
வைத்துக்கொள்ள
வேண்டும்...

இல்லாவிட்டால்
அடுத்தபிறப்பில்
மீண்டும்
முதலிலிருந்து
வாழ்ப்பழக
வேண்டுமே!


....................................................

எனக்குமுன்னமே
நான்
பிறந்திருந்தால்
ஒருவேளை
இந்நேரமாவது
என்னைத்
தெரிந்து
கொண்டிருக்கலாமோ?

...................................................

ஊர்வலம்
கோயிலை
நெருங்க நெருங்க
சாமிக்குக்
கிலி பிடித்தது
ஐயோ
மீண்டும்
கோயிலுக்குள்
அடைத்துவிடப்
போகிறார்களே

........................................

இறந்தவரின்
சொந்தக்காரர்களையே
கோயிலுக்குப்
போக
வேண்டாம்
என்கிறார்கள்
அப்போ
இறந்தவர்
கட்டாயம்
சாமி
இல்லாத
நரகத்துக்குத்தான்
போவாரோ!


10.06.2010

உன் வெட்கம் பேசுகிறது





வெட்கம்
இதுவரை
கவிஞர்களுக்கு
மட்டுமே
பயன்பட்டது
நீ
வெட்கப்படும்போதுதான்
முதன்முதலாய்
வெட்கப்படுவதற்கும்
பயன்படுகிறது


உன் பிறந்தநாளை
மட்டும்
பத்திரப்படுத்திவிடத்
துடிக்கிறது
கலண்டர்...

நீ
பிறக்காத
364 நாட்களையும்
தண்டிக்கிறது
காலம்.

உனக்காகக்
காத்திருக்கும்போது
என்
கடிகாரத்திற்கும்
கண்முளைக்கிறது

நீ வந்து
பேசப்போகிற
வார்த்தைகளுக்காகக்
காத்திருக்கிறது
தமிழ்


நீ
வந்தாலும்
ஏதும்
பேசப்போவதில்லை...
இருந்தாலும்
நீ கடந்துபோகிற
கணங்கள்
கவிதையாகிப்போகும்

அழகிப்போட்டியில்
வெறும்
அழகிகள் மட்டுமே
இருக்கிறார்கள்
உன்னில்
மட்டும்தான்
அழகே
இருக்கிறது

உனக்காகக்
காத்திருக்கும்
பொழுதுகளில்
நீ
வராவிட்டாலும்
எப்படியோ
வார்த்தைகளை
அனுப்பிவிடுகிறாய்
என்
கவிதைகளுக்கு

நீ
பேசப்பேசத்தான்
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிர்வருகிறது
தமிழுக்கும்
எனக்கும்

உன்னைபார்க்கும்வரை
வாழவதற்கென
இருந்தவாழ்க்கை
இப்போது
காதலிப்பதற்கென
மாறிவிட்டது


நல்லவேளை
உன்னைப்
பார்த்துவிட்டேன்
இல்லாவிட்டால்
உலகம் என்ற
சின்ன
இடத்திலேயே என்
வாழ்க்கை
முடிந்துபோயிருக்கும்....

என்
கல்லறையின்
வாசகமாக
உன் மௌனத்தை
எழுதவேண்டும்

எதற்காக
என்னைக்
காதலிக்கிறீர்கள்
என்று
கேட்கிறாய்...
வாழவதற்காக!



10.04.2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - YESவந்தி

மௌனங்களைப்
புரிந்துகொள்ள
ஞானம்
வேணும்
மௌன
ராகங்களைப்
புரிந்துகொள்ள
மனது
போதும்....

மௌனமும்
கவிதைதான்
மௌனராகத்தில்
வந்துவிழும்
வார்த்தைகளும்
கவிதைதான்...

பெயரிலேயே
`யெஸ்`....
NO
சொல்லா
நல்லவள்...

அவளுக்கு
வாழ்த்துச்சொல்ல
என்
தமிழுக்கு
வாய் முளைக்கும்..

அவளுக்கு
பரிசளிக்க
என் கவிதைக்கு
பூ
துளிர்க்கும்..

வாழ்த்துக்கள்
ஜெஸ்வந்தி

மௌனம்



நீண்டநாளாய்
ஒருவார்த்தையைத்
தொலைத்துவிட்டு
தேடியலைந்தேன்...

எங்கெல்லாம்
தேடியும்
கிடைக்காத
அந்த
வார்த்தையை
இறுதியில்
உன்
மௌனத்தில்
கண்டுபிடித்தேன்...

இன்னும்
எனது
வார்த்தையை
பேசிவிடாமல்
கவனமாகப்
பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறாய்

உன்
மௌனம்
என் மீதான
அக்கறை...

................................................

பேசும்போது
ஒரு
அர்த்தம்தான்
கிடைக்கிறது
பேசாமல்
இருக்கும்போதுதான்
நிறைய
அர்த்தங்கள்
கிடைக்கின்றன
வார்த்தைகளுக்கு...

10.01.2010

காதல் வ(லி)ரி !





தேவலோகத்தில்
படைக்க வேண்டிய
உன்னை
தவறுதலாக
பூலோகத்தில்
படைத்துவிட்டான்
பிரமன்...

எனக்குள் இருக்கும்
உன்னையெல்லாம்
வெளியே எடுத்துப்
பார்த்தேன்
மிச்சமாக
எனக்குள்
நான்கூட
இல்லை....

நாங்கள்
கோயிலுக்குப்போனால்
எங்களுக்கு
மன அமைதி
நீ கோயிலுக்குப்
போனால்
சாமிக்கு
மன அமைதி



கவிதைகளை
நான்
எழுதிக்கொண்டிருந்தேன்
அவள் பார்த்தபோது
ஒரு கவிதை
என்னை
எழுதத் தொடங்கியது...



உனக்கே தெரியாமல்
எனக்குள்
இருக்கிறாய்
நீ

உன்னால்தான்
உயர்திணையாகிறது
நான்

என்னைவிட்டுப் போ
என்கிறாய்
எனக்குள் இருக்கும்
உன்னை
எடுத்துவிடு
போகிறேன்....

வீட்டுக்குள்
போய்
கதவை மூடிக்கொண்டாய்
வெளியே
சிறைப்பட்டுப் போனேன்

இறப்பதில்
ஒன்றும் கஷ்டமில்லை
இறந்தபின்பும்
உன்னை
மறக்காதபடி
ஒரு
மரணம்
வேண்டும்

கடவுளே வந்தாலும்
திருத்தமுடியாது
என்று
இருந்தவனை
நீ வந்து
திருத்திவிட்டாய்

நீ
காதலிக்காவிட்டாலும்
நான்
காதலித்துக்கொண்டே இருப்பேன்
வரம் தராவிட்டாலும்
தொடர்ந்து
சாமியை
வணங்கும்
பக்தனைப்போல ...

எல்லாச் செடியிலும்
பூக்கள்தான்
பூக்கும்
உன் ரோஜாச்
செடியில் மட்டும்
நீயே
பூக்கிறாயே


நீ
பிடிக்கவில்லை
என்று சொல்லும்
ஒவ்வொரு பொழுதிலும்
செத்துப்பிறக்கிறேன்
உனக்குப்
பிடித்தவனாய்ப்
பிறப்பதற்கு ...


8.10.2010

சும்மா !!!!!!

காற்றடிக்கும்
போதெல்லாம்
ஆடிக்கொண்டிருந்தது
நிலவு
தண்ணியில் ....

காற்று
இல்லாமலேயே
ஆடிக்கொண்டிருந்தது
நிலவு
அவன்
தண்ணியில்...

..........................................................

வேலைக்குப்
போகும் அவசரத்தில்
கிளம்பவேண்டியிருக்கிறது
வீட்டில்
நிறைய வேலைகளை
விட்டுவிட்டு....


...............................................................

அவளும்
நண்பர்கள் என்று
நிறையப் பேரை
அறிமுகப்படுத்திவிட்டாள்

நானும் நண்பிகள்
என்று
நிறையப்பேரை
அறிமுகப்படுத்தி விட்டேன் !

அவர்களில்
ஒருவனையேனும்
காதலித்திருக்கமாட்டாலோ
என்று நான்
நினைத்ததைப்போல

இவள்களில்
ஒருத்தியையேனும்
காதலித்திருக்கமாட்டாரோ
என்று
அவளும்
ஒருவேளை
நினைத்திருப்பாளோ.....!

.............................................................


கவிதை
எழுதத் தெரிந்தவன்
கவிதையெழுதி
தப்பித்துக்கொள்கிறான்
தெரியாதவன்
காதலித்து
மாட்டிக்கொள்கிறான்....

6.29.2010

உதிர்ந்தவை


வானத்தை
அளந்தது
தூரம்....

...........................................

சிறகொடிந்தது
தெரியாமல்
பறக்கும் குருவிக்கு
சிறகு
கொடுக்கிறது
காற்று...

..........................................


எத்தனை
கடிகார முள்
குத்தியும்
காயப்படாமல்
இருக்கிறது
காலம்...

............................................

செருப்பில்லாத
குழந்தையின்
காலை குத்திவிடாமல்
முறிந்து விழுந்தன
முட்கள்...

...............................................


நிமிடங்களாக
செலவழிப்பதால்
இன்னும் பெரிதாக
ஒரு முள் .....
மணித்தியாலயங்களாக
செலவழிப்பதால்
சிறிதாகிப்போனது
மறு முள் .....










6.20.2010

மௌனத்தில் கொட்டிக் கிடக்கும் வார்த்தைகள் .....

உதடுகள்
மௌனமானாலும்
உடம்பு முழுவதும்
வாய்
முளைக்கும்
காதலுக்கு

........................................

என்
ரகசியங்களை
சேமித்து வைக்கின்றேன்
உன்
மௌனத்தில்...

................................................


உன்
மௌனத்தை
கொஞ்சம்
கட்டி வையேன்
இப்படி
வார்த்ததைகள்
வந்து
கொட்டுகின்றனவே!

................................................

நீ
மௌனிக்கும்
போதுதான்
புரிந்துகொண்டேன்
மௌனத்திற்கு
பூக்கத்தான்
தெரியும்
பேசத் தெரியாது...

.........................................

உலகத்தில்
அதிகம்
பேசப்படும்
மொழி
எதுவென
ஆசிரியர்
கேட்டார்
ஒவ்வொருவரும்
ஒவ்வொன்றைச் சொல்ல
நீ மட்டும்
மௌனமாய்
இருந்தாய்
சரியென்பதைப் போல
ஆசிரியரும்
விட்டு விட்டு
வேறுபாடம்
நடத்தத்
தொடங்கினார்...

..............................................

உன் வார்த்தைகளை
ரசிக்கலாம்
மௌனத்தை
அனுபவிக்கலாம்...


..................................................






5.27.2010

வாழ்க்கை நிறையக் கவிதை

நன்றி நிறையக்
கவிதை நிரம்பி
இருக்கிறது
தெரியாத ஒரு
அழகான பொண்ணு
சொல்லும்
`தங் யூ `வில் ..
................................................

பக்கத்து
வீட்டுப் பையன்
மோட்டார் பைக்கில்
போவதைப் பார்த்து
எனக்கும் வாங்கிக்
கொடுக்க
வசதியில்லையே
எனக் கவலைப்படும்
அப்பா அம்மாவைப்
பார்த்துச்
சந்தோசப்பட்டுக்
கொண்டேன்
கொடுத்து
வைத்திருக்க வேண்டும்
இப்படி
அம்மா அப்பா
கிடைக்க...


.............................................................


பிள்ளைகள்
வளர்ந்து விட்டதால்
பிள்ளைகள் மீது
அப்பா கோபப்படுவதை
அம்மா தடுத்து நிறுத்துவதாய்
முடிந்து விடுகிறது
இருவருக்குமிடையான
சில்மிஷம் ...


விபச்சாரியின் கணக்கு

விபச்சாரியின்
வரவு செலவுக்
கணக்கிலும்
காசு மட்டுமே
இருந்தது
வந்து போனவன்கள்
இல்லை....

வெசாக் சிறப்புக் கவிதை










வீதியில்
வெளிச்சக்கூடு
அகதி முகாம்களில்
இன்னும்
இருட்டு ...

5.23.2010

சொல்வதெல்லாம் காதலின்றி வேறில்லை

உனக்குப்
பிடிக்காத

நான்
எனக்கெதற்கு?
நான் என்பதை
எறிந்து
ஞானியாகிப்
போனேன்
மீண்டும்
மனிதனாகவேண்டும்!
என்னைக் கொடுத்துவிடு
என்னிடம் .

.............................................................

என்னைப்
பார்க்கின்ற போதெல்லாம்
உனக்கு வருகின்ற
கோபங்களுக்கிடையே
எப்போதாவது
காதலும்
வரும் என்ற
நம்பிக்கையில்
காத்திருக்கின்றேன் ....


.................................................

என்னைப்
பிடிக்காததிற்கு
ஆயிரம்
காரணம்
சொல்லலாம்
நீ

உன்னைப் பிடித்ததிற்கு
ஒரே ஒரு
காரணம்
காதல்


..................................................

நீ
பட்டாம் பூச்சியை
ரசித்துக்
கொண்டிருந்தாய்

நான்
உன்னை ரசித்துக்
கொண்டிருந்தேன்

கடைசியில்
பட்டாம் பூச்சி
உன்னைக் கவலைப்
படுத்திவிட்டுப்
போனது
நீ
என்னைக் கவலைப்
படுத்திவிட்டுப்
போனாய் ....





5.03.2010

நடப்புக்கள்

அலுவலகம் முடியும்
நேரம்
அலுப்பாக இருக்கிறது
போகப் போகும்
பஸ் பயணம்....
அலுவலகம்
முடியாமலேயே
இருந்திருக்கலாம்

``````````````````````````


இலகுவாகத்
திட்டிவிட முடிகிறது
தாங்குவதுதான்
கஷ்டமாக
இருக்கிறது


```````````````````````

விடுமுறை
நாட்களில்கூட
வேலை செய்யும்
மனைவி

````````````````````````

கோடிப் பரிசுக்கான
அதிஷ்டத்தை
கூவி கூவி
விற்கிறான்
ஏழை லாட்டரிச்
சீட்டுக் காரன்

```````````````````````

வாயில்
இருந்து
சிவலிங்கம்
எடுப்பது
நமக்குப் பக்தி
சிவலிங்கத்தைப்
பற்றி
தெரியாதவனுக்கு
மாஜிக்


``````````````````````


நண்பர்களைவிட
இலகுவாகத்
தெரிந்துவிடுகிறார்கள்
எதிரிகள்


````````````````````````

காதலிக்கத்
தெரியாதென்று
சொல்லிவிட்டுப்
போனாய்
காதலிக்கக்
கற்றுக்
கொடுத்ததுவிட்டு

4.10.2010

ஒரு காதல் கடிதம்...

நீயில்லாமல்
வாழ்ந்தாலும்
கவிதை
இல்லாமல்
வாழமாட்டேன்....
என்னருகே
இல்லாதபோதும்
என் கவிதைகளில்
இருக்கத்
தவறுவதில்லை
நீ!



மௌனமாக
சிரிக்கவும்
சப்தமாக
மௌனிக்கவும்
முடிகிறது
காதலால்...



நான் என்பது
மாயையல்ல
அதனுள்ளே
நீ
இருக்கும்வரை...



கனவில்
வரப்போகும்
உனைப்
பார்ப்பதற்காகவே
உறங்காமல்
விழித்திருக்கின்றன
விழிகள்


நீ போகின்ற
தூரம் -வந்து
சேர்ந்துவிடுகிறது
என் அருகே...


இந்த
காதலுக்குத்தான்
எவ்வளவு
கல்லு
மனசு
நீ காதலிக்கவில்லை
என்று
எத்தனைமுறை
சொல்லியும்
இன்னும்
உயிர்வாழ்ந்து
கொண்டிருக்கிறதே
எனக்குள்...


எனக்கும்
உனக்குமிடையே
ஏதோ
இருக்கிறதென்று
எல்லோரும்
சொல்கிறார்கள்
அது
எனக்குள் இருக்கும்
காதலென்று
வெளியில்
இருப்பவர்களுக்குத்
தெரியாவிட்டாலும்
எனக்குள்ளே
இருக்கும்
உனக்குமா
தெரியவில்லை...



3.14.2010

இருநூறாவது பதிவு (special பதிவு அல்ல )

கடவுளை வாழ விடுங்கள்..
மனிதனைக்
கடவுளாக்குவோம்
அந்த
கடவுளையே
கல்லால்
அடிப்போம்
அந்தக்
கல்லையே
மீண்டும்
கடவுளாக்குவோம்...

பாவம்
கடவுள்
மட்டும்
இன்னும்
கவனிக்கப்படாமல்
அப்படியே
இருக்கிறார்...



அப்பா
தப்புச் செய்வதும்
மகன்
தப்புச் செய்வதும்
எல்லா
இனத்திலேயும்
நடக்கும்
கடவுளே
தப்புச் செய்வது
நம் இனத்திலேதான்
நடக்கும்....
நம் இனத்திலேதானே
நிறையக்
கடவுள்கள்
பிறந்திருக்கிறார்கள் ....

மஜிக்
செய்பவர்களே
மறந்தும்
வாயால் திருநீறு
கக்குவது
போலவும்...
மூக்கால்
சிவலிங்கம்
எடுப்பது
போலவும்
வித்தை
செய்து விடாதீர்கள்

உங்களையும்
கடவுளாக்கி
விடுவார்கள்
இந்த
மனிதர்கள்
பிறகு
உங்கள்
நீலப் படத்தையே
குடும்பமாக
இருந்து
பார்த்து ரசிப்பார்கள்
அதை
போட்டு
கிட்ஸ் எடுக்கவே
காத்து கிடக்கிறது
ஒரு கூட்டம்

எதை
எடுத்தாலும்
போலி
செய்தோம்
கடைசியில்
கடவுளிலும்
போலி
செய்கிறோம்...

மனிதர்களே
முடிந்தால்
உங்கள்
பகுத்தறிவை
தொலைத்துவிடுங்கள்
கடவுள்
இல்லாத
மிருகமாகிப்
போவீர்கள்...
அந்தக்
கடவுளாவது
கலப்படம்
இல்லாமல்
நிம்மதியாக
இருக்கட்டும்...


பின்னூட்ட போதை

நான்
என்பது
மாயை
பின்னூட்டம்
என்பது
போதை...

சில
பாலின் போதை
சில
கள்ளின் போதை

இந்த
போதைக்கு
மயங்கியே
கிடக்கிறது
பிளாக்கர்
உலகம்


பாசம்
குடித்து
பாலைக்
கொடுக்கும்
ஒரு கூட்டம்

போதை
கொடுத்து
போதை
வாங்க
நினைக்கும்
கள்ளு குடிக்கும்
கூட்டம்...
கூடவே
வாக்கும் போட்டு
கள்ள
அரசியல்
நடத்தும்
இந்தக்
கூட்டம் ...

நானும்
கிடந்தேன்
ஒரு நாள்
மயங்கி...
வாந்தி
வரவே
எழுந்து
விட்டேன்
போதை
தெளிந்து...

இப்போது
நான்
பால் மட்டும்
குடிப்பதால்
கிட்ட வர
மறந்தது ...
கள்ளுக் குடிக்கும்
கூட்டம்
நன்றி
நல்லவனாய்
வாழவிட்டதற்கு...

இப்போதும்
பின்னூட்டம்
போடும்
நண்பர்களுக்கும்
நன்றி!

பாலூற்றி
இத்தளத்தை
வாழ வைப்பதால்...

இன்றைய காதல் கவிதை

உயிரோடுதானே
இருக்கிறேன்
எதற்கு இந்த
மௌன அஞ்சலி ....



என்
கவலையெல்லாம்...
உன் மௌனம்
எனக்கே
இவ்வளவு
வலியைக்
கொடுக்கிறதென்றால்
அதைத் தாங்கும்
உனக்கு
எவ்வளவு
வலியைக்
கொடுக்கும்
என்பதுதான்....






ஒரு பேய்க் கவிதை

காதலித்துச்
செத்தவர்களை
எரித்துவிடாதீர்கள்
உள்ளே
இன்னொரு
ஜீவன்
இன்னும்
உயிரோடு
இருக்கலாம்..



ஒரு சின்ன யதார்த்தம்

குடி போதையில்
வருபவன்
மோதி விடுவானே
என்று
வாசல் கதவை
திறந்து
வைத்தே
காத்திருந்தால்...
வந்தவன்
கேட்டான்
எவன் வருவான்
என்று
கதவைத்
திறந்து
வைத்திருக்காயடி??????


சும்மா ஜாலிக்காக

காதலித்தால்
கவிதை
வரும் என்கிறார்களே
உண்மையா???

காதலித்தவர்!

அடப் போப்பா
அப்படித்தான்
நானும்
நினைச்சேன்..
இப்போ
அவளைப்
பார்த்தால்
வார்த்தையே
வர மாட்டேன்
என்கிறது
இதில
கவிதை
வேறையா???




2.25.2010

இரண்டுவரிக் கதை ( அல்லது எதோ என்று? )

தந்திரம்

பயந்தோடுவதாய் ஆவியைப் பார்த்துச் சிரித்தது
நெருப்பு- ஆவி ஒடுங்கி நீராகும்வரை...



ஆண்டு 2025

குடித்துக் குடித்தே வாழ்ந்தவன்
செத்துப்போனான் குடிக்க நீரில்லாமல்.


திருமணம்

?
முதிர்கன்னி



தண்டனை

கண்ணாடி பார்க்கும்போதெல்லாம் ஞாபகப்படுத்துகிறது
நெற்றி ! இறந்து போனவனை.




பசி

அம்மா தாயென்று எல்லோரையும் அழைக்கும்
உரிமை அனாதைக்கும் கிடைத்தது பிச்சையேடுக்கும்போது



பூச்சாண்டி

சொல்வதெல்லாம் உண்மை உண்மை உண்மை
அதற்குப்பின்னும் சாட்சி கேட்டார் நீதிபதி



பசி

வெறுமையான வயிறு நிரம்ப
பசி


இப்படியானதொரு முன்னைய எனது பதிவு..


வரிக்கதை

தலைப்பு - கைபேசி
கதை- இருந்தும் என்ன பயன் நீ பேசாமல் .

தலைப்பு - நிஜம்
கதை - யாவும் கற்பனை சில கதைகளின் முடிவில்

தலைப்பு- மூன்று பொய்
கதை- நான் சொல்லுவதெல்லாம் உண்மை நீதிமன்றத்தில்

தலைப்பு-இரு சொல் கதை
கதை- கற்பனை செய்துகொள்

தலைப்பு - ஜனநாயகம்
கதை- எல்லோரும் பேசலாம் எழுதிக்கொடுபபத்தை மட்டும்

தலைப்பு- கலர் டீ வி
கதை - ஓட்டுக்கு லஞ்சம்

தலைப்பு- ஒருசொல் கதை
கதை- முற்றும்





2.23.2010

வாழ்க்கை நிறையக் கவிதை 6

ஆயிரமோ
ரெண்டாயிரோமோதான்
கொடுத்துவிட்டுப்
போனான்...
எல்லோரும்
சொன்னார்கள்
கற்பிழந்தவள்
என்று

சீ
கற்பின் மதிப்பு
இவ்வளவுதானா?



..........................................

வேலைக்களைப்பைப்
போக்க குடித்தவன்
இழந்தான்
மனைவி தரும்
தேனீரில்
இருக்கும்
போதையை...

...........................................

குழந்தையின்
முதல் அழுகை
உணர்த்தியது
பிர சவம்
அல்ல
பிற சுகம்

............................................


எனக்கு
மட்டுமே
தெரிந்த ஒரு
ரகசியத்தை
சொல்ல நினைத்த
போதுதான்
அறிந்து கொண்டேன்
ஏற்கனவே
என்னை
அது
கொன்று விட்டிருந்தது...



.....................................................


தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
கடவுள் சொன்னதை
கடைமுன்னே
எழுதிவைத்தான்
வட்டிக்கடைக்காரன்...


.....................................................