2.24.2011

வாழ்க்கை வழக்கு

தீர்ப்பு
வாசிக்கப்பட்டுவிட்டது...

சட்டபூர்வமாக
செயலிழக்கச்
செய்யப்பட்டது
திருமணம்

குழந்தைக்கும்
அவளுக்கும்
ஜீவனாபாயமும்
அறிவிக்கப்பட்டது

இனி அவள்
திருமதி என்று
போட்டுக்கொள்ள
முடியாது
ஆனால்
விட்டுப்போனவன்
குழந்தையின்
பெயரின் முன்னாலும்
அவன் பெயரை
நீக்கமுடியாதப்டி
விட்டுச் சென்றிருந்தான்...
ஆணாய்
இருப்பது எப்பவும்
மவுசுதான்

வழக்கு
முடிந்தபின்
அவனைக் கூட்டிச்
செல்ல
அவனது புது
மனைவி
வந்திருந்தாள்

அவளை அழைத்துச்
செல்ல
செல்லமா மாமி
மட்டுமே
வந்திருந்தாள்

செல்லமா மாமி
வேறுயாருமில்லை ...
சுமங்கலிகள்
நடத்திவைத்த
அவள் திருமணத்திற்கு
அனுமதிக்கப்படாத
விதவை...

2.23.2011

கொஞ்சமாவது பேசிவிடு ...


நான்
இறந்தபின்பு
மற்றவர்களைப்போல
நீயும்
மௌன அஞ்சலி
செய்துவிடாதே
என் மரணத்திற்கு
காரணமே
உன் மௌனம்தானே

உன் பெயருக்கு
அர்ச்சனை
போட்டேன்
நீ அர்ச்சிக்கப்
பட்டாயோ
இல்லையோ
சாமி அர்ச்சிக்கப்பட்டது

எல்லோருக்கும்
வீடு
முகவரியாக
இருக்கும்
உன் வீட்டுக்கு
மட்டும்
நீ
முகவரியாய்
இருக்கிறாய்


உனக்கு
குழந்தை மனசு
என்று
அடிக்கடி உன்
அப்பா சொல்கிறார்
எனக்கு
குழந்தைகள் மீது
கொள்ளைப் பிரியம்
என்பது
தெரியாமல்

அம்மா அப்பா
இல்லாதவர்கள்
மட்டும்
அனாதையில்லை
நீ இல்லாத
நானும்
அனாதைதான்

பேசு என்றேன்
என்ன பேச
என்றாய்
ஏதாவது பேசு
என்றேன்
நீங்களே
சொல்லுங்கள்
என்றாய்
அதுதானே சொல்கிறேன்
என்றேன்...
இப்படியே நீண்ட
நேரம்பேசிக்
கொண்டிருந்தோம்
எதுவுமே பேசாமல்
அர்த்தங்களைச்சொல்ல
வார்த்தைகள் மட்டும்
போதுவதில்லை...


என்ன வேண்டும்
என்றேன்
எதுவுமே வேண்டாம்
நீங்கள்
மட்டும் போதும்
என்றாய்
என்னைத்தர
முடியாது
என்றேன்
கோபித்துக்கொண்டாய் ..
என்னைத் தந்து
உனக்கு சுமையாகக
முடியாதுஉன்னைத்
தந்துவிடு
எனக்குள்
வைத்துக்கொள்கிறேன்


சின்னச் சின்ன
விடயத்திற்காகவெல்லாம்
கோபித்துக் கொள்கிறாய்
நீ கோபித்துக்
கொள்வதால்
சின்ன சின்ன
விடயங்கள் கூட
பெரிதாகிப்
போகின்றன ....


உன்னோடு
சேர்ந்து
வாழா விட்டாலும்
பரவாயில்லை
சேர்ந்து சாக
மட்டும் முடியாது
உனக்கு முன்னமே
செத்துவிட
வேண்டும்

காதல் பா

கடவுள்
இல்லையென்பவன்
நாத்திகனாகலாம்
காதல்
இல்லையென்பவன்
மனிதனாகவே
முடியாது

கடவுளால்
வரம் மட்டுமே
தர முடியும்
காதலால்தான்
வாழ்க்கையையே
தர முடியும்

கடவுள்
இல்லாமல்
வாழ்ந்துகூட
விடலாம்
காதல் இல்லாமல்
செத்துவிடக் கூட
முடியாது

கடவுள்
மதங்களால்
பிரிக்கிறார்
காதல்
மனங்களால்
இணைக்கிறது

கடவுள்கள்
நிறையப் பேர்
இருக்கிறார்கள்
காதல்
ஒன்றுதான்

பேசாமல்
காதலையே
கடவுளாக்கி
விடலாமோ
என்றுகூடத்
தோன்றுகிறது...