6.23.2012

உயில்க்கவிதை

வழியெல்லாம் வலி
பயணிக்கிறது
வாழ்க்கை

இன்னும்
முடிவாகவில்லை
ஆனாலும்
தொடங்கிவிட்டேன்
பயணத்தை

எதோ ஒரு
புள்ளியில்
திருப்பம் வரும்
அது மரணமாகக்கூட
இருக்கலாம்

மரணத்தைப்
பார்க்கும்போதுதான்
ஜெயிக்கிறது
வாழ்க்கை

வாழ்க்கைக்காக
காத்திருக்க முடியாது
இருப்பது இன்னும்
கொஞ்சநாட்கள்

6.16.2012

தடுக்கி விழுந்தேன்! காதலில் ....

உன்னை
முதன் முதலாகப்
பார்த்தபோது
என் கண்களுக்கு
மோட்சம் கிடைத்தது

உன்னோடு
முதன் முதலாக
பேசியபோது
என் வார்த்தைகளுக்கு
மோட்சம் கிடைத்தது

நீ
முதன் முதலாக
பேசியபோது
என் காதுகளுக்கு
மோட்சம் கிடைத்தது

உன்னை
முதன் முதலாக
காதலித்தபோது
என் உயிருக்கு
மோட்சம் கிடைத்தது

இறக்காமலேயே
மோட்சம் அடைவது
காதலில் மட்டும்தான்
சாத்தியம்

இத்தனை காலமும்
என்னோடு இருந்த
என் உயிர்
உன்னைப் பார்த்த
அந்த நொடியில்
உனக்குள் ஓடி
ஒளிந்துகொண்டது

என் கண்களைக்
குருடாக்கிவிட்டாலும்
உன்னை நான்
பார்ப்பேன்
உன்னை நான்
பார்ப்பது
கண்களால் அல்ல
மனதினால்

தெருப் பிள்ளையாரைப்
பார்த்தவுடன்
உன் தலையிலும்
மனதிலும்
குட்டிவிட்டுப்
போகின்றாய்

எனக்கு காதலில்
நம்பிக்கை இல்லை
என்று சொல்லிவிட்டுப்
போகின்றாய்
முட்டாள் பெண்ணே !
உலகத்தில்
உத்தரவாதம் இல்லாமல்
நம்பக்கூடிய
ஒரே விடயம்
காதல் மட்டும்தான்


என் அம்மா
என் மீது
வைத்திருக்கும்
அத்தனை
அன்பையும்
நான் உன்மீது
வைத்திருக்கிறேன்

எனக்கு
அன்னையைப்போல்
ஒரு தெய்வம் இல்லை
அதேபோல்தான்
காதலியைப்போல
ஒரு கடவுள் இல்லை


என்னைப்
பிடிக்கவில்லை என்று
சொல்லிவிட்டுப்
போய்விட்டால்
கடவுளே
நான் இறக்காமலேயே
அவளுக்குப்
பிடித்தவனாய்ப்
பிறக்கும் வரம்
தருவாயா?



மன்னித்துக்கொள்
உனக்காக என்னால்
தாஜ்மகால்
கட்டமுடியாது
ஏனென்றால்
நீ இறந்தபின்பு
தாஜ்மகால்
கட்டவேண்டிய
காலமளவுக்கு
என்னால் உயிரோடு
இருக்க முடியாது

என் தலையெழுத்து
மிகச் சிறியது
உன் பெயர்
அதன்பின் ஒரு
முற்றுப்புள்ளி
அவ்வளவுதான்

இத்தனைகாலமும்
எனக்குள் சிறைப்பட்டுக்
கிடந்தேன்
நீ பார்த்தபின்புதான்
விமோசனம் பெற்று
வெளியே வந்தேன்

உன்னை
நினைத்துக்கொண்டே
வாழ்ந்துவிடுவேன்
ஆனால் உன்னை
நினைக்காமல்
சாகக்கூட முடியாது


கருவிலிருக்கும்
குழந்தை
உதைக்கும்போது
அம்மாவுக்கு கிடைக்கும்
சந்தோஷம்தான்
நீ முறைக்கும்போது
எனக்குக் கிடைக்கின்றது

காலில் தடுக்கி
விழுந்தால்
உடலில் காயம்
காதலில்
தடுக்கி விழுந்தால்
மனதில் காயம்




6.03.2012

எஸ் .பி.பி க்கு எனது பிறந்தநாள் பரிசு

தமிழுக்கு
சாமரம் வீசும்
உன் நாக்கு

குரல் வளைக்குப்
பதிலாக
உனக்கு மட்டும்
சுருதிப் பெட்டியை
வைத்துவிட்டான்
கடவுள்

ராகத்தில்
வேண்டுமானால் வெறும்
ஏழு ஸ்வரங்கள்
இருக்கலாம்
உன் குரலில்
எண்ணிக்கையில்லா
ஸ்வரங்கள்

உன் உச்சரிப்பில்
மீண்டும் ஒருமுறை
உயிர்த்தெழும்
தமிழ்

தமிழுக்குப்
பெருமை சேர்த்தவர்களில்
நீயும் ஒருவன்

உன் குரல்
இன்னும்
ஓங்கி ஒலிக்கட்டும்