7.29.2011

காதலில் அடிக்கடி சொல்லப்படும் பொய்கள்

சொல்லொன்னாத்
துயரம்
நீ
இல்லையென்று
சொல்லிய
வார்த்தை ....

சொல்லிய துயரம்
நான்
கவிதையில்
சொல்லிடும்
வார்த்தை ..

உன் புன்னைகை
முழுவதும்
பொய்களின் வாசம்

நீ பேசிடும்
பொய்களில்
கவிதையின் வாசம்

உனக்கென
இருக்குது என்
உயிரெல்லாம்
நேசம்

உனக்குள்ளே
இல்லை
என் மீது
ஒரு துளி
பாசம் ..

உன் பார்வையில்
தெரியுது
பல பல
மாற்றம்
ஆனால்
எவற்றிலும் இல்லை
எனக்கான
தோற்றம் ..

துடிப்பதற்கு
மட்டுமில்லை
காதலில்
வலிப்பதற்கும்
தேவையொரு
இதயம்..

எத்தனை முறை
செத்தாலும்
நீ இருக்கும்
இந்த உலகத்தை
விட்டுப் போக
மனமில்லை
எனக்கு..

காதலிக்கும்
போது
மட்டும்தான்
மரணம் வரும்
முன்னே
வாழ்க்கை வரும்
பின்னே ...

என் மீது
இரக்கம்
தேவை இல்லை
கொஞ்சம்
விருப்பம் வை
போதும்...

கொஞ்சம்
புன்னகை
கொஞ்சம்
மௌனம்
நிறையக்
காதல்
சேர்த்துச் செய்த
கலவை
என் மரணம் ..

7.16.2011

ஒரு அவதாரத்தின் கதை ....



என் அம்மாவுக்கான என் சமர்ப்பணம் ....





அம்மா நீ
இறக்கவில்லை
ஒரு அவதாரம்
தன் கடமையைச்
செய்துவிட்டுப்
போய்விட்டாய்
அவ்வளவுதான் ...


உனக்காக - ஒரு
நாள்கூட
வாழாமல்
ஒவ்வொரு நாளையும்
எங்களுக்காக
வாழ்ந்தாயே
உனக்காக உன்னை
வாழவைக்க
நினைத்தபோது
வேண்டாம் என்று
போனாயே ....

உன்னை
உருக்கித்தானே
எங்களை
உருவாக்கினாய்....

நீ
தாய்ப்பால் தந்தது
கொஞ்சம்தான்
ஆனால்
அளவுக்கதிகமாகவே
அறிவுப்பாலையும்
துணிவுப்பாலையும்
தந்துவிட்டுப்
போய்விட்டாய் ...


ஒரு கிராமத்தின்
மூலையில் இருந்து
உலகளவு
உன்னால் சிந்திக்க
முடிந்தது...
ஒழுக்கமாகவும்
சிந்திக்கமுடிந்தது
அதனால்தான்
எங்களால்
இந்தளவு உயரவும்
முடிந்தது
ஒழக்கமாக இருக்கவும்
முடிந்தது...

பாரதியின்
கனவில்தான்
புதுமைப்பெண்
இருந்தாள்
எல்லோரின்
கண்முன்னே
புதுமைப்பெண்ணாய்
நீ வாழ்ந்துகாட்டினாய்....

உன்னைப்போல
ஒரு அம்மா
கிடைத்தால்
இந்த உலகத்தில்
எல்லாக்
குழந்தையும்
நல்ல குழந்தையே ...


உலகத்தின்
அம்மாக்களுக்கெல்லாம்
நீ
முன்னுதாரணம் ...

தன்னம்பிக்கையில்
நீ
தனித்துவம்

ஒழுக்கத்தில்
நீ
யாரும் எட்ட
முடியாத
உயரம் ...

உலகத்தில்
நீ
உன்னதம்

உன்
வாழ்க்கையில்
நீ
சரித்திரம் ...

மற்றவர்
வாழ்க்கையில்
நீ
வழிகாட்டல் ...



நீயோ
சொர்க்கத்திற்குப்
போய்விட்டாய்
நாங்களோ
இன்னும்
நரகத்தில்...


நாங்கள்
உன்னைப்
பார்த்துக்கொள்ள
முடியாத
தூரத்திற்கு
நீ போய்விட்டாலும்
நீ எங்களைப்
பார்த்துக்கொள்ளும்
தூரத்தில்தான்
இருப்பாய்
என்று நம்புகிறோம்...


நீ
அம்மாவாக
இல்லையென்றால்
இனி
எங்களுக்கோர்
பிறப்பே
வேண்டாம்...


அம்மா நீ
இறக்கவில்லை
ஒரு அவதாரம்
தன் கடமையைச்
செய்துவிட்டுப்
போய்விட்டாய்
அவ்வளவுதான் ...


7.04.2011

கேள்விக்குறியாகும் மட்டக்களப்பு மருத்துவ பீடத்தின் எதிர்காலம்

எத்தனை துயரங்களை கடந்து வந்தாலும் தமிழர்களின் இருப்பை இன்னும் நிலை நிருத்தியிருப்பதில் அவர்களின்கல்வித்திறனுக்கும்முக்கிய பங்கு இருக்கிறது. அவர்களின் கல்வித்திறனை தமிழ் மண்ணிலிருந்தே உலகுக்கு பறை சாற்றுவதில் யாழ் மருத்துவ பீடத்தின் பங்கு அளப்பரியது. எத்தனை தடைகள் வந்தபோதும் எந்தத் தடையும் இல்லாமல் கல்வியில் என்றும் போல் மிளிர்ந்து கொண்டேயிருக்கிறது யாழ் மருத்துவபீடம்.

வடக்கிலே மட்டும் மருத்துவ பீடத்தைக் கொண்டிருந்த எமக்கு சில வருடங்களுக்கு முன்பு கிழக்கிலே மட்டு நகரில் வரப்பிரசாதமாக வாய்க்கப் பெற்றது இன்னொரு மருத்துவ பீடம். முற்று முழுதாக தமிழர்களினால் மட்டுமே நிர்வாகிக்கப்படும் மட்டக் களப்பு மருத்துவ பீடத்தையும் யாழ் மருத்துவ பீடம் போல் தரத்தில் உயர்த்துவது எமது கடமையாகும்.
ஆனாலும் இப்போதுள்ள நிர்வாகத்தின் நடவடிக்கைகள் காரணமாக அந்த மருத்துவ பீடத்தின் தரம் கேள்விக் குறியாகியுள்ளது.

ஒவ்வொரு துறைக்கும் பல பேராசிரியர்களை கொண்டிருக்கும் மற்றைய மருத்துவ பீடங்களே உள் நாட்டு மருத்துவபட்டதாரிகள் வைத்திய சேவையில் இணைந்து கொள்வதற்கு முன்பு அவர்களை தற்காலிக விரிவுரையாளர்களாகசேர்த்துக் கொண்டு கனிஷ்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவ வழி செய்கிறார்கள்.

ஆனால் போதியளவு விரிவுரையாளர்கள் இல்லாத நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மருத்துவ பீடத்தின்நிர்வாகமோ உள்நாட்டு மருத்துவ பட்டதாரிகள் தற்காலிக சேவை வழங்க முன் வந்தாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

மாறாக அவர்கள் அறிந்த அல்லது அவர்களுக்கு வேண்டிய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை ஏற்றுக் கொள்வதிலேயேஆர்வம் காட்டுகிறார்கள். வெளிநாட்டுப் பட்டதாரிகளின் கற்றல் முறை வேறு , உள்நாட்டு கற்றல் முறை பரீட்சை முறை
என்பவை வேறு.

இலங்கை முழுவதும் பொதுப்பரீட்சையாக நடைபெறும் இறுதியாண்டு மருத்துவப் பரீட்சைக்கு மாணவர்களை தயார் படுத்துவதில்உள்நாட்டு பட்டதாரிகளாலே உதவமுடியும்.

குறிப்பாக உள்நாட்டு பட்டதாரிகள் மருத்துவ சேவைக்கு நேரடியாக சேர்த்துக் கொள்ளப் படும் போதும் வெளிநாட்டுப் பட்டதாரிகள்போட்டிப் பரீட்சை மூலம் மீண்டும் அவர்களின் திறமை பரீட்சிக்கப் பட்டே சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். திறமையான வெளிநாட்டு
பட்டதாரிகள் அந்தப் பரீட்சையில் சித்தி பெற்று மருத்துவ சேவையில் இணைந்து கொள்ள அந்த பரீட்சையில் சித்தி பெற முடியாத அல்லது சித்தி பெற முயற்சிக்காத சில வெளிநாட்டு பட்டதாரிகளே மருத்துவ பீட நிர்வாகத்தில் உள்ள சிலரின் அறிமுகத்தை வைத்து விரிவுரையாளர்களாக இணைந்துகொள்வது மருத்துவ பீடத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

மேலும் மருத்துவ பீடத்தின் விரிவுரையாளர் நேர்முகப் பரீட்சையில் மருத்துவ பட்டதாரி நீக்கப் பாட்டு வேறு துறையில் பட்டம் பெற்ற ஒருவர் சித்தி பெறும் அதிசயமும்
மட்டு மருத்துவ பீடத்திலேயே நடைபெறும்.

இதுசம்பந்தமாக எல்லோரும் விழித்துக் கொண்டு நமது எதிர்ப்பை வெளிக்கொணர வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும்.