6.21.2009

பரிணாமத்தை இழுத்துப் பிடிக்கும் மனிதர்களும் முந்த நினைக்கும் மனிதனும்...


இன்று

காலை 9.௨0 மணி மட்டக்களப்பின் கிழக்கே இருக்கும் கிரான்குளம் என்ற கிராமத்தின் கிறவல் புழுதி பறக்கும் புழுதிக் காட்டு வீதியில் ....


என்ன இசக்கி எப்படி இருக்கா? பொண்டாட்டி புள்ளைகள் எல்லாம் சுகம்தானே ?
கேட்டவாறே கடந்து போனான் சுப்பிரமணி.

இசக்கி எனப்படும் இசக்கிமுத்துவுக்கு பெருமை கொள்ளவேயில்லை.பின்ன இருக்காத என்ன? 65 வயசிலதான் ஊரில நாலு பேர் அவனையும் இசக்கி என்று பெயர் சொல்லி கூப்பிடும் பாக்கியம் கிடைச்சிருக்கு , இதைவிட வேறென்ன சந்தோசம் இருக்கும் ஒரு மனுஷனுக்கு.

அந்த சந்தோசத்திலேயே அவனுடைய புது வேட்டி காற்றில் மிதக்க , அந்த வயசிலயும் அவ்வளவு வேகமா மிதிச்சான் புது லுமாலா சைக்கிளை.

கொஞ்ச நாளைக்கு முன்தான் வாங்கின துவைச்சுப் போட்ட வேட்டி சட்டை , புதுச் செருப்பு , புது லுமாலா சைக்கிள் எல்லாமே இப்ப கொஞ்ச நாளாகத்தான் .

சில வருடங்களுக்கு முன்....

காலை 9.20 மணி மட்டக்களப்பின் கிழக்கே இருக்கும் கிரான்குளம் என்ற கிராமத்தின்கிறவல் புழுதி பறக்கும் புழுதிக் காட்டு வீதியில் ....


பல நாட்களாக துவைக்காத வேட்டி சட்டையும் , அவசரத்துக்கு செயின் அறுந்து கழுத்தறுக்கும் கரல் பிடித்த சைக்கிளும், தேய்வதற்கு எதுவும் இல்லாமல் காலை தேய்க்கும் செருப்போடும் இசக்கி முத்து .

``
என்ன அம்பட்டா , கனகத்தின்ட பிள்ளைக்கு மொட்டை அடிக்கவா போயிட்டு இருக்கா? ``
கேட்டபடியே கடந்துபோனான் சுப்பிரமணி.

அப்போதெல்லாம் இப்படித்தான் அவனை டேய் `அம்பட்டா ` என்றுதான் ஊரில எல்லோரும் அழைப்பார்கள் . சின்ன வயசில் அவனை எல்லோரும் அம்பட்டன் மகன் என்று சொல்வார்கள் , அவன் என்றைக்குக் கத்தரிக்கோல் தூக்கினானோ அன்றிலிருந்து எல்லோரும் அவனை அம்பட்டா என்றே அழைக்கத் தொடங்கினார்கள்.

என்ன செய்யிறது ? ????????
நம்மட பரம்பரையில கால காலமா எல்லோரையும் இப்படித்தானே அழைக்கிறார்கள் என்று அவனையே அவன் ஆறுதல் படுத்திக் கொண்டாலும் அம்பட்டன் என்று அழைப்பவர்களுக்கு இருந்ததைவிட கொஞ்சம் அதிகமாக இவனுக்கு இருந்த பகுத்தறிவு அவனை கொஞ்சம் சங்கடப் படுத்தத்தான் செய்தது .

அதனால்தான் , அவன் பிள்ளைகளை அவனின் கடைப்பக்கம் கூட வர விடுவதேயில்லை . பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து இந்த சமூகத்தில கௌரவமாக வாழ வைக்கவேண்டும் என்ற வைராக்கியத்தை பிள்ளைகளுக்கும் சின்ன வயசில் இருந்து ஊட்டியே வளர்த்தான் .

மூத்தவன் நாதசிங்கம் , நல்லாத்தான் படிச்சான் . இருந்தாலும் என்ன செய்ய பல்கலைக்கழகம் போற அளவுக்கு ரிசல்ட் வராததால் மனமுடைஞ்சவன் அப்பாவோட அம்பட்டன் கடைக்கு வேலைக்கு வரப் போவதாய் அடம் பிடிக்கத் தொடங்கியபோதுதான் , ஊரில இருந்த நல்லமுத்து என்ற கொஞ்சம் படிச்ச பெரியவர் சொன்ன படி மகன் நாதசிங்கத்தை எப்படியாவது அவுஸ்திரேலியா அனுப்பி வைப்பதென்று முடிவெடுத்தான்.

ஒரு மாதிரியாய் ஊர் எல்லையில் இருந்த பாழடைஞ்சு போன வளவை விற்றும், மனிசிட தாலிக் கொடியை விற்றும், மிச்சத்தை வட்டிக்கு வாங்கியும் மகனை கள்ள பாஸ்போட்டில் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவிட்டான்.

நாதசிங்கம் வெளிநாட்டுக்குப் போகும் போது மனசு முழுக்க அவன் நினைத்துக் கொண்டே இருந்தது, சின்ன வயசில அவன் அம்பானி பற்றி வாசித்ததுதான். அம்பானியும் இப்படி வெளிநாட்டுல குடியேறியவர்தான், ஆனாலும் வேலை வேலை எண்டு இருக்காம கூடவே அந்த நாட்டின் தொழில் நுட்பங்களையும் படித்ததால்தான் நல்ல நிலைக்கு உயர்ந்தவர் என்ற அந்த வரலாறு அவனையும் தூண்டியது.

அவுஸ்திரேலியாவில் கிடைத்த அகதி அந்தஸ்த்துடன் கிடைக்கிற வேலைகளை செய்து பணம் உழைப்பதில் மட்டும் குறியாக இருக்காமல் , பகுதி நேரமாக படிக்கவும் செய்தான்.

மகன் மற்றவங்களைப் போல கிடைக்கிற வேலையோட மட்டும் இருந்துவிடாமல் கூடவே படிக்கவும் செய்யுறான் என்று கேட்கும் போது இசக்கிமுத்து அடைகிற சந்தோசத்துக்கு அளவே இல்லை. மகன் என்ன படிக்கிறான் என்று அவன் ஆங்கிலத்தில சொல்லுற பெயர் விளங்காவிட்டாலும், போனில கதைக்கும் போதெல்லாம் திரும்ப திரும்ப அந்தப் பேரைக் கேட்டே சந்தோசப் பட்டுக் கொள்வான்.

ஒருமாதிரியாய் மகன் அவுஸ்திரேலியா போய் ஐந்து வருசத்திலேயே படிப்ப முடிச்சு அங்கே நல்ல வேலையிலும் செட்டிலாகி விட்டான், அவன் அனுப்புற காசால்தான் இசக்கி முத்துவுக்கு இப்போது இந்த மரியாதையெல்லாம்.


சில நாட்களுக்கு முன்பு , போனில கதைக்கும் போது நாதசிங்கம்,

``அப்பா
நான் வார கிழமை வேலை விசயமா இந்தியா போறன், அப்படியே விஜய் டிவி யிலையும் ஒரு பேட்டியும் தரச்சொல்லி கேட்டு இருக்காங்க , ஞாயிற்றுக் கிழமை விடியம் 8 மணிக்கு பாருங்கோ என்றான்.``

எங்கட நாட்டில் யுத்தம்என்று சொல்லித்தான் அவுஸ்திரேலியாவில அகதி அந்தஸ்த்து எடுத்ததால இந்தியாவுக்குப் போனாலும் பக்கத்தில இருக்கிற அவனுடைய நாட்டுக்கு வர முடியாம இருக்கே என்று இசக்கிக்கு கொஞ்சம் வருத்தம்தான்.

இருந்தாலும் டிவியில மகனைப் பார்க்கப் போறமே என்ற சந்தோசத்தில 11725 ரூபா கொடுத்து இப்பதான் புதுசா கேபிள் தொடர்பு எடுத்தான் . அப்படியே ஊர்முழுக்க தம்பட்டம் வேற அடிச்சிட்டான்.

நாளை

ஞாயிற்றுக் கிழமை
காலை 7.50 மணி

ஊரில கேபிள் இணைப்பு இருந்த டிவிகளுக்கு முன்னால் ஊர்ச் சனம் எல்லாமே கூடிவிட்டன .
சும்மாவா! அவர்களின் ஊரில் இருந்து ஒருவன் முதன் முதலாடிவியில வரப்போறான். அதுவும் இந்தியாவில இருக்கிற பெரிய டிவி சனல் ஒன்றில் வரப்போறான்.


நேரம் 7.58 ... 7.59... 8.00

``
வாழ்வோம் எங்கு
சென்றாலும் வீழோம்
தமிழைக் கொண்டாடி
வாழ்வோம்..
தமிழை நேசித்தே
சாவோம்`` என்ற அறிமுகப் பாடலோடு தொடங்கிய நிகழ்ச்சியை கஷ்டப்பட்டு தமிழ் ஏசி இல்லை இல்லை பேசி தொங்கினார் ஒரு மேக்கப் அழகி...

வணக்கம் ரசிகர்களே !

இன்று நாம் ` மிளிரும் தமிழகம் ` நிகழ்ச்சியில் சந்திக்கப் போவது, அவுஸ்திரேலியாவிலே ஹேர் டிரெஸ்ஸிங் பட்டப் படிப்பை முடித்து இன்று உலகப் புகழ் பெற்ற சிகை அலங்கரிப்பு நிபுணராக இருக்கும் இசக்கி முத்து நாதசிங்கம்....

அப்படியே சுமூகமாக 9 மணிவரை தொடர்ந்தது நிகழ்ச்சி ..

காலை 9.05 மணி
பேட்டி முடிந்தவுடன் நாதசிங்கம் ஸ்ரூடியோவை விட்டு வெளியே வந்து தன் போனை ஆன் பண்ணினான்.

``ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்...``
அவன் கைப்பேசியின் அழைப்பு மணிப் பாடல் ஒலித்தது.

அடுத்தமுனையில் அழைத்த அந்த நபர் ஆங்கிலத்தில் இப்படிச் சொன்னார் .
``ஹலோ நான் சச்சின் டெண்டுல்கார் பேசுறன், நீங்கள் தோனிக்கு செய்து விட்ட ஹேர் ஸ்டைல் மாதிரி நானும் செய்ய வேணும் என்று விருப்பப் படுகிறேன்.
உங்களின் நேரம் கிடைக்குமா ?``

அப்படியே தொடர்ந்தது உரையாடிக் கொண்டிருந்தார்கள் சச்சினும் நாதசிங்கமும் ...

காலை 9.௨0 மணி மட்டக்களப்பின் கிழக்கே இருக்கும் கிரான்குளம் என்ற கிராமத்தின் கிறவல் புழுதி பறக்கும் புழுதிக் காட்டு வீதியில் ....

புது லுமாலா சைக்கிளில் புது வெட்டி சடையோடும், புதுச் செருப்போடும் இசக்கி முத்து.

எதிரே வந்த சுப்பிரமணி இப்போது இசக்கி முத்துவை தவிர்த்து , பக்கத்தில போன ஒருவரோடு பேசினான்..

``பார்த்தியாடா நம்மட அம்பட்டன் மகனை, அவன் அவுஸ்திரேலியா போயும் அம்பட்டன் வேலைதான் பார்க்கிறானாம்.
எங்கே போனாலும் சாதிப் புத்தி போகுமா பின்ன ............................................................
.......................................................................................
இப்படி கதைத்துக் கொண்டே போனான் சுப்பிரமணி.``


முற்றும்

*************************************************************************************

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.பி.கு- நண்பர்களே! இதுதான் நான் எழுதும் முதல் கதை ( சில பேர் இதைப் போய் கதை என்று சொல்லி கதை அளக்கிறாயா என்பது விளங்குகிறது).

முதலாவது என்பதால் ஏதோ கதை என்று ஏற்றுக் கொள்ளலாம் எனும் நண்பர்கள் தயவு செய்து தமிழ் மனத்தில் உங்கள் வாக்குகளை அளித்து இதை போல மேலும் சில கதைகள் எழுத முயற்சி செய்ய ஒரு சின்ன டோஸ் ஊக்கம் தாருங்கள்.


12 comments:

தீப்பெட்டி said...

கதை உண்மையாகவே நன்றாக இருக்கிறது..

மக்கள் மனதை படம்பிடித்து காட்டுகிறது.

வெற்றிபெற வாழ்த்துகள்..

S.A. நவாஸுதீன் said...

கதை நல்லா இருக்கு மயாதி - வாழ்த்துக்கள்

nilavakan said...

i

வேத்தியன் said...

மயாதி கலக்கியிருக்கீங்க...

இலங்கையிலிருந்தும் ஒரு கதை..
நமக்கு எழுத வராது..
அதனால வேணாம்ன்னு விட்டாச்சு..
:-)

வாழ்த்துகள் நண்பரே...

மயாதி said...

தீப்பெட்டி said...

கதை உண்மையாகவே நன்றாக இருக்கிறது..

மக்கள் மனதை படம்பிடித்து காட்டுகிறது.

வெற்றிபெற வாழ்த்துகள்..//

நன்றி நண்பரே

மதுவதனன் மௌ. said...

மாயாதி,

கதை நல்லாத்தான் வந்திருக்கு... வாழ்த்துக்கள்...

நானும் உரையாடல் அறிவிப்பைப் பாத்து ஒரு கதை எழுதியிருக்கேனாக்கும்..
:D

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

கதை நல்லா இருக்கு மயாதி - வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணா

மயாதி said...

வேத்தியன் said...

மயாதி கலக்கியிருக்கீங்க...

இலங்கையிலிருந்தும் ஒரு கதை..
நமக்கு எழுத வராது..
அதனால வேணாம்ன்னு விட்டாச்சு..
:-)

வாழ்த்துகள் நண்பரே...//

நேற்று வரை நானும் முடியாது என்றுதான் நினைத்தேன் , ஆனாலும் சும்மா முயன்று பார்ப்போம் என்று எழுதத் தொடங்கினேன் , இப்படி வந்திருக்கிறது.
பார்ப்போம் எத்தனை வாழ்த்துக்கள் வருகிறது என்று?

நீங்களும் ஒரு தடவை முயன்று பாருங்கள்.

நன்றி நண்பா

நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...

தெளிவான நடையில் ஆழமான சமுக பதிவு .. நல்ல இருக்கு .. வாழ்த்துக்கள்

மயாதி said...

நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...

தெளிவான நடையில் ஆழமான சமுக பதிவு .. நல்ல இருக்கு .. வாழ்த்துக்கள்//

நன்றி நண்பரே !

ஜெஸ்வந்தி said...

கதையைப் பற்றிக் கனக்கத் தெரியாது என்று இப்படிக் கதை எழுதினால் என்ன அர்த்தம்.?
இப்போ யார் பொய் சொல்வது என்று தெரிகிறதா?
கவிதையில் புதுமை செய்தது போல் இப்போ கதையிலும் புதுமைதான் தெரிகிறது.
நல்லா இருக்கு.

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் சிறப்பான கதை. எழுதப்பட்ட நடையும், கதையில் இருக்கும் அழுத்தமும் அசத்தல்.

படித்துக்கொண்டிருக்கும்போதே நிகழ்வுகளை கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்து காட்டும் வகையில் எழுதப்பட்ட வரிகள்.

கதையை முடித்த விதம் கதைக்கு முத்தாய்ப்பு. மிக்க நன்றி.