6.30.2009

வாழ்க்கை நிறையக் கவிதை -பகுதி 3

பல வருடங்கள்
படித்து
தலைமைச்
சமையல் காரன்
ஆனவனுக்குக் கூட...
முதலாம் வகுப்பே
படித்த அம்மாவின்
கைப் பக்குவம்
இல்லை...என் நகம்
வெட்டும் நான்
உயர் ஜாதி...
என் தலைமுடி
வெட்டுபவன்
கீழ்ஜாதி...?நாளைக்கு
நான்
வேலைக்கு
வேளைக்குப்
போக வேண்டும்
என்பதற்காக ....
என் நித்திரையை
குழம்பி விடாமல்
நடுச்சாமத்தில்
அழும் குழந்தையை
அவசரப்பட்டு
அணைக்கும்..
மனைவியின்
அக்கறையை
ரசிப்பதற்காகவே...
விழித்துக் கொள்கிறது
மனசு...வேறு பெண்களைப்
பார்த்தாலே
சகோதரியாக
நினைக்கும் மனசு
வீதியில் நின்று
``போலாமா ?``
என்று கேட்கும்
பெண்களை
என்ன
முறைகொண்டு
நினைப்பது...?

குங்குமத் தொடர் தொடரும்..
இது அவசரமாய் கவிதை கேட்ட ஜமால் அண்ணாவுக்காக சமர்ப்பணம்...

எங்கள் குழந்தைகள் இப்படித்தான் பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்)

மு.கு- இது சிரிப்பதற்காக அல்ல. எங்கள் அவலத்தை சில மர மண்டைகளுக்கு உணர்த்துவதற்காக.
ஒரு அனானி நண்பர் ஆங்கில மொழி பெயப்புக் கேட்டு இருக்கிறார் , முடிந்தவர்கள் பின்னூட்டத்தில் மொழி பெயர்த்துத் தந்ததால் தமிழுக்கு கீழேசேர்த்து விடுகிறேன்.

என்ன வயித்தில எவ்வளவு பெரிய வெட்டு என்று பார்க்கிறீங்களா?
அதொன்றுமில்லை வயிறு பெரிசா இருக்குதாம் என்ற சந்தேகத்தில செக் பொயிண்டில் (check point)வெட்டிப் பார்த்தவங்க.


இண்டைக்காவது ஒரு துளி பாலை வாயில காட்டு அம்மா


வாவ் ! இன்னும் கொஞ்ச நேரத்தில முந்தநாள் செத்துப் போன அம்மாவை போய்ப் பார்க்கப்போறேனே!கடவுளே ! இண்டைக்காவது இந்தச் சொம்பில் அறைவாசிக்காவது கஞ்சி வாங்கிடனும். அப்பத்தான் குடும்பத்தில இருக்கும் அஞ்சு பேரும் சமாளிக்கலாம்.100 பேர் இடம் பெயர்ந்து போகும் போது ஷெல் விழுந்து 60 பேர் செத்துப் போனால் மிஞ்சுவது 40பேர்தானே ரீச்சர்?


செத்துப் போய் விட்டோம் என்று கவலைப் படாதே தம்பி , நாம இனி கல்லறையில ஒளிச்சுப் பிடிச்சு விளையாடலாம்.

அங்கிள்! ஏழாவது அகதி முகாமில எட்டாவது குடிசையில ஒன்பதாவது குடும்பத்தில் இருக்கும் , என் அம்மாட்ட நான் செத்துப் போயிட்டான் என்று சொல்லி விடுங்கள் அங்கிள்.


அப்பா ! நான் இங்கே நாலாவது சவத்திற்குப் பக்கத்தில படுக்கிறன்.

நல்ல அங்கிள்! கால் கடுக்குது என்ற உடனேயே குந்தி இருக்க அனுமதிச்சிட்டார்.

நாங்கதானே உங்கள் ஆசைப்படி செத்துப் போயிட்டம். இனியாவது இறக்கி விடுங்களேன் , கழுத்து வலிக்குது.


6.29.2009

பிச்சைக்காரனை விட ஒரு ரூபாய் கம்மி

கொழும்பு நகரில்
அன்று மதிய நேரம்...

பசியின் அவசரத்தில் நல்ல தரமான கடைக்கு போக அவகாசமில்லாமல் , நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலே இருந்த ஒரு சிறிய சாப்பாட்டுக் கடையில் சாப்பிடப் போனேன். சின்னக் கடையானாலும் சாப்பிட முன் பாத்திரத்தை சுடு நீரால் கழுவித்தான் தந்தார்கள். ஆனாலும் சாப்பாடு பரிமாறுபவர் வெறும் தண்ணியால் கை கழுவியே நிறைய நாட்கள் இருக்கும் போல இருந்தது. இருந்தாலும் என்ன பசியின் அவசரம் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை.

சாப்பிடத் தொடங்கிவிட்டேன்!
சாப்பிடும் போதுதான் கவனித்தேன் நான் இருந்த மேசைக்கு அருகில்தான் குப்பை போடும் வாளி இருந்தது. அந்தக் கடையில் பாத்திரத்தின் மேல் லஞ்ச் சீட் எனப்படும் மெல்லிய பொலித்தின் போட்டு அதிலேதான் சாப்பாடு பரிமாறுவார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் அந்த லஞ்ச் சீட்டை அப்படியே மடித்து அந்தக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, கடமைக்கு ஒருதரம் பாத்திரத்தை சுடுநீரில் பந்தாவாக காட்டிவிட்டு மீண்டும் சாப்பாடு வழங்கப்படும் (எல்லாக் கடைகளையும் போல)

எனக்கு முன் சாப்பிட்ட நிறையப் பேரின் மிச்ச சாப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக முடியப்பட்டு அந்த வாளியில் கிடந்தது. ஈக்கள் மொய்த்து அவற்றை சுவை பார்த்துக் கொண்டிருந்தன. பார்ப்பதற்கே அருவருப்பாய் இருந்த அந்த காட்சியை தவிர்த்து விட்டு சாப்பாட்டைத் தொடர்ந்தேன்.

அப்போது ஒரு பிச்சைக்காரன் வந்து அந்த வாளியை தன் கையால் கிளறத் தொடங்கினான். அவன் கையெல்லாம் ஈ மொய்த்துக் கொண்டிருந்தது. நான் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தேன்! சற்று நேரத்தில் கொஞ்சம் அதிகமாக மிச்ச சாப்பாடு இருந்த சில முடிச்சுக்களை தெரிவு செய்து கொண்டு வெளியில் சென்றான். அங்கே கடைக்கு வெளியில் அவன் மனைவியும் , இரண்டு குழந்தைகளும் நின்றிருந்தார்கள்.

அவன் அந்த குப்பை வாளியில் கிடந்த முடிச்சுக்களை கொடுக்க அவர்கள் சந்தோசமாக சாப்பிடத் தொடங்கினார்கள்.
எனக்கு அந்த குழந்தைகள் குப்பைத் தொட்டியில் சாப்பிடுவதை நேரில் பார்த்தும் மனசு கனக்கத் தொடங்கிவிட்டது (இதற்கு முன் படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்).

நான் எனது சாப்பாட்டுக் காசைக் கொடுத்துவிட்டு , வெளியே வந்தபோது அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தோன்றியதால், என் பேர்சில் மாற்றப் பட்டு சில்லறையாக வெறும் பதினேழு ரூபாயே தேறியது.

சரி அதையாவது கொடுப்போம் என்று நெருங்கியபோதுதான் கவனித்தேன் , அந்தப் பிச்சைக்காரன் கையில் ஒரு புது சிகரெட் , அப்போதுதான் பற்றவைத்துக் கொண்டிருந்தான். அது இலங்கையில் பிரபலமான கோல்ட் லீப் எனப்படும் சிகரெட் வகை. அது ஒன்றின் விலை 18 ரூபாய், நான் கொடுக்க நினைத்ததோ வெறும் 17 ரூபாய்.
யாவும் நிஜம்


என் பழைய கவிதையொன்று...

பிச்சைக்காரன்

மிச்சம் நமக்கு
குப்பை
அவனுக்குச்
சாப்பாடு

வந்து பாருங்கள் மலர்ந்திருக்கிறது காதல்


நீ வருவாய்
என்ற
எதிர்பார்ப்பிலேயே
தூங்க மறுக்கின்றன
என் கனவுகள்


என்
உயிருக்குப்
பதிலாய்
உன்னை வைத்தேன்...
நீ பத்திரமாய்
இருக்கிறாய்
என் உயிர்
அலைந்து
திரிகிறது ....
உன்
பின்னால்


என் மனதை
உடைத்து
தப்பிப் போகலாம்
என்று நினைக்காதே
மனதில் அல்ல
ரத்தத்தில்
கலந்து
உடம்பு முழுக்க
ஓட
வைத்திருக்கிறேன்
காதலை....


படம் புரட்டிப்போட்ட கவிதை..
இரட்டிப்பானது
பூமியின்
அழகு
நீ பிறந்த
போது..இரட்டிப்பானது
பூமியின்
அழகு
நீ பிறந்த
போது..

6.28.2009

A9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )

பல வருட யுத்த நிறுத்தத்திற்கு பிறகு யாழ்ப்பாணத்தில் மீண்டும் யுத்தம் வெடித்து A9வீதி உட்படஅனைத்து தரை மார்க்கமும் மூடப்பட்ட பிறகு ராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டராணுவக் கப்பல் பயண அனுபவங்களை பதிகிறேன்.பகுதி 1 ஏற்கனவே இடுகையிடப்பட்டது, ஏற்கனவே வாசித்து விட்டவர்கள் கீழே சென்று இறுதிப் பகுதியை வாசிக்கலாம்.

பகுதி -1

ஒரு யுத்தகள அனுபவம்!
சுற்றிவர பல் குழல் பீரங்கிகள் சீறிப்பாயும் மின்சாரம் இல்லாத கொடுமையான இரவுகள்.
வீட்டுக்குள் அடங்கியே கிடக்கவேண்டிய பகல் பொழுதுகள் .
அரிதாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கவே படை எடுக்கும் ஒட்டுமொத்த யாழ் மக்கள்.

நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்று யாழ்ப்பாணத்துக்கு வெளியில் இருக்கும் வீட்டுக்கு சொல்வதற்கு, எப்போதாவது அரிதாக கிடைக்கும் தொலைபேசி இணைப்பு.

ஆரம்ப கட்டத்தில் பண்பலைகள் கூட முடக்கப் பட்ட நிலையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஒரு சமூகமே தனித்து விடப் பட்ட உணர்வு.


இத்தனை கொடுமையான நிகழ்வுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் வாழப்பழகியது தமிழ் இனம். ஆரம்பத்தில் ஒரு நாளில் ரெண்டு மணிநேரமே வெளியில் செல்ல அனுமதித்த இராணுவம் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப் படும் நேரத்தை பல மணிநேரமாக்கியது.

ஊரடங்கு தளர்த்தப் பட்டு அதிக பகல் பொழுதுகளை வெளியில் கழிக்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், அதிர்கின்ற பல்குழல் பீரங்கிகளின் சத்தங்களின் நடுவிலே வீட்டுக்கு வெளியில் திரிவது எப்படி?

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியே செல்வதற்கான அத்தனை பாதைகளும் மூடப் பட்ட நிலையில், வதந்திகள் முளைக்கத் தொடங்கின...

செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் வருவதாகவும்,அல்லது ஏதோ ஒரு வெளிநாட்டுக் கப்பல் வருவதாகவும்,இந்தக் கப்பல் மூலம் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் , யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய யாழ்ப்பான மக்களும் பயணிக்கலாம் என்றும் முளைக்கத் தொடங்கிய இந்த வதந்திகள் இடையிடையே சின்ன சின்ன சந்தோசங்களை தரத்தான் செய்தன.

`` எல்லோரையும் ஏற்றிச் செல்ல கப்பல் வருமா?``
என்ற பாடல் இந்தியாவில் இருக்கும் அகதிகளுக்கு மட்டுமல்ல , எங்களுக்கும் பொருத்தமாகவே இருந்தது.
சொந்த நாட்டில் இருந்தாலும் நாங்களும் அகதிதானே ?


பல வாரங்கள் இப்படியே கழிந்து போனது!


திடீரென ஒரு நாள் யாழ் நகரமே பரபரப்பானது....

காங்கேசன் துறை துறைமுகத்தில் இருந்து திருகோணமலைக்கு ஒரு கப்பல் பயணிக்க இருப்பதாகவும் அதிலே பயணிக்க விரும்பும் நபர்கள் உடனடியாக குறிப்பிடப்பட்ட ஒரு ராணுவ தளத்திற்கு வரும் படியும் கேட்கப் பட்ட
யாழ் எப் . எம் எனும் அரச வானொலியின் அறிவுப்பே அந்த பரபரப்புக்கு காரணம்.

பயங்கரமான யுத்தம் நடைபெறும் நிலைமையில் ராணுவக் கப்பலில் பயணம் செய்வதா என்ற பயம் மக்களுக்கு கொஞ்சம் இருந்தாலும், அந்த நிலைமையில் நிறைய மக்களுக்கு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய தேவை இருந்ததை அந்தக் கப்பலில் பயணிப்பதற்காக கூடிய ஐந்து ஆயிரத்திற்கும் மேட்பட்ட மக்கள் தொகை காண்பித்தது.

பல ஆயிரம் மக்கள் கூடி விட்டாலும் குறிப்பிட்ட அளவு மக்களே பயணிக்கலாம் என்ற நிலையில் , எப்படியாவது பயணித்தே ஆக வேண்டும் என்ற அவசரத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் நசுபடத் தொடங்கினார்கள்.

பெண்கள் , குழந்தைகளோடு பெண்கள், வயதானவர்கள் என்று வித்தியாசம் இல்லாமல் மக்கள் நசுபடத் தொடங்கினார்கள். ஆயுதம் தாங்கிய ராணுவத்தாலேயே கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு தமிழின நெரிசல் நிலவியது .

சொந்த நாட்டினுள்ளேயே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க ஒரு இனமே நெரிசலில் நசிபட்டு கொண்டிருந்தது. தமிழ் தாய் அதிகம் வலி உணர்ந்த நாட்களில் அதுவும் ஒன்றாக பதிவானது.

இறுதியாய் பல்வேறு நெருக்குதல்களுக்கு பிறகு பல ஆயிரம் மக்களில் இருந்து வெறும் ஒரு ஆயிரத்துக்கு அண்மித்த மக்களே தெரிவு செய்யப்பட்டனர்.

காலையில் தொடங்கிய மக்கள் தெரிவு, முடிய மாலை ஆகிப்போனது.

பயணிக்கும் வாய்ப்பைப்பெர்ற அனைவரின் உடமைகளும் யாழ் நகரில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் முற்று முழுதாக சோதிக்கப்பட்ட பின்பு அனைத்து மக்களும் பஸ் வண்டிகளிலே ஏற்றப் பட்டார்கள். ராணுவம் பஸ்சில் இருந்து கண்காணிக்க பஸ் தெல்லிப்பழை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.
இதற்குள் ஊரடங்குச் சட்டத்திற்குரிய நேரம் தொடங்கி விட்டதால், வீதியெல்லாம் உறங்கிப் போய் மயானமாக காட்சி அளித்தது.

லேசாக இருட்டத் தொடங்கி விட்ட , வெறிச்சோடிய வீதியில், பஸ்ஸின் உள்ளே ராணுவம் கண்காணிப்பில் இருக்க , தூரத்தில் வெடிச் சத்தங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்க , பஸ் வண்டிகள் சீறிப் பாய்ந்தன தெல்லிப்பளை நோக்கி


தெல்லிப்பளை நெருங்கியபோது முற்றாக இருட்டி விட்டிருந்தது.

தெல்லிப்பளை வைத்தியசாலை உள்ள இடம்தான் மக்களுக்கான எல்லை, அதற்கு அப்பால் உள்ள அத்தனை இடமும் ராணுவம் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்ட இடங்கள்.

உயர் பாதுகாப்பு வலயம் என்பது, முற்று முழுதாக ராணுவத்தின் ஆக்கிரமப்பில் இருக்கும் இடம். அங்கேதான் அவர்களின் தலைமை அதிகாரிகளின் அலுவலகங்கள், ஆயுதக் கிடங்குகள் என்பவவை அமைந்திருக்கும்.

தெல்லிப்பளை, காங்கேசன் துறை மற்றும் பலாலி என்பவற்றை உள்ளடக்கிய உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மக்களுக்கு சொந்தமான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையம் கூட உள்ளடக்கப்படிருக்கிறது.இங்கேதான் ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் விநியோகிக்கப் படும் மார்க்கங்கள் அமைந்திருக்கின்றன.

அந்தளவிற்கு ராணுவ ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசத்திற்கு நாங்கள் அழைத்துச்செல்லப்பட்டோம். மிகவும் இருட்டி விட்டதால் பஸ்ஸின் விளக்கு வெளிச்சத்திலேயே வீதியோரங்க்களை பார்க்க முடிந்தது.
உடைந்த கட்டிடங்கள், வீட்டினுள்ளேயே வளர்ந்து நின்ற மரங்கள் , ராணுவச் சிப்பாய்கள் என்பவற்றைத் தவிர பார்ப்பதற்குஅங்கே வேறு எதுவுமே இல்லை.

கடைசியில் பஸ் தெல்லிப்பளையில் இருந்த ஒரு பாடசாலை கட்டிடத்தினுள் நிறுத்தப் பட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் கப்பலில் ஏறப்போகிறோம் என்ற எதிர்பார்ப்போடு இருந்த எங்களுக்கு இடையில் பஸ் நிறுத்தப் பட்டதும் கொஞ்சம் பதட்டம் பிடிக்கத்தொடங்கியது.

நாங்கள் தங்கி இருந்த கட்டடங்களுக்கு மிக அண்மையில் இருந்தும் பீரங்கிகள் முழங்கிக்கொண்டிருந்தன. சத்தத்தில் செவிப்பறை மென்சவ்வு உடைந்து விடும் உணர்வு. அன்றைய இரவுப் பகுதி ஒரு யுத்தகளத்திலேயே இருக்கும் உணர்வோடு கொஞ்சம் கொஞ்சமாய் கடந்து கொண்டிருந்தது....
பகுதி 2

சுத்திவர ஷெல் வீச்சுச் சத்தம், எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு குண்டு தவறுதலாக நாங்கள் தங்கி இருந்த கட்டடத்தினுள் விழுந்து வெடிக்கலாம் !

ஆனாலும் அங்கே தங்கி இருந்த ஒருவரின் முகத்தில் கூட அந்த பயம் இருப்பதை என்னால் உணர முடியவில்லை. கால காலமாய் யுத்த களத்திலேயே வாழ்ந்து பல இடப்பெயர்வுகளைச் சந்தித்த ஒரு இன மக்களுக்கு , சுத்திவர ஷெல் வீச்சு நடைபெற நடுவிலே ஒரு கட்டடத்தில் தங்கி இருப்பது என்பது பழகிப் போன ஒன்றாகிப் போனது.

எங்களோடு நேரடித் தொடர்புகளை வைத்திருந்த ராணுவத்தினர் , ராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ராணுவ சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களே அன்று இரவு தங்கி இருந்த இடத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.

இலவசமாக உணவுப் பொதிகள் வழங்கப் பட்டன. தற்காலிக சிற்றுண்டி சாலை ஒன்றையும் ராணுவத்தினர் ஏற்படுத்தி இருந்தனர்.சில காலமாக கடைகளில் பொருட்களை அதிக விலை கொடுத்தே வாங்கி பழக்கப்பட்ட மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நியாயமான விலையில் பொருட்களை ராணுவ கடையில் கண்டவுடன் இருப்புக் கொள்ளவில்லை. குறிப்பாக சிக்கிரட் புகைப்பவர்களுக்கு பெரிய கொண்டாட்டம் ஆகிப்போனது.

இப்படி ஒரு உச்ச கட்ட யுத்த பிரதேசத்திலும் நம் மக்கள் திருப்தியாக ஒரு இரவைக் கழிப்பதை பார்க்க எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அப்படியே நேரம் நடுசாமத்தைக் கடந்தவுடன், எல்லோரையும் பஸ் வண்டியினுள் ஏறும் படி ராணுவம் அழைத்தது. மீண்டும் பஸ் வண்டியின் விளக்கு வெளிச்சத்திலேயே வீதியோரங்களைப் பார்த்தபடி பத்து நிமிடப் பயணம்.

பஸ் வண்டி காங்கேசன் துறைத் துறைமுகத்துக்கு சற்று முன் ( கிட்டத்தட்ட 200m இருக்கும் ) நிறுத்தப்பட்டன.
அங்கே மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப் பட்டோம். அப்போது அருகில் நின்ற ஒரு ராணுவ வீரரிடம் கேட்டேன் ` ஏற்கனவே சோதித்து விட்டீர்கள் தானே ? `` மீண்டும் எதற்கு இந்தச் சோதனை என்றேன்.

அதற்கு அவர் `` முன்பு சோதனை செய்தது நாங்கள் ( தரைப் படை) , இப்போது சோதிப்பது கடற் படை`` என்றார்.

சோதனையின் போது , கூரிய ஆயுதங்கள் , பட்டறி போன்றவைதடை செய்யப் பட்டன. சேவிங் ரேசர் கூட கூரிய ஆயுதமாக தடுக்கப்பட்டது.

அத்தோடு அந்த இடத்திலேயே வைத்து அனைவரின் கைத்தொலைபேசிகளும் வாங்கி எடுக்கப் பட்டன. அதுவரை கைத்தொலைபேசி எங்களிடம் இருந்தாலும் , அப்போது யாழ் மண் முழுவதும் இணைப்பு துண்டிக்கப் பட்டு இருந்தது.வாங்கி எடுத்த கைத்தொலைபேசி, கமரா போன்றவை பக்குவமாக பொலித்தின் பைகளில் அடைக்கப் பட்டு, அதற்குரிய அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கப் பட்டன.

நடு இரவில் நடு வீதியில் வைத்து சோதிக்கப் பட்டோம். ஆரம்பத்தில் சோதிக்கப்பட்டவர்கள் எஞ்சிய ஆயிரக் கணக்கானவர்களின் சோதனை முடியும் வரை வீதியோரம் இருத்தப் பட்டோம். நிறையப் பேர் தங்கள் பயணப் பைகளை தலையனையாக்கி வீதியிலேயே உறங்கத் தொடங்கி விட்டனர்.

சில மணி நேர சோதனைக்குப் பிறகு, எல்லோரும் பஸ்சில் மீண்டும் ஏற்றப் பட்டு துறை முகத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டோம்.

அப்பாடா! ஒருமாதிரியாய் வந்து சேர்ந்து விட்டோம்.
ஆனாலும் வெறும் 40km தூரத்திற்கும் குறைவான இடத்தில் உள்ள துறைமுகத்தை அடைவதற்கு நாங்கள் செலவழித்தது 24 மணி நேரம்.

அங்கே நாங்கள் பயணிப்பதற்காக காத்திருந்த கப்பல் ராணுவத்திற்கு பொருட்கள் ஏற்றி வருகின்ற கப்பல். மளிகைச் சாமான்கள் ஏற்றிவர பயன் படுத்தப்படும் கப்பல் என்பதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிப்பதற்கான எந்த வசதியும் அதில் இல்லை.

கப்பலின் மேல் தளத்தில் சிலர் ஆண்களும், ஒருசில மனத்தைரியம் வாய்க்கப் பட்ட பெண்களும் உட்கார்ந்து கொள்ள , எஞ்சியவர்கள் கீழ் தளத்திற்கு அனுப்பப் பட்டார்கள். மா , மற்றும் சீனி மூடைகள் அடுக்கப்பட வேண்டிய இடத்தில் மக்கள் அடுக்கப் பட்டார்கள்.

கப்பலில் எங்கெல்லாம் உட்கார முடியுமோ அங்கெல்லாம் ஒவ்வொருவராக உட்கார்ந்து கொண்டோம்.

அனைவருக்கும் உயிர் காப்பு அங்கிகள் கடற்படை வீரர்களால் வழங்கப் பட்டன. கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்கியது.
நாங்கள் இருந்த கப்பலுக்கு சற்றுத் தொலைவில் ராணுவத்தின் டோராப் படகுகள் கடலைக் கிழித்துக் காயப்படுத்திய படி அதிவேகமாக சென்றன. ( அந்த டோராப் படகுகள் எங்கள் பாதுகாப்புக்காக செல்வதாக படையினர் சொல்லிக் கொண்டனர்?)


கரையில் தெரிந்த விளக்கு வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போக சூரிய வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிப்படத்தொடங்கியது.
சூழ்ந்து வந்த டோராப் படகுகளும் கண்ணுக்கு எட்டாத தூரத்திற்கு மறைந்து போயின.

சூரிய வெளிச்சம் முற்றாக வெளிப்பட்டபோது எங்கள் கப்பலை சுற்றி தண்ணீரைத் தவிர வேறு எதுவும் இல்லை.கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் தான்.

நிறையப் பேருக்கு இதுதான் முதல் கப்பல் பயணம் என்பதால் , நிறையப் பேர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தனர் .வாந்தி எடுப்பதற்காக ராணுவத்தால் பொலித்தீன் பைகள் வழகப்பட்டன . வாந்தியை கட்டுப்படுத்த `பெனார்கன் ` எனப்படும் மாத்திரைகளையும் வழங்கினர்.

மேல் தளத்தில் ஓரமாக இருந்தவர்களை இடையிடையே கடல் நீர் குளிப்பாட்டிச் சென்றது.

நானும் மேல் தளத்தின் நடுவிலே மேடை போல இருந்த ஒரு பகுதியில் சாய்ந்து கொண்டுதான் இருந்தேன். இருட்டில் அது என்ன இடம் என்று நான் அறிந்திருக்கவில்லை.

நன்கு விடிந்ததன் பிறகுதான் பார்த்தேன் , நான் சாய்ந்து இருந்தது, கப்பலில் பொருத்தப் பட்டிருந்த பீரங்கியில் . மிகவும் பெரியதான அந்த பீரங்கியின் மேல் பகுதி பொலித்தின் உறையால் மூடி வைக்கப் பட்டிருந்தன.
அதன் அடிப்பகுதியிலேதான் நானும் சிலரும் சாய்ந்து கொண்டிருந்தோம்.

அதை அறிந்த பின்பும் அப்படியேதான் இருந்தோம், வெறும் தளத்திலே இருக்கும் எங்களுக்கு அது சாய்மனைக் கதிரையாக இருந்தது. மேலும் வரப் போகின்ற வெயிலுக்கு அது கொஞ்சம் நிழல் வழங்கும் என்ற நம்பிக்கையில் அப்படியே சாய்ந்து கொண்டிருந்தோம்.
( எத்தனை உயிர்களைக் காவு கொண்ட பீரங்கியோ என்றெல்லாம் யோசிக்கும் மனநிலையில் நாங்கள் இருக்க வில்லை!)

அப்போதைய எங்கள் மனநிலைமை எப்போதுடா கரை தெரியும் என்றே ஏங்கிக் கொண்டிருந்தது.
எந்தத் திசையில் கரை தெரியும் என்றே புரியாமால் எல்லோரும் சுற்றிவர பார்த்துக் கொண்டே இருந்தோம்!
சற்று அனுபவம் வாய்ந்த ஒருவர் , அதோ கரை என்றார்!
அந்த திசை நோக்கிப் பார்த்தோம், ஏதோ போல தெரிந்தது. ஓ இதுதான் கரையா என்பது போல எல்லோரும் அந்த திசையையே வெறிச்சுப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அவர் சொன்னது சரிதான் , கொஞ்சம் கொஞ்சமாக அந்த புள்ளி பெரிதாகி கொண்டே இருந்தது. புள்ளியாய் நாங்கள் பார்த்த கரை இப்போது காடாக காட்சி அளிக்கும் அளவுக்கும் கரையை நெருங்கி விட்டிருந்தோம்.

அப்பாடா இன்னும் கொஞ்ச நேரத்தில் கரை தொட்டு விடுவோம் , பீரங்கிகள் வெடிக்கும் சத்தம் , தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் எல்லாம் இனி தொடர்ந்து கேட்க வேண்டி வராது என்று மனது துள்ளிக் குதித்தது.
அதோடு மனசு சிறுபிள்ளைத்தனமாக, நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று மீன் சாப்பிடலாம், சோடா குடிக்கலாம் என்றெல்லாம் வேறு சந்தோசப் படத்தொடங்கியது.

துறைமுகம் தெரிவதாய் சிலர் சுட்டி காட்டினர். ஏதோ நாங்கள் எல்லாம் கொலம்பஸ் ,புதிதாக ஒரு தேசம் கண்டு பிடித்து விட்டோம் என்பது போல்தான் எங்கள் மனசு துள்ளிக் குதித்தது.

அப்போதுதான் திடீரென சில கடற்படை வீரர்கள் வந்து பீரங்கிக்கு அருகில் இருந்தவர்களை எல்லாம் விலகி இருக்குமாறு கூறி, பீரங்கி மூடப் பட்டிருந்த பொலித்தின் உறையை நீக்கினர். ஒரு வீரர் தலைக் கவசம் அணிந்து பீரங்கியில் ஏறி உட்கார்ந்து பீரங்கியில் குறி பார்க்கத் தொடங்கினார்.

அந்த நேரத்தில் கண்ணுக்கெட்டாத தொலைவில் எங்கள் கப்பலைச் சூழ வந்து கொண்டிருந்த டோராப் படகுகள் மீண்டும் எங்கள் கப்பலை நெருங்கி வரத் தொடங்கின.

எல்லோரும் பீரங்கிக்கு சில மீற்றர் தூரத்திலே உட்கார்ந்து கொண்டு ஏதோ தாக்குதல் நடைபெறப் போகிறதோ என்று பயந்து கொண்டிருந்தோம்.

அப்போது அருகிலே நின்ற ஒரு கடற் படை வீரரிடம் என்ன நடைபெறுகிறது என்று வினவினேன். அதற்கு அவர்`` பயப்பட வேண்டாம் , சம்பூர் பகுதியை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம் , ஏதாவது தாக்குதல் நடைபெற்றால் தடுப்பதற்கான ஒரு முன் ஏற்பாடே இது ` என்றார்.

சற்று நேரம்தான் அந்த பதட்டம், சம்பூர் கடந்தபிறகு படைவீரர் பீரங்கியை விட்டு இறங்கினார் , அப்போது துறைமுகமும் மிகவும் நெருங்கி விட்டது.

சீனக் குடா இறங்கு துறையில் கப்பல் நிறுத்தப்பட்டது. நாங்கள் ஒவ்வொருவராக கப்பலில் இருந்து இறங்கும் பொழுது கப்பலில் இருந்த ஒலிபெருக்கியில், `` இவ்வளவு ஒரு கடினமான பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய உங்களுக்கு நன்றிகள்`` என்று ராணுவம் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

இறங்கியவுடன் காங்கேசன் துறையில் வைத்து எங்களிடம் வாங்கப்பட்ட கைத்தொலைபேசிகளை பத்திரமாக திருப்பி வழங்கினார்கள்.

இறங்குப் போது போது பல ஊடகங்களால் படம் பிடிக்கப் பட்டோம், அடுத்த நாள் பத்திரிகைகளின் முதல் பக்கம் பிரசுரிக்க படம் தயாராகிக் கொண்டிருந்தது .

சில ஊடகங்கள் நேரடியாக எங்கள் அனுபவங்களைக் கேட்டறிந்து பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.
என்னதான் கடினமான பயணம் என்றாலும் அதை மிகவும் இக்கட்டான நிலையிலும் ஒழுங்கு செய்திருந்த ராணுவத்தினருக்கு நன்றி சொல்லாமல் செல்ல மனசு இடம் அளிக்கவில்லை.

துறை முகத்தினுல்லேயே சில தனியார் வாகனங்களை அனுமதித்து , திருகோணமலை நகருக்குள் செல்வதற்கான பயண வசதிகளையும் ராணுவத்தினர் ஏற்படுத்தி வைத்திருந்தனர்.
சில தூர இடங்களிற்கான (கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா போன்றவற்றிற்கு )பயண வசதிகளும் நேரடியாக துறை முகத்திலேயே ஏற்படுத்தப் பட்டிருந்தன.

இறுதியாக எல்லோரும் தங்கள் பயணிக்க வேண்டிய பஸ் வண்டியினுள் ஏறிக் கொண்டோம்!

பெண்பாரதி
கண்ட கனவு
இன்னும்
கனவாக ...

கவிஞர்களுக்கு
மட்டுமல்ல
நிறையப்
பெண்களுக்கும்
கனவு காணும்
உரிமை
மட்டுமே
வாய்த்திருக்கிறது !

ஒரு வேண்டுகோள் !

தெரிந்ததை
தெரிந்து கொண்டு
மறப்பதை விட...
தெரியாததை
தெரிந்து கொள்வது
இலகு...

எனக்குத் தெரியும்
அதனால்
மறக்கமுடியவில்லை

உனக்குத் தெரியாது
அதனால்
தெரிந்துகொள்!

நம் காதலை...

கொஞ்சும் கவிதைகள் கொஞ்சம்....
உலகத்தில்

அதிகம்
தொலைந்து

போவதும்
களவாடப்படுவதும்
இதயம்
ஒன்றுதான்...

இருவரும்
கை கோர்த்து
நடக்கும்
வீதி
நெடுக
வீழ்ந்து
கிடக்கின்றன
பொறாமைக்
கண்கள் ....

தேவாரம்
பாடி
கோயில்
கதவுகளைத்
திறப்பது
ஒன்றும்
பெரிய வேலையில்லை
உன்
இதயக் கதவுகளைத்
திறப்பதைக்காட்டிலும்...

(மீள் இடுகை )


6.27.2009

ரெண்டு வரிக் கவிதைகள்உன்
வார்த்தை துரத்துகிறது
மௌனம் கட்டியனைக்கிறது


சந்தோசமாய்
தொலைகிறேன்
நீ பத்திரப்ப்டுத்துவாய்தானே


நான்
வாசிப்பதை விட பார்க்கின்ற
கவிதைதான் அதிகம் -உன்னில்கவிதைப் புதையலுக்கு
அடையாளம் வைக்கும் உன் பாதம்..கவிதைக்கு கண் முளைத்து
உனைப் பார்க்கும் நீ தூரப் போனால்...

காதலும் நீயும்...
எத்தனை அழுக்கான
மனங்களில்
குடியிருந்தாலும்
என்றுமே
அழுக்கானதில்லை
காதல்....எல்லோரும்
காதலில்
விழுவோம்..

காதலோ
உன்னில்
விழுந்தது...

6.26.2009

வலியுகம்சிரித்தல்
நடத்தல்
சாப்பிடுதல்
என...
எல்லாவற்றிற்கும்
முதல் ...

என்
செய்கை
அழுகை...

உலகத்தில்
இதற்குத்தான்
நிறைய
தேவை
இருக்கும்
என...
கர்ப்பத்திலேயே
பயிற்சி
எடுத்திருப்பேனோ!
( மீள் இடுகை )

அதற்கு முன் காதலித்துவிடு..தோற்றுப் போகிறது
உன் வீட்டு
கண்ணாடி...

எத்தனை முறை
முயன்றாலும்
சேமிக்க
முடியவில்லையாம்
உன் விம்பத்தை...
தோற்றுப்
போகின்றன
என் கவிதைகள்...

எத்தனை முறை
முயன்றாலும்
உன்னைவிட அழகாக
முடியவில்லையாம்...காதல் தோல்வியில்
மனிதர்கள்
தற்கொலை செய்து
கொள்வார்கள்
முதன் முதலாக
காதல்
தற்கொலை
செய்யப்போகிறது
அதற்கு முன்
காதலித்து விடு...

6.25.2009

A9 யிக்குப் பதிலாக ( ஒரு திகில் பயணம் )

பல வருட யுத்த நிறுத்தத்திற்கு பிறகு யாழ்ப்பாணத்தில் மீண்டும் யுத்தம் வெடித்து A9வீதி உட்படஅனைத்து தரை மார்க்கமும் மூடப்பட்ட பிறகு ராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டராணுவக் கப்பல் பயண அனுபவங்களை பதிகிறேன்.

ஒரு யுத்தகள அனுபவம்!
சுற்றிவர பல்குரல் பீரங்கிகள் சீறிப்பாயும் மின்சாரம் இல்லாத கொடுமையான இரவுகள்.
வீட்டுக்குள் அடங்கியே கிடக்கவேண்டிய பகல் பொழுதுகள் .
அரிதாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கவே படை எடுக்கும் ஒட்டுமொத்த யாழ் மக்கள்.

நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்று யாழ்ப்பாணத்துக்கு வெளியில் இருக்கும் வீட்டுக்கு சொல்வதற்கு, எப்போதாவது அரிதாக கிடைக்கும் தொலைபேசி இணைப்பு.

ஆரம்ப கட்டத்தில் பண்பலைகள் கூட முடக்கப் பட்ட நிலையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஒரு சமூகமே தனித்து விடப் பட்ட உணர்வு.


இத்தனை கொடுமையான நிகழ்வுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் வாழப்பழகியது தமிழ் இனம். ஆரம்பத்தில் ஒரு நாளில் ரெண்டு மணிநேரமே வெளியில் செல்ல அனுமதித்த இராணுவம் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப் படும் நேரத்தை பல மணிநேரமாக்கியது.

ஊரடங்கு தளர்த்தப் பட்டு அதிக பகல் பொழுதுகளை வெளியில் கழிக்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், அதிர்கின்ற பல்குரல் பீரங்கிகளின் சந்தங்களின் நடுவிலே வீட்டுக்கு வெளியில் திரிவது எப்படி?

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியே செல்வதற்கான அத்தனை பாதைகளும் மூடப் பட்ட நிலையில், வதந்திகள் முளைக்கத் தொடங்கின...

செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் வருவதாகவும்,அல்லது ஏதோ ஒரு வெளிநாட்டுக் கப்பல் வருவதாகவும்,இந்தக் கப்பல் மூலம் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் , யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய யாழ்ப்பான மக்களும் பயணிக்கலாம் என்றும் முளைக்கத் தொடங்கிய இந்த வதந்திகள் இடையிடையே சின்ன சின்ன சந்தோசங்களை தரத்தான் செய்தன.

`` எல்லோரையும் ஏற்றிச் செல்ல கப்பல் வருமா?``
என்ற பாடல் இந்தியாவில் இருக்கும் அகதிகளுக்கு மட்டுமல்ல , எங்களுக்கும் பொருத்தமாகவே இருந்தது.
சொந்த நாட்டில் இருந்தாலும் நாங்களும் அகதிதானே ?


பல வாரங்கள் இப்படியே கழிந்து போனது!


திடீரென ஒரு நாள் யாழ் நகரமே பரபரப்பானது....

காங்கேசன் துறை துறைமுகத்தில் இருந்து திருகோணமலைக்கு ஒரு கப்பல் பயணிக்க இருப்பதாகவும் அதிலே பயணிக்க விரும்பும் நபர்கள் உடனடியாக குறிப்பிடப்பட்ட ஒரு ராணுவ தளத்திற்கு வரும் படியும் கேட்கப் பட்ட
யாழ் எப் . எம் எனும் அரச வானொலியின் அறிவுப்பே அந்த பரபரப்புக்கு காரணம்.

பயங்கரமான யுத்தம் நடைபெறும் நிலைமையில் ராணுவக் கப்பலில் பயணம் செய்வதா என்ற பயம் மக்களுக்கு கொஞ்சம் இருந்தாலும், அந்த நிலைமையில் நிறைய மக்களுக்கு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய தேவை இருந்ததை அந்தக் கப்பலில் பயணிப்பதற்காக கூடிய ஐந்து ஆயிரத்திற்கும் மேட்பட்ட மக்கள் தொகை காண்பித்தது.

பல ஆயிரம் மக்கள் கூடி விட்டாலும் குறிப்பிட்ட அளவு மக்களே பயணிக்கலாம் என்ற நிலையில் , எப்படியாவது பயணித்தே ஆக வேண்டும் என்ற அவசரத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் நசுபடத் தொடங்கினார்கள்.

பெண்கள் , குழந்தைகளோடு பெண்கள், வயதானவர்கள் என்று வித்தியாசம் இல்லாமல் மக்கள் நசுபடத் தொடங்கினார்கள். ஆயுதம் தாங்கிய ராணுவத்தாலேயே கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு தமிழின நெரிசல் நிலவியது .

சொந்த நாட்டினுள்ளேயே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க ஒரு இனமே நெரிசலில் நசிபட்டு கொண்டிருந்தது. தமிழ் தாய் அதிகம் வலி உணர்ந்த நாட்களில் அதுவும் ஒன்றாக பதிவானது.

இறுதியாய் பல்வேறு நெருக்குதல்களுக்கு பிறகு பல ஆயிரம் மக்களில் இருந்து வெறும் ஒரு ஆயிரத்துக்கு அண்மித்த மக்களே தெரிவு செய்யப்பட்டனர்.

காலையில் தொடங்கிய மக்கள் தெரிவு, முடிய மாலை ஆகிப்போனது.

பயணிக்கும் வாய்ப்பைப்பெர்ற அனைவரின் உடமைகளும் யாழ் நகரில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் முற்று முழுதாக சோதிக்கப்பட்ட பின்பு அனைத்து மக்களும் பஸ் வண்டிகளிலே ஏற்றப் பட்டார்கள். ராணுவம் பஸ்சில் இருந்து கண்காணிக்க பஸ் தெல்லிப்பழை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.
இதற்குள் ஊரடங்குச் சட்டத்திற்குரிய நேரம் தொடங்கி விட்டதால், வீதியெல்லாம் உறங்கிப் போய் மயானமாக காட்சி அளித்தது.

லேசாக இருட்டத் தொடங்கி விட்ட , வெறிச்சோடிய வீதியில், பஸ்ஸின் உள்ளே ராணுவம் கண்காணிப்பில் இருக்க , தூரத்தில் வெடிச் சத்தங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்க , பஸ் வண்டிகள் சீறிப் பாய்ந்தன தெல்லிப்பளை நோக்கி


தெல்லிப்பளை நெருங்கியபோது முற்றாக இருட்டி விட்டிருந்தது.

தெல்லிப்பளை வைத்தியசாலை உள்ள இடம்தான் மக்களுக்கான எல்லை, அதற்கு அப்பால் உள்ள அத்தனை இடமும் ராணுவம் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்ட இடங்கள்.

உயர் பாதுகாப்பு வலயம் என்பது, முற்று முழுதாக ராணுவத்தின் ஆக்கிரமப்பில் இருக்கும் இடம். அங்கேதான் அவர்களின் தலைமை அதிகாரிகளின் அலுவலகங்கள், ஆயுதக் கிடங்குகள் என்பவவை அமைந்திருக்கும்.

தெல்லிப்பளை, காங்கேசன் துறை மற்றும் பலாலி என்பவற்றை உள்ளடக்கிய உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மக்களுக்கு சொந்தமான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையம் கூட உள்ளடக்கப்படிருக்கிறது.இங்கேதான் ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் விநியோகிக்கப் படும் மார்க்கங்கள் அமைந்திருக்கின்றன.

அந்தளவிற்கு ராணுவ ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசத்திற்கு நாங்கள் அழைத்துச்செல்லப்பட்டோம். மிகவும் இருட்டி விட்டதால் பஸ்ஸின் விளக்கு வெளிச்சத்திலேயே வீதியோரங்க்களை பார்க்க முடிந்தது.
உடைந்த கட்டிடங்கள், வீட்டினுள்ளேயே வளர்ந்து நின்ற மரங்கள் , ராணுவச் சிப்பாய்கள் என்பவற்றைத் தவிர பார்ப்பதற்குஅங்கே வேறு எதுவுமே இல்லை.

கடைசியில் பஸ் தெல்லிப்பளையில் இருந்த ஒரு பாடசாலை கட்டிடத்தினுள் நிறுத்தப் பட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் கப்பலில் ஏறப்போகிறோம் என்ற எதிர்பார்ப்போடு இருந்த எங்களுக்கு இடையில் பஸ் நிறுத்தப் பட்டதும் கொஞ்சம் பதட்டம் பிடிக்கத்தொடங்கியது.

நாங்கள் தங்கி இருந்த கட்டடங்களுக்கு மிக அண்மையில் இருந்தும் பீரங்கிகள் முழங்கிக்கொண்டிருந்தன. சத்தத்தில் செவிப்பறை மென்சவ்வு உடைந்து விடும் உணர்வு. அன்றைய இரவுப் பகுதி ஒரு யுத்தகளத்திலேயே இருக்கும் உணர்வோடு கொஞ்சம் கொஞ்சமாய் கடந்து கொண்டிருந்தது....

தொடர்ந்து நடந்ததை சில மணி நேரத்தில் அடுத்த இடுகையாக இடுகிறேன்.
உன் வீடு
உன் வீட்டுக்கு
உன் அறைதான்
கருவறை..

உன் வீட்டு
திருஷ்டி பொம்மைக்கும்
அடிக்கடி திருஷ்டி
சுத்திப் போட
வேண்டும்.,..

உன் வீடுதான்
உன் வீதிக்கு
முகவரி...


நிறையப் பேர்
வீட்டில் இருந்தாலும்
உன் வீடு
தனிமையில்
வாடுகிறது...
நீ வெளியே
செல்லும்
பொழுதுகளில்...

உமிழ் நீர் அஞ்சலி


மு.கு- எழுத்துக்கு சொந்தக்காரர் உங்களுக்கு அறிமுகமில்லாத தனஞ்சயன் .

வெட்டுவார்கள் என்று
தெரியாமல்
கொட்டியதைஎல்லாம்
கொத்தித் தின்றாயே

அசைந்தால் மெலிந்து
விடுவாய் என்றார்கள்
அவர்களின்
அக்கறை கண்டு
புளங்காகிதம்
கொண்டாயே

அவர்களின் அக்கறையின்
காரணம்
எப்படித் தெரியும்
உனக்கு?

கொக்கரிக்கக் கூட
நேரமின்றி
கொத்துவதிலேயே
குறியாய் இருந்தாயே
கழுத்தை
கொத்திய போதாவது
பாழும் மனிதர்களின்
எண்ணம் புரிந்ததா
உனக்கு?


பிறீமாவை
அன்ன பூரனியாய்
எண்ணி இருந்தாயே
அது செய்த
துரோகம் புரிகிறதா?

பிறீமா தீனியை
குழம்பு வைக்க
முடியாமல்
உனக்கு கொடுத்து
உன்னைக் குழம்பு
வைத்தார்களே
இதுவா மனிதம்?

கெட்டவர்களின்
மரணமும்
எதிரிகளின்
மரணமும்தான்
மகிழ்ச்சியைக்
கொடுக்கும்

அரையடி நாக்குக்கு
மகிழ்ச்சி
கொடுப்பதற்காகவே
உன் உயிரை
மாய்த்துக் கொண்டவன்...
உன் மரணத்தில்
சோகத்தை விட
மகிழ்ச்சியையே
அதிகம்
கொடுத்தாய்...

இறந்தும் ஈந்த
வள்ளல்கள் உண்டு...

மரித்தும் மகிழ்ச்சி
தரும்
உத்தமனே
உன் ஆத்மா
சாந்தியடையட்டும்...

உண்ட களிப்பில்
களைப்பில்
நண்பர்கள்...

இழப்புக்கள்

வேலை முடித்து
வீட்டுக்கு
வரும் பொழுதில்


மனைவி தரும்

புன்னகை.....

தேநீர் வாசம்...

வீட்டில் உள்ளோர்க்கு
தெரியாமல்
திருட்டு முத்தம்....

இப்படிப் பல
தவறிப் போவதால்
விடுமுறை
தினத்தையும்
ஞாயிற்றுக்
கிழமையையும்

வெறுக்கிறது
மனசு

நாயும் பொண்ணும்நாயும்
பொண்ணும்

ஹலோ அம்மா ,
நான் ஆகாஷ் கதைக்கிறன் . நீங்க அனுப்பிய பொண்ணின் படத்தைப் பார்த்தேன்.
கருப்பா, நீண்ட மூஞ்சியோட, பெரிய காது, சின்ன கழுத்து, பட்டிக் காடுமாதிரி நீண்ட கூந்தல்.
சீ சீ இந்தப் பொண்ண எப்படியம்மா நான் கலியாணம் கட்டுறது?
வேண்டாம் என்று சொல்லிடுங்க.

ஹாய் அரவிந்தன்,
நான் ஆகாஷ் கதைக்கிறன். நீ மெயிலில் அனுப்பிய படத்தைப் பார்த்தேன்.
கருப்பா, நீண்ட மூஞ்சியோட , பெரிய காது, சின்ன கழுத்து, நீளமா வால், பியூட்டிபுல் நாய்க் குட்டி மச்சான் .
இப்பவே அட்வானன்ஸ் கொடுத்துடு.


நாயும் மனிதனும்


வீட்டுக்காரி -
டேய் ராமு ...
எத்தனை தடவை சொல்லியிருக்கேன் நாய்க்கு பழைய சோறு வைக்க வேண்டாமென்று.

ராமு-
இல்லையம்மா , நேற்றுத்தான் சமைச்சது கொஞ்சம் பழுதாகாத மாதிரி அதுதான்...
சரி ....சரியம்மா இனி வைக்கமாட்டேன். இதை அப்படியே குப்பையில போட்டு விடுறேன்

வீட்டுக்காரி -
குப்பையிலா? அப்படியே ஓரமா வை.
யாராவது அம்மா தாயே என்று கத்திக் கொண்டு வருவானுகள் ...
கொடுக்கலாம்.

பி.கு- இங்கு ராமு என்பது கணவன் என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல.

6.24.2009

ஒரு குழந்தைப் பிறப்பு

காதல் பிறக்கும் நேரம்...

உனனைப் பார்த்த
ஒரு கணத்தில்
பிறந்தது...
பிறந்ததில் இருந்த
நான் சுமந்த
காதல்


குழந்தை
பிறக்கும் போது
வலி...
காதல்
பிறந்த பின்பு
வலி


குழந்தை
பிறப்பின்
முதல் அத்தாட்சி
முதல் அழுகை...
காதல் பிறப்பின்
முதல்
அத்தாட்சி
உன் முதல்
மௌனம்...


குழந்தை
கொஞ்சம்
கொஞ்சமாகத்தான்
கதைக்கப்
பழகும்...
காதலும்
அப்படித்தான்!

இப்போதுதான்
பேசப் பழுகுகிறது
காதல் ....
அதுதான்
மௌனமாகவே
இருக்கிறாய்...


குழந்தையின்
அழுகைகள்
அம்மாவின்
பால் சுரப்பை
தூண்டிவிடும்....
காதலின்
அழுகை
என் கவிதைச்
சுரப்பைத்
தூண்டிவிடும்


குழந்தையை
நெஞ்சில் போட்டுத்
தாலாட்டுவேன்
காதலை
நெஞ்சுக்குள்ளேயே
வைத்துத்
தாலாட்டுவேன்!


குழந்தையைத்
தத்தெடுக்கலாம்
யாராலும்
காதலைத்
தத்தெடுக்க
முடியாது...

உடலுறவு
தேவையில்லை
மனங்களின்
உறவு போதும்
காதல்
பிறக்க...


காதல்
உனக்கும்
எனக்கும்
கல்யாணத்திற்கு
முன்னமே
பிறந்த குழந்தை...


நம்
குழந்தையை
இப்படி
அனாதையாய்
விட்டுச்
செல்கிறாயே!
???????

கருவறைக்குள்ளேயே
இருக்கிறாயே !
எப்போது பிறந்து வருவாய்
சாமி ...

6.23.2009

வேலை
கை கடுக்க...
கால் கடுக்க...

பாத்திரம் கழுவி
வீடு பெருக்கி
ஆடை துவைத்து
சமையல் செய்து
பிள்ளைக்கு சாப்பாடு
கொடுத்து...

எல்லாம் முடிய
கடைசியில்
கையில்
கிடைக்கும்
சம்பளத்தோடு
வீடு
திரும்பினால்...
அங்கேயும்
காத்துக்கிடக்கின்றன
அவ்வளவு
வேலைகளும்
கணவனின்
இச்சையும்!

கொஞ்ச நேரத்துக் கவிதைகள்

அமைதி

ஓவர் டைம்
சம்பளத்திற்காய்
அடிக்கடி தொலைந்து
போகிறது
ஒய்வு...தேவை

சீதனத்துடன்
ஒரு போனஸ்
பரிசு
அழகு...புன்னகை

உன்
உதடு நிரம்பி
வழிகிறது
என் உயிர்
புன்னகை....

அழகு நிரம்பி வழிகிறது

யோசிக்காமலேயே
வருகின்றன
நிறைய கவிதைகள்
உன்னைப் பற்றி
நினைக்க நினைக்க .....


ஒரு கவிதைக்கான
கரு எப்படி
சிதறிக் கிடக்கிறது
பாருங்கள்...
அவள் உடைத்துப்
போட்ட....
கச்சான் கோதுகள்


உன்னைச்
சூடிக்கொள்வதால்
என் கவிதைகளில்
கூட...
வாசம்.உன் அழகு
பொத்தி
வைக்கப்பட முடியாமல்
நிரம்பி
வழிகிறது
என் கவிதைகளில்...


6.22.2009

உங்கள் குழந்தை எத்தனை அடி வளரும் என்று இப்போதே காட்டும் கணிபொறி !

உங்கள் குழந்தைகள் வளர்ந்த பிறகு எவ்வளவு உயரத்தை எட்டிப் பிடிக்கும் என்று இப்போதே அனுமானித்துக் கொள்ள ஆசையாக உள்ளதா?

நல்லது

அதை அறிந்து கொள்ள இணையத்தில் நான் கண்ட ஒரு கணி பொறியை சொல்லுகிறேன்.

அதற்கு முன் சில அறிவுரைகள்,

இது கணித்துச் சொல்லுவது வெறுமனே , குழந்தை எவ்வளவு உயரத்துக்கு வளர்வதற்கான பாரம்பரியத் தகுதி பெற்றுள்ளது என்பதை மட்டுமே.
குழந்தைக்கு வழங்கப் படும் போசாக்கு மற்றும் குழந்தையை பாதிக்கும் வேறு நோய்கள் போன்றவைகளே குழந்தை அந்த உயரத்தை எட்டிப் பிடுக்குமா என்பதை தீர்மானிக்கும்.

http://www.keepkidshealthy.com/welcome/htcalculator.html

இந்த லிங்கில் சென்று அங்கே கிடைக்கும் கணிப்பானில் குழந்தையின் அம்மா மற்றும் அப்பாவின் உயரத்தை பதிவதன் மூலம் , எவ்வளவு உயரம் வரை உங்கள் குழந்தை வளரும் சாத்தியம் உள்ளது என்று அறிந்து கொள்ளுங்கள்.

குழந்தையின் வளர்ச்சி பற்றிய சந்தேகங்களை பின்னூட்டத்தில் கேளுங்கள்.

காதல் வழிகிறது
பட்டினி கிடந்தே
மெலிந்து போன
ஈழத்துக்
குழந்தைகள் போல...
உன் பார்வையின்றி
மெலிந்து
கிடக்கிறது
காதல்கல்லில்
சாமியை
வணக்குவது போல்
உன்னில்
காதலை
வணங்குகிறேன்..இனி
உன்னை
கண்ணாடியில்
பார்க்காதே
என்
கவிதைகளில்
பார்...ஓசோன்
படையில்
ஓட்டை போட்டு
உன்னை ரசிக்கிறது
சூரியன்..அகதி முகாமில்
அடைபட்ட
அகதிக்கு
நிவாரணம் தாங்கி
வரும் லொறி
போல...
எனக்கு
நீ காதலை
தாங்கி
வருகிறாய்...

பறவைகளும் மிருகங்களும் இப்படித்தான் காதலிக்கின்றனLove birds


முட்டாள்
மனிதர்கள்
காதல்
பறவைகளை
கூண்டுக்குள்
அடைக்கலாம்
காதலை...?


விட்டில்
பூச்சி

என்னைக்
காதலித்து விடு...
இல்லாவிட்டால்
ஒரு மணி
நேரத்தில்
இறந்து விடுவேன்
சொன்னது
விட்டில் பூச்சி
வயசு 23 மணித்தியாலயம்


ஆமை


உடம்பு
முழுவதையும்
உள்ளே வைத்து
ஜடமாக
கிடந்தாலும்
உள்ளே
துடித்துக் கொண்டுதான்
இருக்கிறது
காதல்


முதலை

இந்தக் கண்ணீரை
தயவுசெய்து
முதலைக் கண்ணீர்
என்றுமட்டும்
சொல்லி விடாதீர்கள்
இது காதல்
கற்றுத்தந்த
நிஜக் கண்ணீர்மரம் கொத்தி

உனக்காக
ஒரு மரம்
தாஜ் மஹாலாகி
இருக்கிறது ...

தொடாரலாம் ...

காதலைத் தொலைத்தவர்களுக்காக மட்டும் (கட்டாயமல்ல )

காதலில்
தொலையலாம்
யாரும் காதலை
தொலைக்க
முடியாது...


காதல்
புனிதமானது ....
காதலிப்பவர்
விட்டுப் போனாலும்
காதல்
யாரையும்
விட்டுப்போகாது


காதலுக்காக
தற்கொலை
செய்பவர்கள்
தங்களை
மட்டுமல்ல
காதலையும்
கொலை
செய்கிறார்கள்...
சாக வைப்பதல்ல
உயிர்ப்பிப்பதே
காதல்...


நீங்கள் காதலை
தொலைத்தவர்களா?
இல்லை ...
உங்களைத்
தொலைத்தவர்கள்....
உங்களைக்
கண்டுபிடியுங்கள்
உள்ளேயே
ஒட்டிக் கொண்டிருக்கிறது
இன்னும் காதல்
வெட்கத்தில் தொலைந்தவன்
கர்ப்பத்தைப்

போலதான்...
எப்படித்தான்
பொத்தி வைத்தாலும்
கடைசியில்
உன்னைப்
பார்த்ததும் ...
பிறந்து விட்டது
காதல்


நீ கோயிலுக்குப்
போனாய்..
சாமி
சந்நியானத்தில்
இருந்த
பூக்கள் எல்லாம்
பொறாமைப்
பட்டுக் கொண்டன
உன் கூந்தல்
பூவைப் பார்த்து


எப்போதாவது
என் காதில்
விழுகின்ற நீ
பேசுகிற
ஒவ்வொரு
வார்த்தையையும்
ஒவ்வொரு நோட்டுப்
புத்தகத்தில்
எழுதி வைக்கிறேன்
ஒவ்வொன்றும்
கவிதைப் புத்தகம்


ஒரே பூ
திரும்பத் திரும்ப
பூக்கின்றது ....
உன் வெட்கம்


நிறையப்
பெண்கள்
வெட்கத்தைத்
தொலைத்து
விட்டார்கள்
நான் உன்
வெட்கத்தில்
தொலைந்து
விட்டேன்...

பாடப் புத்தகத்தை
எத்தனை முறை
படித்தாலும்
ஏறாத இந்த
மரமண்டைக்கு
ஒரே பார்வையில்
காதலிக்கக்
கற்றுக் கொடுத்துவிட்டு
போகிறாய்...


6.21.2009

ஒரு பதிவருக்காய் வழிந்த என் கவிதை....


எங்களையெல்லாம்
தமிழ்தான்
ஆளுகிறது
நீயோ
தமிழை
ஆளுகிறாய்...

தாய் மொழியால்
எல்லோருக்கும்
கௌரவம்..
தாய் மொழிக்கு
சிலரால்தான்
கௌரவம்
அதில் நீயும்
ஒன்று


எங்கள் எண்ணத்தில்
வார்த்தைகளே
வந்து விழும்
உன் எண்ணத்திலோ
கவிதைகளே
வந்து விழும் ...

உன்
அளவுக்கதிகமான
காதல்
சேமிக்கப்பட
முடியாமல்
கொட்டி வழிகிறது
கவிதைகளாய்..

பசியைப் பற்றி
நீ எழுதினாய்
ஒருநாள்
சில பேர்
பசியை
மறந்திருந்தனர்
பலநாள்..


இதுவரை
தமிழ் இனித்தது
இப்போது
ஓசையும்
எழுப்புகிறது
உன்னால்...

வற்றாத உன்
கவி ஊற்றுக்கு
சிறு துளியாய்
என் கவித்துளி
சமர்ப்பணம்...


அப்பாடா!
உன்னைபற்றி
எழுதவில்லை
எனறு..
என்னை
நச்சரித்துக்கொண்டே
இருந்த கவிதைகள்
இனியாவது
நிம்மதியாய்
இருக்க விடுமா
என்னை..


துளிக் காதல்


அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாம்
கவனம்
அழகு விஷமாகப்
போகிறது உனக்கு


..........................
கோயில்
அன்னதானத்தில்
பரிமாறத்
தொடங்கினாய்....
சாமி வந்து
உட்கார்ந்துகொண்டது
ஒரு பந்தியில்


...........................
நீ எத்தனை
முறை மறுத்தாலும்
உன்னை விட்டு
வெளியேற
விருப்பமில்லை
காதலுக்கு


...................................
மூச்சை
அடக்கும்
அளவுக்குக்
கூட
காதலை
அடக்க முடியாமல்
கஷ்டப்படுகிறது
மனசு...

வாழ்க்கை நிறையக் கவிதை (குங்குமத்தில் இடம் பெற்றதன் தொடர்ச்சி)


குங்குமத்தில் இடம் பெற்ற என் வாழ்க்கை நிறைய கவிதை என்ற தலைப்பில் தொடர்ந்து நிறையக் கவிதைஎழுதலாம் என்று தோன்றிய எண்ணத்தின் முதல் படி இந்த வரிகள். முற்றுமுழுதாக நிஜங்களை மட்டுமே இந்த தொடர் பதிவில் இட நினைப்பதால்வரிகளில் குறையும் கவித்தன்மைக்கு மன்னித்தருள்க.


படி அளத்தல்

எல்லாருக்குமாய்
ஓடி ஆடி
வேலை செய்யும்
எடுபிடிக்கே
எல்லோரையும் விட
குறைவாய்ச் சம்பளம்


மனிதாபிமானம்

ஒருவனை பஸ்
அடித்து விட்டதாய்
சொல்லி
பஸ் மீது
கல்லெறியத்
தொடங்கினார்கள்...
அடிபட்டு விழுந்து
கிடந்தவன் மீதும்
விழுந்தன..
சில கற்கள்


அக்கறை

ஸ்கேன் செய்து
முடிந்தவுடன்
குழந்தை நலமா
என்று கேட்பவர்களை
விட...
ஆண் குழந்தையா
பெண் குழந்தையா
டாக்டர் என்று
கேட்பவர்களே
அதிகம்..

காதலுக்காக பேசுகிறேன்


காதலை
எதிர்க்கும்
ஒவ்வொருவருக்குள்ளும்
கட்டாயம் ஒரு
காதல் இருக்கும்தோற்றுப் போன
காதலுக்காக
தற்கொலை
செய்பவனை விட
தோற்றுப் போன
காதலை தாங்கி
வாழ்பவர்களால்தான்
காதல் இன்னும்
உயிர் வாழ்கிறது


பரிணாமத்தை இழுத்துப் பிடிக்கும் மனிதர்களும் முந்த நினைக்கும் மனிதனும்...


இன்று

காலை 9.௨0 மணி மட்டக்களப்பின் கிழக்கே இருக்கும் கிரான்குளம் என்ற கிராமத்தின் கிறவல் புழுதி பறக்கும் புழுதிக் காட்டு வீதியில் ....


என்ன இசக்கி எப்படி இருக்கா? பொண்டாட்டி புள்ளைகள் எல்லாம் சுகம்தானே ?
கேட்டவாறே கடந்து போனான் சுப்பிரமணி.

இசக்கி எனப்படும் இசக்கிமுத்துவுக்கு பெருமை கொள்ளவேயில்லை.பின்ன இருக்காத என்ன? 65 வயசிலதான் ஊரில நாலு பேர் அவனையும் இசக்கி என்று பெயர் சொல்லி கூப்பிடும் பாக்கியம் கிடைச்சிருக்கு , இதைவிட வேறென்ன சந்தோசம் இருக்கும் ஒரு மனுஷனுக்கு.

அந்த சந்தோசத்திலேயே அவனுடைய புது வேட்டி காற்றில் மிதக்க , அந்த வயசிலயும் அவ்வளவு வேகமா மிதிச்சான் புது லுமாலா சைக்கிளை.

கொஞ்ச நாளைக்கு முன்தான் வாங்கின துவைச்சுப் போட்ட வேட்டி சட்டை , புதுச் செருப்பு , புது லுமாலா சைக்கிள் எல்லாமே இப்ப கொஞ்ச நாளாகத்தான் .

சில வருடங்களுக்கு முன்....

காலை 9.20 மணி மட்டக்களப்பின் கிழக்கே இருக்கும் கிரான்குளம் என்ற கிராமத்தின்கிறவல் புழுதி பறக்கும் புழுதிக் காட்டு வீதியில் ....


பல நாட்களாக துவைக்காத வேட்டி சட்டையும் , அவசரத்துக்கு செயின் அறுந்து கழுத்தறுக்கும் கரல் பிடித்த சைக்கிளும், தேய்வதற்கு எதுவும் இல்லாமல் காலை தேய்க்கும் செருப்போடும் இசக்கி முத்து .

``
என்ன அம்பட்டா , கனகத்தின்ட பிள்ளைக்கு மொட்டை அடிக்கவா போயிட்டு இருக்கா? ``
கேட்டபடியே கடந்துபோனான் சுப்பிரமணி.

அப்போதெல்லாம் இப்படித்தான் அவனை டேய் `அம்பட்டா ` என்றுதான் ஊரில எல்லோரும் அழைப்பார்கள் . சின்ன வயசில் அவனை எல்லோரும் அம்பட்டன் மகன் என்று சொல்வார்கள் , அவன் என்றைக்குக் கத்தரிக்கோல் தூக்கினானோ அன்றிலிருந்து எல்லோரும் அவனை அம்பட்டா என்றே அழைக்கத் தொடங்கினார்கள்.

என்ன செய்யிறது ? ????????
நம்மட பரம்பரையில கால காலமா எல்லோரையும் இப்படித்தானே அழைக்கிறார்கள் என்று அவனையே அவன் ஆறுதல் படுத்திக் கொண்டாலும் அம்பட்டன் என்று அழைப்பவர்களுக்கு இருந்ததைவிட கொஞ்சம் அதிகமாக இவனுக்கு இருந்த பகுத்தறிவு அவனை கொஞ்சம் சங்கடப் படுத்தத்தான் செய்தது .

அதனால்தான் , அவன் பிள்ளைகளை அவனின் கடைப்பக்கம் கூட வர விடுவதேயில்லை . பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து இந்த சமூகத்தில கௌரவமாக வாழ வைக்கவேண்டும் என்ற வைராக்கியத்தை பிள்ளைகளுக்கும் சின்ன வயசில் இருந்து ஊட்டியே வளர்த்தான் .

மூத்தவன் நாதசிங்கம் , நல்லாத்தான் படிச்சான் . இருந்தாலும் என்ன செய்ய பல்கலைக்கழகம் போற அளவுக்கு ரிசல்ட் வராததால் மனமுடைஞ்சவன் அப்பாவோட அம்பட்டன் கடைக்கு வேலைக்கு வரப் போவதாய் அடம் பிடிக்கத் தொடங்கியபோதுதான் , ஊரில இருந்த நல்லமுத்து என்ற கொஞ்சம் படிச்ச பெரியவர் சொன்ன படி மகன் நாதசிங்கத்தை எப்படியாவது அவுஸ்திரேலியா அனுப்பி வைப்பதென்று முடிவெடுத்தான்.

ஒரு மாதிரியாய் ஊர் எல்லையில் இருந்த பாழடைஞ்சு போன வளவை விற்றும், மனிசிட தாலிக் கொடியை விற்றும், மிச்சத்தை வட்டிக்கு வாங்கியும் மகனை கள்ள பாஸ்போட்டில் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவிட்டான்.

நாதசிங்கம் வெளிநாட்டுக்குப் போகும் போது மனசு முழுக்க அவன் நினைத்துக் கொண்டே இருந்தது, சின்ன வயசில அவன் அம்பானி பற்றி வாசித்ததுதான். அம்பானியும் இப்படி வெளிநாட்டுல குடியேறியவர்தான், ஆனாலும் வேலை வேலை எண்டு இருக்காம கூடவே அந்த நாட்டின் தொழில் நுட்பங்களையும் படித்ததால்தான் நல்ல நிலைக்கு உயர்ந்தவர் என்ற அந்த வரலாறு அவனையும் தூண்டியது.

அவுஸ்திரேலியாவில் கிடைத்த அகதி அந்தஸ்த்துடன் கிடைக்கிற வேலைகளை செய்து பணம் உழைப்பதில் மட்டும் குறியாக இருக்காமல் , பகுதி நேரமாக படிக்கவும் செய்தான்.

மகன் மற்றவங்களைப் போல கிடைக்கிற வேலையோட மட்டும் இருந்துவிடாமல் கூடவே படிக்கவும் செய்யுறான் என்று கேட்கும் போது இசக்கிமுத்து அடைகிற சந்தோசத்துக்கு அளவே இல்லை. மகன் என்ன படிக்கிறான் என்று அவன் ஆங்கிலத்தில சொல்லுற பெயர் விளங்காவிட்டாலும், போனில கதைக்கும் போதெல்லாம் திரும்ப திரும்ப அந்தப் பேரைக் கேட்டே சந்தோசப் பட்டுக் கொள்வான்.

ஒருமாதிரியாய் மகன் அவுஸ்திரேலியா போய் ஐந்து வருசத்திலேயே படிப்ப முடிச்சு அங்கே நல்ல வேலையிலும் செட்டிலாகி விட்டான், அவன் அனுப்புற காசால்தான் இசக்கி முத்துவுக்கு இப்போது இந்த மரியாதையெல்லாம்.


சில நாட்களுக்கு முன்பு , போனில கதைக்கும் போது நாதசிங்கம்,

``அப்பா
நான் வார கிழமை வேலை விசயமா இந்தியா போறன், அப்படியே விஜய் டிவி யிலையும் ஒரு பேட்டியும் தரச்சொல்லி கேட்டு இருக்காங்க , ஞாயிற்றுக் கிழமை விடியம் 8 மணிக்கு பாருங்கோ என்றான்.``

எங்கட நாட்டில் யுத்தம்என்று சொல்லித்தான் அவுஸ்திரேலியாவில அகதி அந்தஸ்த்து எடுத்ததால இந்தியாவுக்குப் போனாலும் பக்கத்தில இருக்கிற அவனுடைய நாட்டுக்கு வர முடியாம இருக்கே என்று இசக்கிக்கு கொஞ்சம் வருத்தம்தான்.

இருந்தாலும் டிவியில மகனைப் பார்க்கப் போறமே என்ற சந்தோசத்தில 11725 ரூபா கொடுத்து இப்பதான் புதுசா கேபிள் தொடர்பு எடுத்தான் . அப்படியே ஊர்முழுக்க தம்பட்டம் வேற அடிச்சிட்டான்.

நாளை

ஞாயிற்றுக் கிழமை
காலை 7.50 மணி

ஊரில கேபிள் இணைப்பு இருந்த டிவிகளுக்கு முன்னால் ஊர்ச் சனம் எல்லாமே கூடிவிட்டன .
சும்மாவா! அவர்களின் ஊரில் இருந்து ஒருவன் முதன் முதலாடிவியில வரப்போறான். அதுவும் இந்தியாவில இருக்கிற பெரிய டிவி சனல் ஒன்றில் வரப்போறான்.


நேரம் 7.58 ... 7.59... 8.00

``
வாழ்வோம் எங்கு
சென்றாலும் வீழோம்
தமிழைக் கொண்டாடி
வாழ்வோம்..
தமிழை நேசித்தே
சாவோம்`` என்ற அறிமுகப் பாடலோடு தொடங்கிய நிகழ்ச்சியை கஷ்டப்பட்டு தமிழ் ஏசி இல்லை இல்லை பேசி தொங்கினார் ஒரு மேக்கப் அழகி...

வணக்கம் ரசிகர்களே !

இன்று நாம் ` மிளிரும் தமிழகம் ` நிகழ்ச்சியில் சந்திக்கப் போவது, அவுஸ்திரேலியாவிலே ஹேர் டிரெஸ்ஸிங் பட்டப் படிப்பை முடித்து இன்று உலகப் புகழ் பெற்ற சிகை அலங்கரிப்பு நிபுணராக இருக்கும் இசக்கி முத்து நாதசிங்கம்....

அப்படியே சுமூகமாக 9 மணிவரை தொடர்ந்தது நிகழ்ச்சி ..

காலை 9.05 மணி
பேட்டி முடிந்தவுடன் நாதசிங்கம் ஸ்ரூடியோவை விட்டு வெளியே வந்து தன் போனை ஆன் பண்ணினான்.

``ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்...``
அவன் கைப்பேசியின் அழைப்பு மணிப் பாடல் ஒலித்தது.

அடுத்தமுனையில் அழைத்த அந்த நபர் ஆங்கிலத்தில் இப்படிச் சொன்னார் .
``ஹலோ நான் சச்சின் டெண்டுல்கார் பேசுறன், நீங்கள் தோனிக்கு செய்து விட்ட ஹேர் ஸ்டைல் மாதிரி நானும் செய்ய வேணும் என்று விருப்பப் படுகிறேன்.
உங்களின் நேரம் கிடைக்குமா ?``

அப்படியே தொடர்ந்தது உரையாடிக் கொண்டிருந்தார்கள் சச்சினும் நாதசிங்கமும் ...

காலை 9.௨0 மணி மட்டக்களப்பின் கிழக்கே இருக்கும் கிரான்குளம் என்ற கிராமத்தின் கிறவல் புழுதி பறக்கும் புழுதிக் காட்டு வீதியில் ....

புது லுமாலா சைக்கிளில் புது வெட்டி சடையோடும், புதுச் செருப்போடும் இசக்கி முத்து.

எதிரே வந்த சுப்பிரமணி இப்போது இசக்கி முத்துவை தவிர்த்து , பக்கத்தில போன ஒருவரோடு பேசினான்..

``பார்த்தியாடா நம்மட அம்பட்டன் மகனை, அவன் அவுஸ்திரேலியா போயும் அம்பட்டன் வேலைதான் பார்க்கிறானாம்.
எங்கே போனாலும் சாதிப் புத்தி போகுமா பின்ன ............................................................
.......................................................................................
இப்படி கதைத்துக் கொண்டே போனான் சுப்பிரமணி.``


முற்றும்

*************************************************************************************

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.பி.கு- நண்பர்களே! இதுதான் நான் எழுதும் முதல் கதை ( சில பேர் இதைப் போய் கதை என்று சொல்லி கதை அளக்கிறாயா என்பது விளங்குகிறது).

முதலாவது என்பதால் ஏதோ கதை என்று ஏற்றுக் கொள்ளலாம் எனும் நண்பர்கள் தயவு செய்து தமிழ் மனத்தில் உங்கள் வாக்குகளை அளித்து இதை போல மேலும் சில கதைகள் எழுத முயற்சி செய்ய ஒரு சின்ன டோஸ் ஊக்கம் தாருங்கள்.