8.05.2012

வயசு

நான்
வயதுக்கு வர முன்
அம்மாவும் அப்பாவும்தான்
என்னைக் கவனித்துக்
கொள்வார்கள்

நான் வயதுக்கு
வந்ததை ஊருக்கே
சொல்லிக் கொண்டாடினார்கள்
சந்தோஷோசமாகவே
இருந்தது

என்னோடு சிறு
வயதிலிருந்தே
விளையாடும் பக்கத்து
வீட்டுப் பையனோடு
பேசிக்கொண்டே பள்ளிக்குப்
போகும்போது
எனக்கு யாரென்றே
தெரியாத ஒருவர்
`பாரு வயசுக்கு வந்த
பொண்ணு வெட்கமேயில்லாமல்
ஒரு பையனோடு
கதைத்துக் கொண்டு
போறதை `என்று
சொல்லிக்கொண்டு
போனார் ....

இப்போது
அம்மா அப்பாவோடு
ஊரும் என்னை
கவனித்துக்
கொள்ளுக்கிறது

இதற்குத்தான்
ஊருக்கே சொன்னார்களோ ?

விரசம்

எனக்கும் அப்படி
வளர வேணுமென்று
சின்னவயதில்
ஆசைப்படுவேன்

வளர வளரத்தான்
அதைப் பாதுகாப்பதின்
கடினம் புரிந்தது

தவறுதலாய்
சிறிதாய் வெளியே
தெரிந்தாலும் போதும்
அப்பாடா
ஆயிரம் விஷமங்கள்

ஆனாலும் இந்த
சமூகம்
`எப்படிக் காட்டித்துப்
போறாள் பாரு`
என்று என்னைத்தான்
திட்டும்
அதைகாகவே அதை
மூடிமறைக்க நிறையவே
கஷ்டப்பட
வேண்டியிருந்தது

அப்படிக் கஷ்டப்பட்டு
மூடி மறைத்ததை
எத்தனையோ பேர்
சுற்றி இருக்கும்
போதே -ஒரு நாள்
வெளியே எடுத்தேன்
பாலுக்காக என்
குழந்தை
அழுதபோது ....

அப்போதும் சில
கண்கள் என்னை
விரசமாகத்தான்
பார்த்தன

அப்போது யாரும்
என்னைத் தப்பாக
சொல்லவில்லை
மாறாக அப்படிப்
பார்த்தவர்களையே
சொன்னது

முதன் முறையாக
பெண்ணாக இருப்பதன்
பெருமையை
இந்தச் சமூகம்
தந்தது எனக்கு

மார்பு

சிறுவயதில்
மென்மையாகத்தான்
இருந்தது
வளர வளர
உங்கள் விஷமப்
பார்வைகளாலும்
உரசல்களாலும்
கனத்துப்போனது
என் மார்பும்
மனசும் ....