1.24.2010

உரிமை

என் வீடு
என்றுதான்
சொல்லிக்கொள்கிறேன்

எனக்கு வரும்
கடிதங்களில் கூட
இந்த வீட்டின்
முகவரிதான்
இருக்கிறது

வெளியில் சென்று
அலுப்புத்தட்டினால்
நம்ம
வீட்டுக்குப் போவோம்
அப்பா!
என்றுதான்
அடம் பிடிக்கின்றன...
குழந்தைகள்


வேலை முடிந்து
திரும்பும் போது
என் வீட்டுக்குப்
போகின்றேன்
என்றுதான்
நண்பர்களிடம்
சொல்லிவிட்டுப்
புறப்படுகின்றேன்...எனது எனது
என்றுதான்
என் மனைவியும்
ஒவ்வொரு
பூச்செடியையும்
முற்றத்தில்
பராமரித்து
அழகு பார்க்கிறாள்...

இப்படி
என் வீடென்று
சொல்லிக்கொண்டாலும்....
இந்த வீட்டிலேயே
நான்
விருந்தாளியாகிப்
போகின்றேன்
வீட்டுக் காரன்
வாடகை கேட்டு
வரும்போது..