Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

7.04.2009

குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு

அநேகமானோர் வலிப்பு ஏற்பட்ட நபரை நேரிலே பார்த்த அனுபவம் பெற்றிருக்கலாம்,அல்லது சினிமாவிலாவது கட்டாயம் பார்த்திருக்கலாம். ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டாலே அவருக்கு காக்காய் வலிப்பு(எபிலெப்சி/epilepsy )நோய்தான் இருக்கிறது என்று நம்மவர்கள் முடிவு செய்து விடுகிறார்கள்.

காக்காய் வலிப்பு எனும் நோய் தவிர இன்னும் பல விதமான நோய்களிலேயும் வலிப்பு ஏற்படலாம். வலிப்பு ஏற்பட்டவர்களுக்கெல்லாம் காக்காய் வலிப்பு எனும் நோயில் வரும் என்ற தவறான கருத்தை நீங்கள் விட்டொழிக்க வேண்டும்.

இந்த இடுகையில் நான் சிறு பிள்ளைகளுக்கு காய்ச்சலோடு ஏற்படுகின்ற வலிப்பு(febrile fits ) பற்றி சில விடயங்களை சொல்கிறேன்.

ஒரு சிறு பிள்ளைக்கு காய்ச்சல் வந்திருக்கும் நேரத்தில் வலிப்பு வந்தால் ,

முதலாவதாக நீங்கள் சிந்திக்க வேண்டியது அது மூளைக்காய்ச்சலாகவும் இருக்கலாம் . ஏனென்றால் மூளைக்காய்ச்சளில் காய்ச்சலோடு வலிப்பு வரும்.

அடுத்ததாக அது காய்ச்சலோடு வரும் சாதரண வலிப்பாக இருக்கலாம். அநேகமான சந்தர்ப்பத்திலே சிறு பிள்ளைக்கு காய்ச்சல் வரும் போது அது febrile fits ஆகத்தான் இருந்தாலும், நாம் முதலில் மூளைக்காய்ச்சளைச் சிந்திப்பது , மூளைக்காய்ச்சல் மிகவும் ஆரம்பக்கட்டத்திலே இனங்காணப்பட்டு சுகமாக்கப் பட வேண்டியது என்பதாலே .

ஆகவே முதன் முறையாக உங்கள் பிள்ளைக்கு காய்ச்சலோடு வலிப்பு வந்தால் அது மூளைக்காய்ச்சல் அல்ல என்று நிரூபிக்கப்பட வேண்டும். அதற்காக அந்தக் குழந்தை வைத்தியரிடம் அழைத்துப் போகப்பட வேண்டும். வைத்தியர் அது மூளைக் காய்ச்சல் அல்ல வெறுமனே சாதரண காய்ச்சலோடு வருகின்ற வலிப்பே(febrile fits ) என்று சொல்வாரானால் நீங்கள் எந்த வகையிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

febrile fits எந்த வயதினருக்கு ஏற்படும்?

பிறந்து ஆறு மாதத்தில் இருந்து 5-6 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கே ஏற்படும் .
(இந்த வயதெல்லைகளுக்கு அப்பாற்பட்ட குழந்தைகளுக்கும் காய்ச்சலோடு வலிப்பு ஏற்படலாம் என்றாலும் , அவர்களுக்கு சற்று அதிகமான மருத்துவக் கண்காணிப்பு வழங்கப் பட வேண்டும்)

ஒருமுறை febrile fits வந்தால் மீண்டும் வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளதா?

30 வீதமான குழந்தைகளுக்கு மீண்டும் காய்ச்சல் வரும் சந்தர்ப்பத்திலே febrile fits வரலாம்.

febrile fitsயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காக்காய் வலிப்பு நோய் ஏற்படலாமா?

மிகவும் அரிதாகவே ஏற்படும்(2%) . அதாவது febrile fits ஏற்படும் பட்சத்தில் பெற்றோர் காக்காய் வலிப்பு நோய் ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவை இல்லை.

ஒருமுறை febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு மறு முறை காய்ச்சல் வரும் போது தாய் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன?

ஏற்கனவே சொன்னது போல மீண்டும் காய்ச்சல் ஏற்படும்போது மீண்டும் ஒருமுறை febrile fits வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளதால், தாய் சற்று கவனம் எடுப்பது நல்லது.

குறிப்பாக காய்ச்சல் அதிகமாகாத படி கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்காக பரசிட்டமோல் எனப்படும் மருந்து இலகுவாக கடையிலே பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தாயும் தன் குழந்தையின் நிறைகேற்ப எவ்வளவு பரசிட்டமோல் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
( பரசிட்டமோல் மருந்தும் வைத்தியர் அறிவுறித்திய அளவுக்கே கொடுக்கப் பட வேண்டும். அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டால் அதுவும் நஞ்சாகி குழந்தையின் ஈரலை பாதிக்கலாம்)

அதேபோல் ,தாய் இயற்கையான சில வழிமுறைகளிலே குழந்தையின் காய்ச்சல் ( உடல் வெப்ப நிலை) அதிகரிக்காமல் கவனித்துக் கொள்ள முடியும்.

அவையாவன ,

  1. ஈரமானதுணியினால்குழந்தையைதுடைத்தல்
  2. மின்விசிறியின்கீழ்குழந்தையைபடுக்கவைத்தல்
  3. மெல்லியஆடைஅணிவித்தல்

febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு அதை தடுப்பதற்காக ஏதாவது மருந்துகள் கொடுக்கப் பட வேண்டுமா?

வலிப்பைத் தடுப்பதற்காக எந்த ஒரு மருந்தும் தொடர்ச்சியாக கொடுக்கப் படவேண்டிய அவசியம் இல்லை இருந்தாலும் , சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வருபோழுது febrile fits வராமல் தடுப்பதற்க்காக சில மருந்துகள் பயன்படுத்தப் படலாம். இவை ஒரு வைத்திய நிபுணரின் ஆலோசனையுடனேயே வழங்கப் படவேண்டும்.
( எல்லாக் குழந்தைகளுக்கும் வழங்கப் பட வேண்டியதில்லை)

febrile fits ஏற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப் படும் போது ஏதாவது முன் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமா?

febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு எலாவிதமான தடுப்போசிகளும் வழங்கப்பட வேண்டும். ஆனாலும் தடுப்போசி போடுவதற்கு முன் வைத்தியரின் ஆலோசனை பெறப்பட வேண்டும். சிறு மேலதிக கவனிப்பும் சில தடுப்போசிகளுக்குத் தேவைப்படலாம். சில தடுப்போசிகள் சற்று பிற் போட வேண்டி வரலாம். ஆகவே வைத்தியரின் ஆலோசனை பெறுவது முக்கியமானது.

ஒரு பிள்ளைக்கு வலிப்பு வரும் போது அருகில் இருப்பவர்கள் செய்யவேண்டிய முதல் உதவி பற்றி வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய நடைமுறைகள் என்ன ?

முதலில் பிள்ளையை ஒரு பாதுகாப்பான இடத்தில் படுக்க வைக்க வேண்டும் .

பிளையின் மூச்சுகுழாய் அடிபடாமல் இருக்க இடதுபுறம் சரிவாக படுக்க வைக்க வேண்டும் அதாவது பிள்ளையை இடதுபுறமாக பக்கவாட்டில் படுகவைகவேண்டும் (மல்லாக்க படுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்)

நமது சினிமாப் படங்களில் காட்டுவதைப் போல கையிலேயோ அல்லது வாயிலோயோ இரும்பு துண்டை வைப்பதை தவிர்க்க வேண்டும்.(இரும்பை கையில் வைத்தவுடன் வலிப்பு சுகமாவது போல் படங்களில் காட்டப்படுவது வெறும் கற்பனையே, அதற்கும் மேல் இரும்பை கையில் வைக்கும் போது பாதிப்பு ஏற்படலாமே தவிர எந்தவகையிலும் நன்மை ஏற்படாது)

வலிப்பு 5நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் .( அப்போதும் முடிந்தளவு பிள்ளையை இடது புறமாக சரித்த நிலையிலேயே கொண்டு செல்ல வேண்டும்).

இது பற்றிய சரியான நடைமுறையை ஒவ்வொரு தாயும் வைத்தியரிடம் கேட்டு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவர்களின் கடமை. இது ஒரு உயிர் காக்கும் செயமுறையாகும்.


பி.கு- இந்த இடுகை ஒரு பதிவரின் தேவை அறிந்து , அவருக்காக இடப்படுகிறது.








6.15.2009

சினிமாப் படங்களில் மருத்துவக் காட்சிகள்

நேற்று தித்திக்குதே என்ற படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளை பார்க்க வேண்டிய கொடுமையான ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அந்த காட்சியில் கதாநாயகன் வலியில் அவதிப்பட்டு முனகும் பொழுது வைத்தியர்கள் நெஞ்சை அழுத்தி CPR எனப்படும் மருத்துவ உதவி அளிக்கிறார்கள் .
அந்த நிலையில் உள்ள ஒருவருக்கு அந்த செய்முறை தேவையே இல்லை.

அது
மட்டும் தான் என்று பார்த்தால் இல்லை அதற்கு பிறகு நாயகன் இறந்து விட்டதாக வைத்தியர்கள் சொல்லிவிட்டு சென்றபிறகு, நாயகி கோயிலிலே இருக்கும் சிலையை பார்க்கிறாள், அந்த இடத்திலே ஒரு சின்னவயசு பிளாஷ் பக் வேறு , பிறகு அங்கிருந்து சிலையை எடுத்துக் கொண்டு நாயகன் அருகிலே வைக்க நாயகன்உயிர் பெறுகிறார் .எப்படியோ இதற்கு பத்து நிமிடங்களுக்கு மேல் தேவை ( இதெல்லாம் நாங்க எத்தனை படத்தில பார்த்திட்டம் , இதைப் போய் பெரிசாக்கிட்டு என்று நீங்கள் முனு முணுப்பது கேட்கிறது).

நிஜத்தில் இது சாத்தியமா?

நான் சில மருத்துவ ரீதியான தகவல்களை சொல்லுகிறேன் , அதற்குப் பிறகு இதற்கான விடை உங்களுக்கே புரியும்.

உண்மையில் வைத்தியர் இறப்பு என்று சொல்வது என்ன?
ஒருவருடைய இதய தொழிற்பாடு(துடிப்பு) மற்றும் சுவாசித்தல் என்ற தொழிற்பாடு நிரந்தரமாக நிற்பதையே இறப்பு என்பதற்கு என்னால் கொடுக்கக் கூடிய ஆகவும் எளிய விளக்கம்.

இங்கே நிரந்தரமாக என்ற சொல் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தொழிற்பாடு என்பவை தற்காலிகமாக நிற்கலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் முதல் உதவி மற்றும் மேலதிக மருத்துவ வசதிகள் மூலம் நின்று போன இதய மற்றும் சுவாசத் தொளிட்பாடுகளை மீண்டும் தொழிற்பட செய்து அந்த நோயாளியின் உயிரை சாத்தியமா முடியும்.

இந்த இடத்தில்தான் முக்கிய பிரச்சனையே , அதுதான் இதய மற்றும் சுவாச இயக்கம் நின்ற பின் எவ்வளவு நேரத்திற்குள் நாம் முதலுதவியோ மருத்துவ உதவியோ வழங்குகிறோம் என்பதை பொறுத்தே அந்த நோயாளி உயிர் பிழைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

ஒருவரின் இதய மற்றும் சுவாச தொழிற்பாடு தடைப்பட்ட பின் எவ்வளவு நேரத்துக்குள் முதல் உதவி வழங்கப் பட வேண்டும்?

ஒருவரின் இதய மற்றும் சுவாச இயக்கம் நிற்கும் போது , அவரின் உடலுக்கு ஒட்சிசன் கிடைப்பது தடைப்பட்டு போகிறது. அது மட்டுமல்ல கலங்கள் சுவாசிப்பதற்கான வேறு பதார்த்தங்களும் குருதியால் எடுத்துச் செல்லப் படுவது தடைப்படுகிறது.

இவ்வாறு ஒட்சிசன் இல்லாமல் நமது மூளையால் வெறும் மூன்று நிமிடங்களே தாக்குப்பிடிக்க முடியும். நான்காவது நிமிடத்தில் இருந்து மூளை பாதிக்கப்பட தொடங்கும். அதாவது ஒருவரின் இதயம் மற்றும் சுவாசம் நிற்கும் பட்சத்தில் அவருக்குரிய மருத்துவ உதவி (முதல் உதவி) முதல் ஒரு சில நிமிடங்களுக்குள் வழங்கப் பட்டால் மட்டுமே அவரின் மூளை பாதிக்கப் படாமல் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது.

நேரம் செல்ல செல்ல அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைந்துகொண்டே போகும். இங்கு நேரம் என்பது செக்கன்கள்.ஒவ்வொரு செக்கன் துளிகளும் முக்கியமானவை.

ஐந்து அல்லது ஆறு நிமிடங்களின் பின் கூட ஒருவர் பிழைக்கலாம் ஆனால் அவரின் மூளை நிச்சயமாக பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய சந்தப்பமே உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் வீணடிக்கப் படும் ஒவ்வொரு செக்கனும் அவர் உயிர் இழப்பதற்கான சந்தர்ப்பத்தை பல மடங்கு கூட்டி விடும்..

எது எப்படியோ ஒருவரின் இதயம் மற்றும் சுவாசம் நின்று பத்து நிமிடங்களுக்கு பின் உயி பெறுவது என்பது நம் சினிமா படங்களுக்கே பொருத்தம்.

மற்றும் ஒருவரின் இதயம் மற்றும் சுவாசம் என்பவை மீண்டும் இயக்கம் பெறுவது என்பது தனியே மருத்துவ வசதியில் மட்டுமே தங்கி இல்லை. முக்கியமாக என்ன காரணத்திற்காக அவரின் இதய மற்றும் சுவாச தொழிற்பாடுகள் இடையில் நின்று போனது எனபதிலும் தங்கியுள்ளது.

அதாவது சில காரணங்களால் இதய மற்றும் சுவாச தொழிற்பாடு நிற்கும் போது அவற்றை மீண்டும் இயக்கம் பெற வைக்க முடியாது, எவ்வளவு நேரத்துடன் மருத்துவ வசதி இருந்தாலும். ( என்னென்ன காரணங்களால் ஒருவரின் இதய துடிப்பு நின்று போகலாம் என்று அடுத்த இடுகையில் இடுகிறேன்)

முடிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒருவர் இதயம் மற்றும் சுவாசம் நிற்கும் போது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முதல் உதவி அளிக்கப்பட வேண்டும். ஆகவே உங்களின் அருகே உள்ள ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முதல் உதவியை ஆரம்பிக்க வேண்டும்.

சரி ஒருவருக்கு இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் நின்று விட்டது என்று எவ்வாறு கண்டு பிடிப்பது?

அப்படிப்பட்ட ஒருவருக்கு என்ன செய்ய வேண்டும்?( அதுதானே சிவாஜி படத்தில பார்த்துட்டம் என்று சொல்லுறீங்களா? )

சிவாஜி படத்தில் நீங்கள் பார்த்தது நிஜத்தில் சாத்தியமா ?

கரன்ட் கொடுப்பதன் உண்மை விளக்கம் என்ன ?

விடைகளோடு இன்னும் ஒரு இடுகையில் சந்திக்கிறேன்.