10.03.2014

தூறிக்கிடக்கும் வார்த்தை

இலையுதிர் காலம்
உதிர்ப்பதற்கு எதுவுமின்றி
நான்

கீரியும் பாம்புமாய்
மனிதனும்
மனிதனும்

பழுதாய்ப்போன சோறில்
விஷ்க்கிருமி
அடங்கிப்போனது
பிச்சைக்காரனின்
பசி

வெற்றுச் சூப்பியை
சூப்பிச் சூப்பி களைத்துப்போன‌
குழந்தை நிறுத்தியது
அழுகையை

யாருமில்லாத தனிமையில்
வந்து போகின்றார்கள்
நிறையப்பேர்கள்
இறந்தவர்கள் உட்பட‌

எல்லாம் இருந்தும்
என்ன பயன்
நீயில்லாமல்

கனவு பொய்யாகும்
உண்மையாகும் போது

அவசரத்தில் நடந்த‌
குற்றம்
மூடி மறைத்தது
அவசரகருத்தடை

முற்றத்து ரோஜாவின்
முதல் பூவை ஆசையாய்
பறித்தவள்
சூட்டினால் கணவனின்
புகைப்படத்திற்கு

உண்மைக்கு அழிவில்லை
உண்மை பேசுபவர்கள்
அழியலாம்


சீதனம் கேட்டான்
செத்தது ஆண்மை

பசிப்பது பக்தனுக்கு
படைப்பது கடவுளுக்கு

பார்வையற்றவனுக்கு
கண் கொடுக்காவிட்டாலும்
பரவாயில்லை
கை கொடுங்கள்


பாசம் இருக்கும்
வீட்டில் பணத்திற்குத்
தேவை குறைவு

மனிதன் சொல்வதைக்
கேட்கின்றோமோ
இல்லையோ
பல்லி சொல்வதைக்
கேட்போம்

அழுவதற்கு
கண்கள் தேவையில்லை
மனசு போதும்