9.29.2012

பர்தா


அந்தச் செய்தி ராகவனுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் , அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அப்படியொரு செய்திக்காகத்தானே அவன் இவ்வளவு காலமாக காத்துக்கொண்டிருந்தான். இருந்தாலும் அதை 
மீண்டும் உறுதிப்படுத்தும் முகமாக தன்  உதவியாளரிடம் ` உண்மையத்தான் சொல்லுருகிறாயா` ? என்றான். 
`ஆமாம் சார் எனக்கு  தெரிந்த நல்ல நண்பன் ஒருவன் ஆகாஷ் இருக்கும் தெருவில்தான் இருக்கான்  அவன்தான் இந்த விடயத்தையே சொன்னான் ` என்ற தன உதவியாளரிடம் இதை  பற்றி உடனடியாக எழுதுங்கள் இதை நாளைக்கே நம் பத்திரிகையில் போட்டு ஆகாஷின் ஆட்டத்தையெல்லாம் அடக்கியாகனும் என்று கட்டளையிட்டான் ராகவன் .
ஆகாஷ் ஒரு முற்போக்குவாதி குறிப்பாக பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் எங்கு நடந்தாலும் அதைப் பற்றி துணிந்து எழுதும் பத்திரிகையாளன். தனியே பத்திரிகையோடு மட்டும் இல்லாமல் தனது பேச்சாற்றல் கவியாற்றல் என்பவற்றின் மூலமும் பெண்களுக்கெதிரான போலியான சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிவதற்கு முழுமூச்சோடு ஈடுபட்டுக்கொண்டிருப்பவன். அவனுக்குக் கிடைத்திருக்கும் நவீன பாரதி என்ற பட்டமே போதும் அவன் திறமைகளை சொல்ல.

ராகவன் ஒரு பத்திரிக்கை ஆசிரியர் .ஒருநாள் முஸ்லிம் பெண் ஒருவர் பர்தா அணிந்துகொள்ளாமல் போனதற்கு ஊரே சேர்ந்து கல்லடி கொடுத்து தண்டித்ததை செய்தியாகப் போட்டது மட்டுமில்லாமல் ,கலாச்சாரத்தை மீறியது அந்தப் பெண்ணின் தப்பு என்று  இந்த காட்டுமிராண்டித் 
தனத்துக்கு வக்காலத்து வாங்கி ராகவன்  எழுத , அதைப் பார்த்துக் கொதித்தெழுந்த ஆகாஷின் பேச்சுக்களும் எழுதிய எழுத்துக்களும் ராகவனின் பத்திரிகைக்கு எதிராக ஒட்டுமொத்த வாசகர்களையும் திருப்பி விட 
கடைசியில் அனைத்து வாசகர்களிடம் தன் கருத்துக்கு பொது மன்னிப்புக் கேட்டு தலை குனிய வேண்டிய நிலை ராகவனுக்கு வந்தது. அன்றிலிருந்து ஆகாஷை எப்படியாவது பழி வாங்கியாகனும் என்ற முடிவோடு இருந்த ராகவனுக்கு ,
`சார் , ஆகாஷ் கலியாணம் கட்டியிருப்பது  ஒரு முஸ்லிம் பொண்ணாம்.அந்தப் பொண்ணை அவன் வீட்டை விட்டு 
வெளியே வருவதற்கும் விடுவதில்லையாம்.வீட்டுக்குள்ளேயும் அந்தப் பொண்ணு எப்பவும் பர்தா போட்டுக்கொண்டுதான் இருக்கணும் என்று வேற ஆர்டர் போட்டு அடக்கி வேற  வச்சிருக்கனாம் ` என்று சொன்னதை 
கேட்டு ராகவன் ஆச்சரியப்பட்டதில் ஆச்சரியமில்லை .இதற்காகத்தானே இத்தனைகாலமாக அவன் காத்துக்கொண்டிருந்தான். 
அடுத்தநாள் பத்திரிகையில் `ஆகாஷின் அண்டப் புளுகுகள் `என்ற கேவலமான ஆசிரியர்  தலையங்கத்தில்     ஆகாஷ் தன் மனைவியை வீட்டில் அடக்கி வைத்துக்கொண்டு வெளியிலே பெண்கள் காவலனாக  
 வேடம் போடுவதாக  ராகவன் எழுதி தன் பழியைத் த் தீர்த்துக்கொண்டான் 
இதற்கு ஆகாஷ் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்பதிலிருந்தே இது உண்மையாகத்தான் இருக்கவேண்டும் இந்த விடயம் ஒன்னு போதும் அவனை இந்த துறையில் இருந்தே விரட்டி விடலாம் என்று
நினைத்துகொண்டிருந்தபோது ராகவனின் வீட்டு அழைப்பு மணி அடித்தது.
ராகவன் போய்க் கதவைத் திறக்க  வெளியே ஒரு பொண்ணு பர்தாவுடன் 
`சார் உள்ளே வரலாமா `என்றாள்? 
வாங்க வந்து உட்காருங்க ,நீங்க யாரென்னு அறிந்துகொள்ளலமா? என்றான் ராகவன் .
உள்ளே வந்த பொண்ணு உடனேயே தன் பர்தாவை அகற்ற அவள் முகத்தைப் பார்த்த ராகவன் அதிர்ந்து போனான்.அவள் முகம் முழுக்க எறிந்த தழும்புகளோடு பார்க்க அருவருப்பாகவே இருந்தது. அவள் கண்களில் இருந்து 
சில துளி கண்ணீர் ததும்பிக்கொண்டிருந்தது. 
என்னம்மா என்னாச்சு என்ற ராகவனிடம் 
சார் உங்க பேப்பர்ல ஆகாஷ் பற்றி வந்த கட்டுரையைப்பார்த்தன் , அந்த ஆகாஷின் மனைவி நான்தான் சார் என்றாள்.
ஓ..... ஆச்சரியப்பட்ட ராகவன் என்னாச்சம்மா அந்தப் படுபாவிதான் சூடு வச்சானா என்றான்.

ஐயோ சார் அப்படி சொல்லாதீங்க,அவர் தெய்வம்  நீங்க எழுதியமாதிரி நான் ஒன்னும் முஸ்லிம் பொண்ணு அல்ல தமிழ்ப் பொண்ணுதான். எனக்கு நடந்த ஒரு அக்சிடண்டில முகம் இப்படி எரிஞ்சு போக தற்கொலைக்கு 
முயற்சி செய்து ஆசுபத்திரில இருந்த என்னை பார்க்கவந்த ஆகாஷ்தான் என்னை மனம் முடித்து எனக்கும் ஒரு வாழ்க்கை தந்த கடவுள். நான் தான் அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காம என் முகத்தை எனக்கே பார்க்கப் பிடிக்காததால் இப்படி பர்தா போட்டு வீட்டிலேயே அடங்கிக் கிடக்கிறேன். 
மற்றப்படி ஒரு கணவனாக அவர் எந்தக் குறையும் வைக்கவில்லை. அதுமட்டுமா இதைப் பற்றி வெளியே சொல்லி அவர் புகழ் பரப்பக்கூட இல்லை . அவரைப்பற்றி தயவு செய்து இனி தயவு செய்து பிழையாக எழுதாதீர்கள் என்று கூறிவிட்டு வெளியேறினாள்  .
இப்போது ராகவனின் கண்ணிலே சில துளி கண்ணீர் ததும்பியிருந்தது .

No comments: