உனக்கென நான்
இருப்பேன்
எனக்கென
நீ இரு
என்றாய்...
மனம்
ஒத்தபின் எதற்கு
மணம் என்றாய்
ஒத்துக்கொண்டேன்...
பிரச்சினைவந்தால்
பிரிந்துவிடலாம்
என்ற ஒப்பந்தம்
போடாவிட்டாலும் ...
அதைபற்றி நாம்
பேசாவிட்டாலும் ....
கையில் இருந்த
வேலை தந்த
தைரியத்திலும்...
மனதில் இருந்த
காதல் தந்த
தைரியத்திலும்
சேர்ந்தே
வாழ்ந்தோம்...
ஆசை அறுபதுநாள்
மோகம் முப்பதுநாள்
அல்ல
அதற்கு மேலேயே
வாழ்ந்தோம்...
இரண்டு குழந்தைக்கு
நான் அம்மாவாகிப்
போகும்வரை
ஒத்துப்போன
நம் மனது
கொஞ்சம் கொஞ்சமாய்
முரண்படத்
தொடங்கியது...
ஒத்துவராத வாழ்க்கை
இலகுவாக
பிரிந்துவிட்டாய்...
நீ எங்கேயோ
என்னைப்போல
இன்னொருத்தியைத்
தேடிக் கொண்டிருக்கலாம்
அல்லது
இந்நேரம்
கண்டே பிடித்திருக்கலாம்.
நான்
அழவில்லை
ஏனெறால் நான்
புதுமைப்பெண்...
இருபத்திஎட்டு
வயதில்
யார் யாரோ
சொல்லப்போகும்
வார்த்தைகளையும்
கேவலமான
பட்டங்களையும்
ஒதுக்கிவிடும்
பக்குவம் எனக்கு
இருக்கிறது....
என் கவலையெல்லாம்
என் பெண்
பதின்மூன்று
பதினான்கு
வயதளவில்
கேட்கப்போகும்
அவச் சொட்களை
உதாசீனப்படுத்தும்
பக்குவத்தை
பெறுவாளா?
என்னதான்
புதுமைப்
பெண்ணாக
இருந்தாலும்
என் அப்பா
யார் என்று
கேட்கும்
பையனிடம்...
அப்பாவிற்கு அம்மாவைப்
பிடிக்கவில்லை
அதனால் விட்டு விட்டு
இன்னொரு அம்மாவைத்
தேடித் போய்
விட்டார் என்று
சொல்லும்
தைரியமும்
எனக்கில்லை..
பிள்ளைகளுக்கு
தெரிந்துகொள்ளும்
வயதுவரும் முன்னே
யாருக்கும்
தெரியாத
ஒரு ஊரில்
குடியேறிவிட்டேன்..
இருந்த வேலைதான்
போய்விட்டது
இருந்தாலும்
கவலையில்லை
கூலி வேலை
செய்தாவது
பிள்ளைகளை
வளர்த்து விடுவேன்...
ஆனால்
அவர்களை
அப்பா இறந்துவிட்டார்
என்று சொல்லியே
நம்பவைத்திருக்கிறேன்...
என்னவனே
இரண்டுவருடம்
என்னோடு வாழ்ந்ததிற்கு
ஜீவனோபாயமாக
நான் கேட்பது
தயவுசெய்து
இந்த ஊருக்குமட்டும்
வந்து
நீதான் என்
குழந்தைகளுக்கு
அப்பா என்று
தெரியப்படுத்தி விடாதே
இப்படிக்கு
உன் கடந்தகால
காதலி/மனைவி/ பார்ட்னர்
ஏதோ ஒன்று...