10.03.2014

தூறிக்கிடக்கும் வார்த்தை

இலையுதிர் காலம்
உதிர்ப்பதற்கு எதுவுமின்றி
நான்

கீரியும் பாம்புமாய்
மனிதனும்
மனிதனும்

பழுதாய்ப்போன சோறில்
விஷ்க்கிருமி
அடங்கிப்போனது
பிச்சைக்காரனின்
பசி

வெற்றுச் சூப்பியை
சூப்பிச் சூப்பி களைத்துப்போன‌
குழந்தை நிறுத்தியது
அழுகையை

யாருமில்லாத தனிமையில்
வந்து போகின்றார்கள்
நிறையப்பேர்கள்
இறந்தவர்கள் உட்பட‌

எல்லாம் இருந்தும்
என்ன பயன்
நீயில்லாமல்

கனவு பொய்யாகும்
உண்மையாகும் போது

அவசரத்தில் நடந்த‌
குற்றம்
மூடி மறைத்தது
அவசரகருத்தடை

முற்றத்து ரோஜாவின்
முதல் பூவை ஆசையாய்
பறித்தவள்
சூட்டினால் கணவனின்
புகைப்படத்திற்கு

உண்மைக்கு அழிவில்லை
உண்மை பேசுபவர்கள்
அழியலாம்


சீதனம் கேட்டான்
செத்தது ஆண்மை

பசிப்பது பக்தனுக்கு
படைப்பது கடவுளுக்கு

பார்வையற்றவனுக்கு
கண் கொடுக்காவிட்டாலும்
பரவாயில்லை
கை கொடுங்கள்


பாசம் இருக்கும்
வீட்டில் பணத்திற்குத்
தேவை குறைவு

மனிதன் சொல்வதைக்
கேட்கின்றோமோ
இல்லையோ
பல்லி சொல்வதைக்
கேட்போம்

அழுவதற்கு
கண்கள் தேவையில்லை
மனசு போதும்

1.13.2013

ரிஷானா ! மார்க்கத்தின் தண்டையா? மூர்க்கத்தின் தண்டனையா?


ரிஷானா !
உனக்காக ஒரு சில நிமிடங்கள் மௌன அஞ்சலியோ அல்லது ஒரு
இரங்கல் கடிதமோ /கவிதையோ எழுதிவிட்டு சாதாரண வேலையை
தொடரும் சாமான்னியந்தான் நான். இருந்தாலும் என்ன செய்ய
அது எங்கள் இயலாமையின் உச்சக்கட்டம் .

கடவுள் என்பது மூட நம்பிக்கையில்லை ஆனாலும் மனிதனை மூடனாக்கும்
கடவுள் என்பது மூட நம்பிக்கைதான்.

இன்று அரபு தேசம் தங்கள் கடவுள் நம்பிக்கையின் உக்கிரத்தை வெளி உலகுக்குக்
காட்ட உன் உயிரைப் பறித்தெ டுத்திருக்கின்றது .

  அப்போது உனக்கு வயது பதினேழு தானாம். 19வயதுக்கு முன்பு குழந்தை பெற்றுக்
 கொள்வது உகந்ததல்ல என்று மருத்துவம் கூறுகின்றது.அவ்வாறு ஒரு பெண்
அதற்கு முன்பு கருத்தரித்தால் அது ஆபத்துக் கூடிய கருவாகக் கருவாகக் கருதப்பட்டு
விஷேட கவனம் செலுத்துவது மருத்துவத்தின் வழக்கமாகும்.

அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அந்த வயதில் ஒரு குழந்தையை
கவனிக்கும் அளவுக்கு ஒரு பெண் முதிர்ச்சி நிலையை அடைந்து விடவில்லை
என்பதுமாகும்.


 ஆக அப்போது உன் வயது , உனக்கு சொந்தமாகப் பிறந்த குழந்தையைக் கூட
கவனிக்க முடியாத வயது.
வீட்டு வேலைக்கு எனச் சென்ற உன்னை , வீட்டு வேலை (கழுவுதல் /சமையல்) என்று
அனைத்து வேலைகளுடனும் மூன்று குழந்தைகளையும் பார்க்கச் சொல்லிச் சொன்ன
அந்தத் எஜமானிதான் அந்தக் குழந்தையின் இறப்புக்குக் காரணம்.

வீட்டு வேலைக்கென அழைத்து இப்படி அடிமை போல வேலை கொடுப்பதற்கு ஷா ரி யா
சட்டத்தில் எந்த தண்டனையும் இல்லையா?

என்ன செய்ய றிஷானா ?
ஷாரியா மட்டுமல்ல  எந்தச் சட்டமும் இப்போது அதிகார வர்கத்தின் இருப்புக்காகவே
மாற்றிய மைக்கப் படுவதே வழக்காகிப்போனது.


உன் மார்க்கத்தின் மீது உன் சகோதரர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு கண்டு
வியக்கின்றேன். உங்கள் சகோதரர்களில் ஒருவன் சொல்லுகின்றான்
உங்கள் மார்க்கத்தின் படி ஒரு பெண் தனியே வெளிநாடு செல்வது தண்டனைக்குரிய
குற்றமாம் .அதற்கான தண்டனை இந்த உலகத்தில் அல்லாவிட்டாலும் மேல் உலகத்திலாவது
கிடைக்குமாம். நான் நினைக்கின்றேன் இன்னும் உன் சகோதரர்கள் நீ வெளிநாட்டுக்கு சுற்றுலா
செல்வதற்காக சென்றதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் போல?

போஸ்ட் மாட்டர்ம் கூட செய்யாமல் கொலையை தீர்மானிக்கும் ஒரு  பிற்போக்கான
சமூகத்தில் நீ வாழ நேர்ந்தது உன் கொடுமைதான். இருந்தாலும் உன் சகோதர்களில் ஒருவன்
கடவுளிடம் நல்ல பெயர் எடுக்க ஒரு அப்பட்டமான பொய்யைக் கூறி உன்னைக் கொலை
காரியாக சித்தரிக்க முயல்கின்றான்.
அதற்கு அவன் கூறிய காரணமானது நீ கொடுத்த பாலிலே கண்ணாடித் துகள்களை அரைத்துக் கொடுத்தாயாம்?

அவர் ஒரு மருத்துவ மாணவராம். பாவம்! அவர் milk aspiration காரணமாக எத்தனையோ குழந்தைகளின் இறப்பை
பார்க்க வேண்டி வரும் .அப்போதெல்லாம் அந்த குழந்தைகளின் தாய் எல்லோரையும் கொலைகாரி
என்றுதானே அவர் முத்திரை குத்துவார்.
 மருத்துவ பீட குழந்தை நல பிரிவு போதனையாளர்கள் இது பற்றி கொஞ்சம் கவனமெடுப்பது நன்று.

றிஷானா ! இறுதியாக இன்று வாசித்த செய்தி இன்னும் என்னை கலங்க வைத்தது.
இதுவரைகாலமும் கொலை காரர்கள் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த உன் அம்மாவே
இன்று உன் தண்டனையை ஏற்றுக் கொள்வதாக கூறி உன்னைக் கொலை காரியாக்கி இருக்கிறார்..
அவரின் இந்தத் திடீர் மாற்றம் ,மார்க்கப் பற்று எதற்காக? இதுவரை காலமும் தன குழந்தை தப்பே
செய்திருக்க மாட்டாள் என்று சொன்ன தாய் திடீரென உன்னை கொலை காரி என்று கூற என்ன காரணம்?

ஆக  றிஷானா!
நீ இருந்த போதும் ஏமாற்றப்பட்டு விட்டாய்
இறந்தபோதும் ஏமாற்றப்பட்டு விட்டாய்
உன் சகோதரர்களும் ,உறவினர்களுமே உன்னைக் கொலை காரியாக முத்திரை குத்தும்
போது  எங்களால் என்ன செய்ய முடியும்?

ஆனால் எங்களுக்காக உன்னிடம் ஒன்று கேட்கின்றேன்!
எல்லாம் வல்ல உன் இறைவனை சந்திக்க நேர்ந்தால் , உன் சகோதரர்களுக்கு நல்ல அறிவை
வழங்கும்படி வேண்டிக்கொள் .


9.29.2012

பர்தா


அந்தச் செய்தி ராகவனுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் , அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அப்படியொரு செய்திக்காகத்தானே அவன் இவ்வளவு காலமாக காத்துக்கொண்டிருந்தான். இருந்தாலும் அதை 
மீண்டும் உறுதிப்படுத்தும் முகமாக தன்  உதவியாளரிடம் ` உண்மையத்தான் சொல்லுருகிறாயா` ? என்றான். 
`ஆமாம் சார் எனக்கு  தெரிந்த நல்ல நண்பன் ஒருவன் ஆகாஷ் இருக்கும் தெருவில்தான் இருக்கான்  அவன்தான் இந்த விடயத்தையே சொன்னான் ` என்ற தன உதவியாளரிடம் இதை  பற்றி உடனடியாக எழுதுங்கள் இதை நாளைக்கே நம் பத்திரிகையில் போட்டு ஆகாஷின் ஆட்டத்தையெல்லாம் அடக்கியாகனும் என்று கட்டளையிட்டான் ராகவன் .
ஆகாஷ் ஒரு முற்போக்குவாதி குறிப்பாக பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் எங்கு நடந்தாலும் அதைப் பற்றி துணிந்து எழுதும் பத்திரிகையாளன். தனியே பத்திரிகையோடு மட்டும் இல்லாமல் தனது பேச்சாற்றல் கவியாற்றல் என்பவற்றின் மூலமும் பெண்களுக்கெதிரான போலியான சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிவதற்கு முழுமூச்சோடு ஈடுபட்டுக்கொண்டிருப்பவன். அவனுக்குக் கிடைத்திருக்கும் நவீன பாரதி என்ற பட்டமே போதும் அவன் திறமைகளை சொல்ல.

ராகவன் ஒரு பத்திரிக்கை ஆசிரியர் .ஒருநாள் முஸ்லிம் பெண் ஒருவர் பர்தா அணிந்துகொள்ளாமல் போனதற்கு ஊரே சேர்ந்து கல்லடி கொடுத்து தண்டித்ததை செய்தியாகப் போட்டது மட்டுமில்லாமல் ,கலாச்சாரத்தை மீறியது அந்தப் பெண்ணின் தப்பு என்று  இந்த காட்டுமிராண்டித் 
தனத்துக்கு வக்காலத்து வாங்கி ராகவன்  எழுத , அதைப் பார்த்துக் கொதித்தெழுந்த ஆகாஷின் பேச்சுக்களும் எழுதிய எழுத்துக்களும் ராகவனின் பத்திரிகைக்கு எதிராக ஒட்டுமொத்த வாசகர்களையும் திருப்பி விட 
கடைசியில் அனைத்து வாசகர்களிடம் தன் கருத்துக்கு பொது மன்னிப்புக் கேட்டு தலை குனிய வேண்டிய நிலை ராகவனுக்கு வந்தது. அன்றிலிருந்து ஆகாஷை எப்படியாவது பழி வாங்கியாகனும் என்ற முடிவோடு இருந்த ராகவனுக்கு ,
`சார் , ஆகாஷ் கலியாணம் கட்டியிருப்பது  ஒரு முஸ்லிம் பொண்ணாம்.அந்தப் பொண்ணை அவன் வீட்டை விட்டு 
வெளியே வருவதற்கும் விடுவதில்லையாம்.வீட்டுக்குள்ளேயும் அந்தப் பொண்ணு எப்பவும் பர்தா போட்டுக்கொண்டுதான் இருக்கணும் என்று வேற ஆர்டர் போட்டு அடக்கி வேற  வச்சிருக்கனாம் ` என்று சொன்னதை 
கேட்டு ராகவன் ஆச்சரியப்பட்டதில் ஆச்சரியமில்லை .இதற்காகத்தானே இத்தனைகாலமாக அவன் காத்துக்கொண்டிருந்தான். 
அடுத்தநாள் பத்திரிகையில் `ஆகாஷின் அண்டப் புளுகுகள் `என்ற கேவலமான ஆசிரியர்  தலையங்கத்தில்     ஆகாஷ் தன் மனைவியை வீட்டில் அடக்கி வைத்துக்கொண்டு வெளியிலே பெண்கள் காவலனாக  
 வேடம் போடுவதாக  ராகவன் எழுதி தன் பழியைத் த் தீர்த்துக்கொண்டான் 
இதற்கு ஆகாஷ் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்பதிலிருந்தே இது உண்மையாகத்தான் இருக்கவேண்டும் இந்த விடயம் ஒன்னு போதும் அவனை இந்த துறையில் இருந்தே விரட்டி விடலாம் என்று
நினைத்துகொண்டிருந்தபோது ராகவனின் வீட்டு அழைப்பு மணி அடித்தது.
ராகவன் போய்க் கதவைத் திறக்க  வெளியே ஒரு பொண்ணு பர்தாவுடன் 
`சார் உள்ளே வரலாமா `என்றாள்? 
வாங்க வந்து உட்காருங்க ,நீங்க யாரென்னு அறிந்துகொள்ளலமா? என்றான் ராகவன் .
உள்ளே வந்த பொண்ணு உடனேயே தன் பர்தாவை அகற்ற அவள் முகத்தைப் பார்த்த ராகவன் அதிர்ந்து போனான்.அவள் முகம் முழுக்க எறிந்த தழும்புகளோடு பார்க்க அருவருப்பாகவே இருந்தது. அவள் கண்களில் இருந்து 
சில துளி கண்ணீர் ததும்பிக்கொண்டிருந்தது. 
என்னம்மா என்னாச்சு என்ற ராகவனிடம் 
சார் உங்க பேப்பர்ல ஆகாஷ் பற்றி வந்த கட்டுரையைப்பார்த்தன் , அந்த ஆகாஷின் மனைவி நான்தான் சார் என்றாள்.
ஓ..... ஆச்சரியப்பட்ட ராகவன் என்னாச்சம்மா அந்தப் படுபாவிதான் சூடு வச்சானா என்றான்.

ஐயோ சார் அப்படி சொல்லாதீங்க,அவர் தெய்வம்  நீங்க எழுதியமாதிரி நான் ஒன்னும் முஸ்லிம் பொண்ணு அல்ல தமிழ்ப் பொண்ணுதான். எனக்கு நடந்த ஒரு அக்சிடண்டில முகம் இப்படி எரிஞ்சு போக தற்கொலைக்கு 
முயற்சி செய்து ஆசுபத்திரில இருந்த என்னை பார்க்கவந்த ஆகாஷ்தான் என்னை மனம் முடித்து எனக்கும் ஒரு வாழ்க்கை தந்த கடவுள். நான் தான் அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காம என் முகத்தை எனக்கே பார்க்கப் பிடிக்காததால் இப்படி பர்தா போட்டு வீட்டிலேயே அடங்கிக் கிடக்கிறேன். 
மற்றப்படி ஒரு கணவனாக அவர் எந்தக் குறையும் வைக்கவில்லை. அதுமட்டுமா இதைப் பற்றி வெளியே சொல்லி அவர் புகழ் பரப்பக்கூட இல்லை . அவரைப்பற்றி தயவு செய்து இனி தயவு செய்து பிழையாக எழுதாதீர்கள் என்று கூறிவிட்டு வெளியேறினாள்  .
இப்போது ராகவனின் கண்ணிலே சில துளி கண்ணீர் ததும்பியிருந்தது .

8.05.2012

வயசு

நான்
வயதுக்கு வர முன்
அம்மாவும் அப்பாவும்தான்
என்னைக் கவனித்துக்
கொள்வார்கள்

நான் வயதுக்கு
வந்ததை ஊருக்கே
சொல்லிக் கொண்டாடினார்கள்
சந்தோஷோசமாகவே
இருந்தது

என்னோடு சிறு
வயதிலிருந்தே
விளையாடும் பக்கத்து
வீட்டுப் பையனோடு
பேசிக்கொண்டே பள்ளிக்குப்
போகும்போது
எனக்கு யாரென்றே
தெரியாத ஒருவர்
`பாரு வயசுக்கு வந்த
பொண்ணு வெட்கமேயில்லாமல்
ஒரு பையனோடு
கதைத்துக் கொண்டு
போறதை `என்று
சொல்லிக்கொண்டு
போனார் ....

இப்போது
அம்மா அப்பாவோடு
ஊரும் என்னை
கவனித்துக்
கொள்ளுக்கிறது

இதற்குத்தான்
ஊருக்கே சொன்னார்களோ ?

விரசம்

எனக்கும் அப்படி
வளர வேணுமென்று
சின்னவயதில்
ஆசைப்படுவேன்

வளர வளரத்தான்
அதைப் பாதுகாப்பதின்
கடினம் புரிந்தது

தவறுதலாய்
சிறிதாய் வெளியே
தெரிந்தாலும் போதும்
அப்பாடா
ஆயிரம் விஷமங்கள்

ஆனாலும் இந்த
சமூகம்
`எப்படிக் காட்டித்துப்
போறாள் பாரு`
என்று என்னைத்தான்
திட்டும்
அதைகாகவே அதை
மூடிமறைக்க நிறையவே
கஷ்டப்பட
வேண்டியிருந்தது

அப்படிக் கஷ்டப்பட்டு
மூடி மறைத்ததை
எத்தனையோ பேர்
சுற்றி இருக்கும்
போதே -ஒரு நாள்
வெளியே எடுத்தேன்
பாலுக்காக என்
குழந்தை
அழுதபோது ....

அப்போதும் சில
கண்கள் என்னை
விரசமாகத்தான்
பார்த்தன

அப்போது யாரும்
என்னைத் தப்பாக
சொல்லவில்லை
மாறாக அப்படிப்
பார்த்தவர்களையே
சொன்னது

முதன் முறையாக
பெண்ணாக இருப்பதன்
பெருமையை
இந்தச் சமூகம்
தந்தது எனக்கு